நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை ஏற்படுத்திய 2ஆம் குடியரசு அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு அதிகளவிலான அதிகாரங்களைக் குவித்துள்ளது. முதலாம் குடியரசு யாப்பில் பிரதமர் பெற்றிருந்த உண்மை அதிகாரங்களையும் ஜனாதிபதி கொண்டிருந்த பெயரளவு அதிகாரங்களையும் ஒருங்கே கொண்டதாக 2ஆம் குடியரசு யாப்பின் ஜனாதிபதிப் பதவி விளங்குகின்றது. நிறைவேற்றுத்துறையில் மட்டுமன்றி சட்ட மற்றும் நீதித்துறைகளிலும் ஜனாதிபதி பெற்றுள்ள அதிகாரங்கள் உலகில் ஜனாதிபதி ஆட்சி முறைக்குச் சிறப்பித்துக் கூறப்படும் அமெரிக்க ஜனாதிபதியை விடவும் அதிகமென விமர்சிக்கப்படுகின்றது. யாப்பின் முதலாம் அத்தியாயத்தின் 4(ஆ) பிரிவு "இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்றுத்துறை அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்படும் குடியரசு ஜனாதிபதியால் பிரயோகிக்கப்பட வேண்டும்' என்கிறது. யாப்பின் 30(1) பிரிவு "இலங்கைக் குடியரசுக்கு ஜனாதிபதி ஒருவர் இருக்க வேண்டும் என்பதுடன் அவர் அரசின் தலைவரும் நிறைவேற்றுத்துறைத் தலைவரும் அரசாங்கத்தின் தலைவரும் ஆவார்' எனக் கூறுகின்றது. பாராளுமன்றத்தைக் கூட்டல், கலைத்தல், அமர்வை இடைநிறுத்தல் என்பன ஜனாதிபதிக்குரிய பிரதான சட்டத்துறை அதிகாரங்களாகும். இது குறித்து அரசியலமைப்பின் 70(1) பிரிவு தெளிவாகக் கூறுகிறது. பொதுத் தேர்தல் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர் ஜனாதிபதி எந்நேரத்திலும் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம். அத்துடன் 2 மாதங்கள் வரை பாராளுமன்ற அமர்வை இடைநிறுத்தி வைக்கலாம். மேலும் கலைக்கப்பட்ட அல்லது அமர்வு இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றத்தை (3 நாட்களுக்குப் பின்னர்) முற்கூட்டியே கூட்டலாம். 32(3) பிரிவின்படி ஜனாதிபதி ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு தடவை பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும். இது ஜனாதிபதியை பாராளுமன்றத்திற்கு கட்டுப்பாடுடையவர் போல காட்டப்படினும் இதன்மூலம் ஜனாதிபதி பாராளுமன்றம் தொடர்பான விடயங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும். 32(4) பிரிவின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவும் செய்திகளை அனுப்பவும் உரிமையுடையவர். 33 பிரிவின்படி பாராளுமன்றத்தில் சிம்மாசனப் பிரசங்கம் நிகழ்த்துதல், ஒவ்வொரு அமர்வின் ஆரம்பத்திலும் அரச கொள்கைக் கூற்றை வாசித்தல் என்பன ஜனாதிபதிக்குரிய கடமைகளாகும்.
அத்துடன் வாக்களித்தல் தவிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள எல்லா சிறப்புரிமைகள், விடுபாட்டுரிமைகள், தத்துவங்கள் என்பன ஜனாதிபதிக்குண்டு. மேலும் பாராளுமன்றத்தின் அல்லது அதன் உறுப்பினர்களின் ஏதேனும் சிறப்புரிமைகளை மீறியமைக்காக அவர் வகை சொல்லவும் தேவையில்லை. அரசியலமைப்பின் 13ஆம் அத்தியாயத்தில் "மக்கள் தீர்ப்பு' மூலம் ஜனாதிபதி சட்ட ஆக்க விடயங்களை வழிநடத்தும் அதிகாரங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. 85(1) பிரிவின்படி அமைச்சரவை விரும்புகின்ற அல்லது உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ள ஒரு சட்ட மூலத்தை ஜனாதிபதி மக்கள் தீர்ப்புக்கு விட வேண்டும். அத்துடன் 86 பிரிவின்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனாதிபதி கருதுகின்ற ஒரு விடயத்தையும் மக்கள் தீர்ப்புக்கு விடும் அதிகாரம் அவருக்குண்டு. மேலும் 85(2) பிரிவின்படி பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட ஏதேனும் சட்டமூலத்தை (அரசியலமைப்பு அல்லது அதன் ஏதேனும் ஏற்பாட்டைத் திருத்துதல், மாற்றுதல், நீக்குதல், அரசியலமைப்பில் சேர்த்தல் தவிர்ந்த) தனது தற்றுணிபின் பேரில் மக்கள் தீர்ப்புக்கென ஜனாதிபதி சமர்ப்பிக்கலாம். ஜனாதிபதியின் கையொப்பத்துடன் மக்கள் தீர்ப்பு அமுலுக்கு வரும். நிறைவேற்றுத்துறையில் ஜனாதிபதி மிகக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டுள்ளார். 8 ஆம் அத்தியாயம் நாட்டு நிருவாகத்துக்குப் பொறுப்பான அமைச்சரவை பற்றிக் கூறுகின்றது. தமது கருத்துப்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறக்கூடியவரை பிரதமராக நியமித்தல், அவசியமானால் பிரதமரைக் கலந்தாலோசித்து பாராளுமன்றத்திலிருந்து தேவையான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோரை நியமித்தல், அவர்களின் அமைச்சுப் பதவியை மாற்றுதல், பதவியைக் குறைத்தல், பதவியிலிருந்து நீக்குதல், ஒப்படைக்கப்படாத தான் விரும்புகின்ற அமைச்சுப் பொறுப்புக்களைத் தாமே வைத்திருத்தல் என்பன ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களாகும்.
