ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பானுக்குச் சென்று வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பல ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுத் திரும்பி இருக்கிறார். வாராணாசி நகரத்தை மேம்படுத்துவது, புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது, ரூ.2.10 இலட்சம் கோடி நிதியுதவி, பாதுகாப்புத் துறையில் பரஸ்பர உதவி என்று தொடங்கி, ஜப்பானிடமிருந்து பல ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைப் பெற்றிருக்கிறார் பிரதமர். நீண்டகாலமாக முடிவு காணப்படாத இந்திய ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இந்த விஜயத்திலும் தீர்வு காணப்படவில்லை என்பதுதான் ஒரே குறை. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நல்லுறவு தனித்துவம் வாய்ந்தது. புத்த மதம் ஒரு மிகப்பெரிய பந்தத்தை ஏற்படுத்துகிறது என்றால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கும் அவரது இந்திய தேசிய ராணுவத்துக்கும் ஜப்பான் அளித்த ஆதரவு, சுதந்திரத்திற்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஏற்படுத்தி விட்டிருந்தது.
பண்டிதர் ஜவஹர்லால் நேருவுக்கும் அன்றைய ஜப்பானியப் பிரதமர் நொபுசுகே கிஷிக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவும், 1957இல் அவரது இந்திய விஜயமும் தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் ஜப்பானிய ஒத்துழைப்பை உறுதிப்படுத்தின. எழுபதுகளில் இந்திய ஜப்பானிய உறவு சற்றுத் தொய்வை எதிர்கொண்டது என்றாலும், 1980 முதல் 2014 வரையில் எட்டு பிரதமர் விஜயங்கள் உள்ளிட்ட 57 உயர்நிலை ஜப்பானியக் குழுக்கள் இந்திய விஜயத்தை மேற்கொண்டன. அதேபோல, 10 பிரதமர்கள் உள்ளிட்ட 87 உயர்நிலை இந்தியக் குழுக்கள் ஜப்பானுக்குச் சென்று இருதரப்பு ஒப்பந்தங்கள் பலவற்றில் கையொப்பமிட்டிருக்கின்றன. வி.பி. சிங், சந்திரசேகர், தேவெ கௌட, குஜ்ரால் தவிர்த்து, 1980 முதல் எல்லா இந்தியப் பிரதமர்களும் ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே, ஜப்பானிய உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வந்திருப்பது புலப்படும். இந்தியா, ஜப்பான் இரண்டு நாடுகளுக்குமே சீனாவின் வளர்ச்சியும், மேலாதிக்கமும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும்கூட, அதேநேரத்தில் பொருளாதார நிர்பந்தங்கள் சீனாவுடனான உறவைப் பலவீனப்படுத்த முடியாத இக்கட்டிலும் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியாவைவிட இந்த விஷயத்தில் ஜப்பான்தான் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொள்கிறது.
சீனாவின் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்திற்கு ஜப்பான் மறைமுகக் காரணமாக இருக்கிறது என்கிற உண்மை பலருக்கும் தெரியாது. ஏறத்தாழ 20,000க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவில் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவிலான ஜப்பானின் 3 இலட்சம் கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டின் கணிசமான பகுதி சீனாவில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக ஜப்பான் சீனாவிலான தனது முதலீட்டைக் குறைத்து வருகிறது என்றாலும்கூட, சீனாவைப் பகைத்துக் கொள்வது ஜப்பானியப் பொருளாதாரத்தைத் தகர்த்துவிடக் கூடும் என்பது இரு தரப்பினருக்கும் நன்றாகவே தெரியும். பிரதமர் நரேந்திர மோடி எப்படி இந்தியாவைப் பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் தெற்கு ஆசியாவில் பலம் வாய்ந்த நாடாக மாற்ற விரும்புகிறாரோ, அதேபோல, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும், ஜப்பானின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதுடன் அதன் இராணுவ பலத்தையும் உறுதிப்படுத்த விரும்புகிறார். இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் தடையாக இருப்பது சீனாதான். இந்தியாவும் ஜப்பானும் நெருக்கமடைவதை சீனா நிச்சயமாகக் கவலையுடன் கவனிக்கும். ஆசியாவின் வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழையும் சீனா, தன்னுடைய பொருளாதார பலத்தால் எல்லா ஆசிய நாடுகளையும் தனது ஆதரவு வட்டத்திற்குள் இழுத்துக் கொள்ள விரும்புகிறது. அதனால் இந்தியா, ஜப்பான் போன்ற பெரிய பொருளாதாரங்கள் இணைவதை சீனா நிச்சயமாகத் தடுத்து நிறுத்த முற்படும். ஏற்கெனவே, இந்த இரண்டு நாடுகளுடனும் எல்லைப் பிரச்சினை இருப்பதால் சீனாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடியின் ஜப்பான் விஜயம் கவலையளிப்பதாகத்தான் இருக்கும்.
ஜப்பானைத் தொடர்ந்து, வியட்நாம், இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா நேசக்கரம் நீட்ட முற்பட்டிருக்கிறது. விரைவிலேயே, பிரதமர் நரேந்திர மோடி அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்களையும் சந்திக்க இருக்கிறார். ஏனைய நாடுகளின் ராஜதந்திர வலையில், தான் விழுந்து விடாமல், அவர்களிடமிருந்து இந்தியாவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி அடங்கி இருக்கிறது.
No comments:
Post a Comment