அண்மைக் காலமாக இந்திய நீதிமன்றங்கள் தன்னெழுச்சி பெற்றுக் குற்ற விசாரணைகளில் ஈடுபட்டுத் தண்டனைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக 2ஜி விசாரணை, நிலக்கரி ஊழல் விசாரணை ஆகியவை மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ள சூழலில் நீண்டகாலம் தமிழகத்திலும், பின்னர் கர்நாடகத்திலுமாக நடைபெற்ற தமிழக (முன்னாள்) முதல்வரின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. உடனடியாகத் தண்டனையின் நிறைவேற்றம் சிறையில் அடைக்கப்படும் நிகழ்வாகத் தொடர்ந்திருப்பது பல்வேறு சிந்தனை அலைகளை எழுப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் நீதியின் வெற்றியாக இத் தீர்ப்பைக் குறித்து அவசரம் அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நாளிதழ்களும் சட்டத்தின் ஆட்சியென்றும், ஊழல்களுக்கு எதிரான தீர்ப்பு என்றும் கருத்துரைகளை வெளியிட்டிருக்கின்றன. தினமணி மட்டும் தான் நடுவுநிலை பிறழாத, பக்கச் சார்பு இல்லாத, பெருவாரியான மக்களின் அதிர்ச்சி அலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பொது நோக்கோடு அருமையான தலையங்கத்தை அளித்திருக்கின்றது. கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பு நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் மிகுந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது தெளிவு.
பாதிக்கப்பட்ட கட்சித் தொண்டர்களின் உணர்ச்சி வசப்பட்ட வெளிப்பாடுகள் இயற்கையானதென்றாலும் அதற்கு அப்பால் நின்று குற்றத்தின் தன்மையையும், தண்டனையின் அளவு, அதனை அளித்திருக்கும் முறையை ஆகியவற்றையும் சீர்தூக்கிச் சிந்திப்பது நாகரிகச் சமுதாயத்தின் இன்றியமையாக் கடமைகளில் ஒன்று எனக் கருதலாம். முதன்முதலாக உலகில் சட்டங்களை உருவாக்கியவன் என்று பாபிலோனிய (இன்றைய ஈராக்) அரசன் ஹம்முரபி என்பவனை வரலாறு சுட்டிக் காட்டும். அவனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 18ஆம் நூற்றாண்டு என்பார்கள். அவன்தான் சட்டங்களை உருவாக்கிய மூலவன் என அறியப்படுபவன். 282 சட்ட விதிகளைச் சமைத்து சமைத்து அவற்றைப் பல கருங்கற் பலகைகளில் பதித்து அறிவித்தான் அவன். அப்பலகைகளில் ஒன்று சுட்டுவிரல் போல் வடிவமைக்கப்பட்டு உச்சியில் அவனுடைய உருவத்தையும் கொண்டிருக்கிறது. பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இந்த ஒரு கல் மட்டும் இன்றும் காணக் கிடைக்கிறது. கல்லில் வெட்டியது போலவே அக்கேடியா மொழியில் களிமண் பலகைகளில் இச்சட்டங்கள் கைவினைப்பாட்டோடு அமைக்கப்பட்டிருந்தன. ஹம்முரபியின் ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சட்டங்களில் "கண்ணுக்குக் கண், கைக்குக் கை, உயிருக்கு உயிர்' என்ற தண்டனை முறை எடுத்தரைக்கப்பட்டுள்ளது. ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குத்தினால் அவன் கண்ணைக் குத்துவது தண்டனை. இப்படியே கைக்குக் கை, உயிருக்கு உயிர் என்ற தண்டனை முறையை இந்த ஆதிகாலச் சட்டம் வகுத்துரைக்கிறது. இதற்கு முன்பும் ஊர் என்ற பாபிலோனியாவின் நகரில் நம்ம ஊர் என்ற சட்டமுறை இருந்தது என்று சொல்லப்படுகிறது.