மேலும் 43(2) பிரிவின்படி ஜனாதிபதி அமைச்சரவையின் ஓர் உறுப்பினராக இருப்பதுடன் அமைச்சரவையின் தலைவருமாவார். அத்துடன் அமைச்சரவை கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தொடர்ந்தும் பதவி வகிப்பார். 42 பிரிவின்படி ஜனாதிபதியும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்பு வகிக்கக் கடமைப்பட்டிருப்பினும் அவர் பெரும்பாலும் பாராளுமன்றத்தின் வழமையான சட்ட ஆக்க நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாததால் அப்பொறுப்பு எத்தகையது என்பது குறித்து தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. சில உயர்தர பதவி நியமனங் களையும் ஜனாதிபதி மேற்கொள்கின்றார். அவற்றுள் அரச தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பூரண அதிகாரம் பெற்ற அரச பிரதிநிதிகள், ஏனைய இராஜதந்திர முகவர்கள் போன்றோரை ஏற்று அங்கீகரித்தல், நியமித்து பொறுப்பளித்தல், சிறப்புமிக்க சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்தல், மாகாண ஆளுநர்களை நியமித்தல், பொலிஸ் மா அதிபரை நியமித்தல் என்பன ஜனாதிபதியின் கடமைகளில் குறிப்பிடத்தக்கன. குடியரசின் பொது இலச்சினையை வைத்திருத்தல், அதனைப் பயன்படுத்தல், காணி நன்கொடை வழங்குதல், போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்தல், சம்பிரதாய விழாக்களில் கலந்து கொள்ளல், சர்வதேச பிராந்திய மாநாடுகளிலும் அமைப்புகளிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தல் போன்ற கடமைகளையும் ஜனாதிபதி மேற்கொள்கிறார். குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், தண்டனைக் காலத்தை தள்ளி வைத்தல், தண்டனைகளை குறைத்தல், பாராளுமன்றத்தின் சிபாரிசில் உச்ச நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கல், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசில் மேல் நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கல் போன்ற நீதித்துறை அதிகாரங்களையும் ஜனாதிபதி மேற்கொள்கின்றார்.
