Wednesday, September 10, 2014


இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாகக் கடந்த காலங்களில் கிடைத்த வாய்ப்புகளைத் தவற விட்டதையிட்டுக் கவலை தெரிவிக்கும் வகையில் சம்பந்தன் அண்மையில் பேசியிருந்தார். சந்தர்ப்பங்களைத் தவற விட்டதில் சம்பந்தனுக்கும் பங்கு உண்டு. அவ்வாறான சில தீர்மானங்களில் வரும் ஒரு பங்காளி. கிடைத்த சந்தர்ப்பங்களை உணர்ச்சிப் பேச்சுக்கள் மூலமும் வெற்றுக் கோஷங்கள் மூலமும் நிராகரித்த அன்றைய அரசியல் எவ்வளவு தவறானது என்பதை இன்று சம்பந்தன் உணர்வது போல் தெரிகின்றது. முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் இப்படியான கருத்தைச் சம்பந்தன் வெளியிட்டிருக்கின்றார். பல சந்தர்ப்பங்களை நாங்கள் இழந்துவிட்டோம் என்று அப்போது அவர் கூறியதற்கும் கூட்டமைப்புக்குள்ளிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இப்படியான கருத்துகளைத் தெரிவிப்பது விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் என்று எதிர்ப்பாளர்கள் கூறினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயல்பான குணாம்சம் என்று இந்த எதிர்ப்பைக் கூறலாம். தமிழ் அரசியலுக்குத் தலைமை தாங்கும் அரசியல் கட்சியிடம் இருக்க வேண்டிய பிரதான அம்சம் கூட்டமைப்பில் இல்லை. இனப் பிரச்சினையின் தீர்வு பற்றிய ஏகமனதான நிலைப்பாடு கூட்டமைப்பில் இல்லை. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்போரையும் தனிநாடு தான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ளோரையும் தீர்வு பற்றிய எந்த நிலைப்பாடும் இல்லாமல் ஏதேதோவெல்லாம் சொல்லிக் காலங் கடத்துவோரையும் கொண்ட கூட்டாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. 

இவ்வாறாக வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டவர்களின் கூட்டு என்பதாலேயே சம்பந்தன் இழந்த சந்தர்ப்பங்கள் பற்றிப் பேசியபோது எதிர்ப்பு எழுந்தது. இப்போது தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாட்டு வேளையில் சம்பந்தன் மீண்டும் அதே கருத்தைக் கூறியிருக்கின்றனர். உலகின் எந்தவொரு நாடும் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்றும் சம்பந்தன் சொல்கிறார். அதாவது ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்பதையே சம்பந்தன் கூற முற்படுகின்றார். இக்கருத்தைச் சீரணிக்க முடியாத தலைவர்கள் தமிழரசுக் கட்சியிலும் இருக்கின்றார்கள் என்பது சம்பந்தனுக்குத் தெரியும். அவ்வாறிருக்க மீண்டும் அதே கருத்தை முன்னரிலும் பார்க்க வலுவுடன் அவர் முன்வைப்பதற்கான காரணம் என்ன? தனது கருத்து  உட்கட்சி மட்டத்தில் அங்கீகாரம் பெறும் நிலை முன்னரிலும் பார்க்க இப்போது வலுவானதாக இருக்கின்றதென அவர் கருதுகின்றாரா? அல்லது கடசிக்குள்ளே ஒரு கருத்துப் போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றாரா? சம்பந்தன் கூறியது போல் பல சந்தர்ப்பங்கள் தமிழ்த் தலைவர்களுக்குக் கிடைத்தன. இச்சந்தர்ப்பங்களை நிராகரித்ததால் தலைவர்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. கிடைத்த சந்தர்ப்பங்களிலும் பார்க்க தீவிரமான ஒரு நிலைப்பாட்டை உணர்ச்சிகரமான கோஷங்களுக்கூடாக வலியுறுத்தியதன் மூலம் அவர்கள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆனால் இந்த நிராகரிப்புகள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மோசமான பாதைக்குத் திருப்பியதால் மக்கள் இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்ததோடு இனப்பிரச்சினையின் தீர்வும் சிக்கலாகியது. பண்டா செல்வா ஒப்பந்தத்தின் பிரதான சரத்துகளை நடைமுறைக்குக் கொண்டவரக் கிடைத்த சந்தர்ப்பங்களைக் கைநழுவ விட்டதும் சந்திரிகா குமாரதுங்கவின் அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளை நிராகரித்ததும் தமிழ் அரசியல் வரலாற்றில் தலைவர்கள் விட்ட பாரிய தவறுகள். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைச் சிக்கலாக்கும் தவறுகள் முன்னைய அதே பாணியில் இப்போதும் தொடர்கின்றன. 

ஜெனீவா மகாநாடு தொடர்பாகவும் சர்வதேச விசாரணை தொடர்பாகவும் உணர்ச்சியூட்டும் பேச்சுகளையும் வெற்றுக் கோஷங்களையும் இன்றும் கேட்க முடிகின்றது. யுத்தத்தின்போது தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. போர்க்குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையைவிடக் கூடுதலான அக்கறை தமிழ் மக்களுடைய பிரதான பிரச்சினைகளின் தீர்வில் இருக்க வேண்டியது அவசியம். ஜெனீவாத் தீர்மானத்துக்கு அமைவாக சர்வதேச விசாரணை நடந்து அரசாங்கம் குற்றவாளியாகக் காணப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். அதனால் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்கோ வேறு முக்கிய பிரச்சினைகளுக்கோ தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஜெனீவாத் தீர்மானத்தின் சூத்திரதாரிகளான மேற்கத்திய நாடுகள் வேறொரு தளத்தில் நின்றே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுகின்றன. அதில் இனப் பிரச்சினையோ தமிழ் மக்களின் மற்றைய பிரச்சினைகளோ சம்பந்தப்படவில்லை. அரசாங்கத்தைத் தண்டிப்பது அல்லது ஆட்சி மாற்றம் என்ற தங்கள் இலக்கு நிறைவேறினால் மேற்கத்திய நாடுகள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளின் பக்கம் திரும்பப் போவதில்லை. சர்வதேச விசாரணையின் முடிவு இலங்கை அரசாங்கத்துக்குப் பாதகமாக அமைவது இனப்பிரச்சினையின் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர். எவ்வளவுதான் சர்வதேச அழுத்தம் இருந்தாலும் அரசியல் தீர்வில் முக்கியமான பாத்திரம் வகிப்பவர்கள் சிங்கள மக்கள், சர்வசன வாக்கெடுப்பில் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்திலேயே அரசியல் தீர்வு நடைமுறைக்கு வர முடியும். அதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவசியம். மேற்கத்திய நாடுகளின் கூட்டு முயற்சி சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிக்கும் உணர்வலை அரசியல் தீர்வுக்குச்  சாதகமானதாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. 

No comments:

Post a Comment