ஹம்முரபிக்குப் பின்னர் உலக சமுதாயத்துக்கு முழுமையாகக் கிடைத்த சட்டங்களைத் தான் மனு ஸ்மிருதி என்கிறோம். கி.மு. 1000 என்று வரலாற்றாசிரியர் கருதும் இச் சட்ட நூலில் சமுதாயத்தின் அடித்தட்டு வர்க்கத்தைப் புழுவும் பூச்சியும் போல் கருதுகிற சட்டங்களும் தண்டனைகளும் அமைந்தன. வருண வேறுபாடுகளுக்கேற்ப நியாயங்களும் வகுக்கப்பட்டதை அந்நூல் தெளிவுபடுத்துகின்றது. தமிழர்களுக்குத் திருக்குறள் தோன்றுமுன் வாழ்வியல் வகுத்த சட்ட நூல்கள் இருந்ததை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், செவி வழியாக வழங்கி வருகிற சில தொன்மங்களைத் தமிழிலக்கியங்கள் முன் வைக்கின்றன. மனுநீதிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி, பொற்கைப் பாண்டியன் கதைகள் நமக்குச் சொல்லுகிற செய்திகளில் உயிர்க் கருணை ஊடு சரடாக ஓடுகிறதென்றாலும், உயிருக்கு உயிர், தசைக்குத் தசை, கைக்குக் கை என்ற கருத்தின் கூறுகள் அன்று மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்ட நீதிமுறையாக இருந்தன என்பதையே இக்கதைகள் புலப்படுத்திக் காட்டுகின்றன. அண்மைக் காலக் கதைகளில்கூடத் திருட்டுக் குற்றங்களுக்கு மாறு கால் மாறு கை வாங்குகிற கடுமையான தண்டனை முறைகள் இருந்ததை அறிய முடிகிறது.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் பின்னரும் குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. மரண தண்டனை ஏற்கப்பட்டிருந்தாலும் மனிதநேயம் மிக்கவர்கள் அத் தண்டனையை அகற்ற வேண்டுமென வலிமையோடு குரல் கொடுத்து வருகின்றனர்.
இத்தனையும் இங்கு கூறப்பட்டதற்குக் காரணம் நீதிமன்றங்களும் நீதியரசர்களும் தம்முன் வரும் வழக்குகளை அணுகும் முறை வெறும் சட்டங்களின் இரக்கமற்ற சிட்டகங்களைத் தாண்டி கருணையும் இயற்கை நீதியும் கலந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான். சட்டங்களையும் வழக்குகளையும் அரசியல் பழிவாங்கும் கருவிகளாகப் பயன்படுத்தும் போக்கு இந்தியாவில் சில காலமாகப் பெருகி வருகின்றது. கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்ததும் அறிஞர்கள் அமைதி காத்தனர்; கலையுலகம் அமைதி காத்தது; மிகுந்த வேகத்தோடு கருத்துச் சொன்னவர்கள் அரசியல் தலைவர்கள்தான். இவ்வளவு ஆத்திரப்பட்டுக் கருத்துரை நல்கியதற்குக் காரணம் மெய்யாகவே ஊழல் எதிர்ப்பு அக்கறையா? அல்லது நீதியை நிலைநாட்டும் தீவிரமா? அல்லது அரசியல் களம் நமக்குச் சாதகமாக மாறி வருகிறது என்கிற கட்டற்ற உற்சாகமா? பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் சில அடிப்படை உண்மைகள் இருக்கலாம். அதிகாரம் சொத்துக்களை அதிகரிக்க உதவியிருக்கலாம். ஆனால் செருப்புகளையும், சேலைகளையும் கூடக் கடைபரப்பி வைத்து, ஆட்சி அதிகாரத்தால் சாட்சிகளை உருவாக்கி, குற்றவியல் வல்லுநர்களைக் குவித்து சதி வலைகளைச் சமைத்து சிறிய அளவு தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை மலையளவு பெருக்கி உருவாக்கப்பட்ட வழக்கு இது என்பதைச் சின்னக் குழந்தை கூடச் சொல்லி விடும். நம்முடைய மாநிலத்தில் அப்பழுக்கற்ற முதல்வர்களாக அடையாளம் காட்ட வேண்டுமானால் ஓமந்தூராரைச் சொல்லலாம். குமாரசாமி ராஜாவைக் கூறலாம் .
ராஜாஜியையும் காமராஜரையும் பேசலாம்; குடியிருந்த வீட்டில் அரசு மேசை நாற்காலிகள் கூடக் கொண்டு வரப்பட வேண்டாம் என்று மறுத்த மனிதர் அண்ணாவை எண்ணிப் பார்க்கலாம். அவர்கள் வேறு யுகத்துப் பிறவிகள். பொதுவுடைமை இயக்கத் தலைவர்களையும், சில தியாகச் செம்மல்களையும் தவிர, மற்றவர்களில் யார் ஊழல் எதிலும் எனக்குத் தொடர்பில்லை; பணம் என் அரசியலைத் தீர்மானிக்காது என்று மார்தட்டிக் கூற வல்லவர்கள்? நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் என்று சராசரித் தமிழன் கேட்கமாட்டானா? தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வெற்றிடத்தை இந்த வழக்கின் தீர்ப்பு உருவாக்கி இருக்கிறது. முந்தைய மத்திய அரசின் காலத்தில் உப்புக்கும் புளிக்குமாக அவர்களிடம் சிறையிலிருக்கும் (முன்னாள்) முதல்வர் போரிட வேண்டியிருந்தது. மின்சாரப் பாதைகளைச் செப்பனிட்டு வடக்கேயிருந்து மின்சாரம் கொண்டு வரும் இன்றியமையாப் பணியில் கூட இடையூறுகள் விளைவிக்கப்பட்டன. விளங்காத காரணங்களால் நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன மறுக்கப்பட்டன. ஏழைகளின் அடுப்பெரிக்கும் மண்ணெண்ணெய் கூட மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது. காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு சிக்கல் என மேலும் மேலும் முடிச்சுகள் போடப்பட்டன. இலங்கைத் தமிழன் ரத்தத்திலும் கண்ணீரிலும் ஊறித் தொலைந்தான். இத்தகைய இக்கட்டான தருணத்தில் தமிழகத்தில் போராளித் தன்மைமிக்க ஒரு தலைமை தேவைப்பட்டது. மக்கள் சிறையிலிருக்கும் (முன்னாள்) முதல்வரைத் தெரிவு செய்தனர். அந்தத் தலைமையின் ஆளுமை மத்திய அரசை மட்டுமல்லாது, கர்நாடக, கேரள அரசுகளையும் தமிழகப் பிரச்சினைகளில் நல்ல தீர்வு காண நெருக்கியது. உச்சநீதிமன்றத்தில் நியாயமான முடிவைப் பெறவும் காரணமானது.
தேர்தல் களத்தில் அசைக்க முடியாத வெற்றிகளை அடுக்கடுக்காகப் பெற்றதால் தமிழக அரசியலில் எல்லா அணிகளும் ஒன்று சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாத அவலத்தைச் சந்தித்தன. இந்த நிலையில் ராஜபக்ஷவும் குதூகலிக்கும் வண்ணம் கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்ததும், நம் அரசியல் தலைவர்கள் சூதில் பாஞ்சாலியை வென்றபோது, சகுனியை அரவணைத்துக் கொண்ட துரியோதனன் போல, "அன்று நகைத்தாளடா என் மாமனே அவளை என் ஆளாக்கினாய் என்றும் மறவேனடா உயிர் மாமனே என்ன கைம்மாறு செய்வேன்?' பாரதி என்று ஆர்த்து முழங்கத் தலைப்பட்டிருப்பது மிகுந்த தலைகுனிவாக இருக்கிறது. பணத்தால் தேர்தலில் வென்றுவிட்டதாக ஒரு பஞ்சாங்கப் பழங்கதையைப் பணம் கொடுத்தும் வெற்றி பெறாதவர்கள் சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள்."திருமங்கலம்' கோட்பாட்டைத் தேர்தலில் உருவாக்கியவர்களே இப்படிச் சொல்லிச் சமாதானம் செய்து கொள்கிறார்கள். கர்நாடக முதலமைச்சர் "நாங்கள் ஒன்றும் செய்யவில்லை; எல்லாம் நீதிமன்றத்தின் சுதந்திரமான தீர்ப்பு' என்கிறார். இதைக் கேட்கிறபோது "எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதை ஞாபகம் வராமல் போகாது. கர்நாடகத்துக்கு மட்டுமல்ல அண்டை மாநிலங்களுக்கும் நம் அரசியல் இயக்கங்களைப் போலவே இந்தத் தீர்ப்பின் முடிவில் அக்கறையும் ஆர்வமும் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. மேல்முறையீடுகள் இருக்கின்றன. அவற்றில் வெற்றி கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால் ஒன்று மட்டும் சராசரித் தமிழனின் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும்.அறுபத்தாறு கோடி ரூபாய் அளவுக்கு மீறிச் சம்பாதித்தார்கள் என்ற குற்றம் சாட்டி, நூறு கோடி ரூபாய் அபராதம், நான்கு ஆண்டு சிறை, ஆறாண்டு தேர்தல் தடை என்ற கொடூரமான தீர்ப்பை ஒரு அரசியல் தலைவரின் எதிர்கால அழித்தொழிப்பை நல்ல உள்ளங்கள் நிச்சயமாக ஏற்காது. ஊழல் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தண்டனை, டிராட்ஸ்கியின் படுகொலை போல் அரசியல் பழிவாங்கலாகத் தாழ்ந்து போகலாகாது. இந்தத் தீர்ப்பின் நெடிய வரலாற்றுப் பின்புலத்தில் அரசியல் நிர்ப்பந்தங்கள் இல்லையென்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே இருக்கும்.
No comments:
Post a Comment