மேலும் அரசியலமைப்புக்கான 18 ஆம் திருத்தப்படி பாராளுமன்றப் பேரவையின் அவதானிப்பில் ஜனாதிபதி சில உயர்தர அரச பதவிகளுக்கான ஆட்களையும் சில மிக முக்கிய ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களையும் அதன் தலைவர்களையும் நியமனம் செய்கிறார். பாராளுமன்றப் பேரவையின் அவதானிப்பு எப்படி இருந்த போதிலும் அந்நியமனங்களை ஜனாதிபதி தம் இஷ்டம்போல நியமித்துக் கொள்வதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. தேர்தல் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு ஆகிவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பிரதம நீதியரசர், ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், ஏனைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், நீதிச்சேவை ஆணைக்குழுவின் (தவிசாளர் தவிர்ந்த) உறுப்பினர்கள், சட்ட மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்), பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய பதவி நிலைகள் ஜனாதிபதியின் இந்நியமனத்திற்குள் அடங்கும். மேலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சில அதிகாரங்களையும் நடைமுறையில் ஜனாதிபதி பிரயோகிக்கிறார். அதாவது ஜனாதிபதியின் கட்சி மாகாண சபையொன்றில் பெரும்பான்மை பெற்றிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அம்மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களை ஜனாதிபதி தீர்மானிக்கிறார். இவ்விதமே உள்ளூராட்சி சபையொன்றில் ஜனாதிபதி சார்ந்த கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கின்ற போது ஜனாதிபதியே அவ்வுள்ளூராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் உப தலைவரைத் தீர்மானிக்கிறார். மேலும் மாகாண சபையொன்றை அதன் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னர் கலைக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை அரசியலமைப்பு அதன் முதலமைச்சருக்கு வழங்கியுள்ள போதிலும் ஜனாதிபதியின் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள மாகாண சபை விடயத்தில் அதனைக் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொள்கிறார். அரசியலமைப்பின் 155 பிரிவின் பொதுமக்கள் பாதுகாப்பின் கீழ் ஜனாதிபதி அவசரகால சட்டங்களை இயற்றலாம். நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பைத் தவிர்ந்த எச்சட்டத்தையும் நீக்க, திருத்த, இடைநிறுத்த அதிகாரங்கொண்டுள்ளார். ஜனாதிபதி பிறப்பிக்கின்ற அவசரகால நிலைக்கு 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கினால் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு அமுலிலிருக்கும். பின்னர் பாராளுமன்றம் விரும்பினால் ஒவ்வொரு மாதமும் நீடித்துக் கொள்ளலாம்.
எனினும் 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் அனுமதி வழங்காவிடின் 14 நாட்களின் பின்னர் ஜனாதிபதியின் பிரகடனம் காலாவதியாகிவிடும். அரசியலமைப்பின் 129(1) பிரிவின்படி ஜனாதிபதி ஒரு விடயம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனை கேட்கலாம். இதன்படி 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி கேட்ட ஆலோசனைக்கிணங்க பாதுகாப்பு அதிகாரங்கள் ஜனாதிபதியினால் மாத்திரமே பிரயோகிக்கப்பட முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் ஜனாதிபதியின் 2ஆவது பதவிக்காலம் 2010.11.19 ஆம் திகதி ஆரம்பமாவதாக உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருந்தது. மேலும் ஜனாதிபதி குறித்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைத்திருந்தால் புதிய பாராளுமன்றம் கூடும் தினத்திலிருந்து 3 மாதங்களுக்கு பொதுச் சேவைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டு நிதியிலிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரம் கொண்டுள்ளார் (150/3). அத்துடன் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு திகதி நிர்ணயித்திருந்தால் அத்தேர்தலுக்குத் தேவையான செலவுத் தொகையை திரட்டு நிதியிலிருந்து வழங்கலாம் (150/4). முத்துறைகளிலும் பல அதிகாரங்களைப் பிரயோகிக்கும் ஜனாதிபதி; தனியான தேர்தலொன்றின் மூலம் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார். 6 ஆண்டுகள் பதவி வகிக்கும் ஜனாதிபதி எத்தனை தடவைகளும் தெரிவு செய்யப்படலாம். ஜனாதிபதியின் 6 ஆண்டுகள் பதவிக் காலத்தை மாற்றம் செய்வதாயின், பாராளுமன்றத்தில் 2/3 விசேட பெரும்பான்மையுடன் ஒரு மக்கள் தீர்ப்பும் பெறப்பட வேண்டும். இவை தவிர பல பதவிக்காலப் பாதுகாப்புகளும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன.
யாப்பின் 35(1) பிரிவின்படி ஜனாதிபதி அவரது பதவிக் காலத்தில் செய்த, செய்யாது விட்ட எந்தவொரு விடயத்திற்காகவும் அவருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாததுடன் வழக்கு நடவடிக்கைகள் முன் கொண்டு செல்லப்படவும் முடியாது. ஜனாதிபதியின் சம்பளம், படிகள், ஓய்வூதியம் என்பன அவர் முன்னர் வகித்த பதவியிலுள்ளதை விட அதிகமாக இருக்கும்படி பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் அவை திரட்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டும். மேலும் அவை கூட்டப்படலாமே தவிர குறைக்கப்பட முடியாது என அரசியலமைப்பின் 36(1),(3),(4) பிரிவுகள் கூறுகின்றன. இதன்படி இலங்கையின் ஜனாதிபதிப் பதவி மிகுந்த முக்கியத்துவமுடையதாகவும் நாட்டின் சகல விடயங்களிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாகவும் விளங்குகின்றது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதியுச்ச அதிகாரங்கள் நாட்டில் அனைத்தாண்மை ஆட்சியைக் கொண்டு நடத்தக்கூடிய வகையில் அவரை ஒரு யாப்புசார் சர்வாதிகாரி என்ற நிலையில் அமர்த்தியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment