இந்தியாவையும் சர்வதேச விசாரணையையும் ஏகநேரத்தில் எதிர்ப்பதால் அரசாங்கதிற்கு பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி கலாநிதி. தயான் ஜெயதிலக எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தப்போக்கு நீடிக்குமானால் முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜெயவர்த்தன அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளே உருவெடுக்கும் அபாயமிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்குழுவை நியமித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியிருந்தார். இருந்த போதும் சர்வதேச விசாரணைக்குழு நாட்டிற்குள் வருகை தருவதற்கு அனுமதியளிக்க முடியாது என அறிவித்துள்ள அரசாங்கம் விசாரணைக்கான ஒத்துழைப்புக்களை வழங்க முடியாது என பகிரங்கமாக தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராகவும் அரசின் பங்காளிகள் கடுமையான விமர்சனத்தை தெரிவிப்பதோடு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கலாநிதி. தயான் ஜெயதிலக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் 26ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கின்றது. அத்துடன் கடந்த கூட்டத்தொடரில் ஏடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை விசாரணைக்குழுவை நியமித்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அரசாங்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தபோதும் அதனை அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு எதிர்மறையான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.மறுபக்கத்தில் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தையும் தமிழக அரசாங்கத்தையும் இலங்கை அரசின் பங்காளிகளாகவிருக்கும் கடும்போக்குடையவர்கள் ஒன்றாக சேர்ந்து விமர்சிக்கின்றார்கள். அவைக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். ஜனநாயக நாடுகள் என்ற வகையில் தமது கருத்துக்களை வெயிடுவதற்கு உரிமைகள் உள்ளன. அதற்காக ஏகநேரத்தில் இந்தியாவினையும் சர்வதேச விசாரணையையும் எதிர்ப்பதானது அரசிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதி மொழிகளுக்கு அமைவாக முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பதிலாக பின்னோக்கிச் செல்லும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுவருகின்றது. மேலும் நாட்டின் இறைமையை முன்னிலைப்படுத்தி சர்வதேச விசாரணையை எதிர்த்துவரும் அரசாங்கமானது அதனை எதிர்கொள்வதற்கு அயல் நாடு என்ற வகையில் இந்தியாவின் பூரணமான ஆதரவைப் பெறுவது மிகமிக அவசியமானதொன்றாகும்.அவ்வாறிருக்கையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மோடிதலைமையிலான அரசாங்கம் வலியுறுத்தியிருக்கின்றது. ஆனால் அதற்கு அரசாங்கம் தயாரகவில்லை. இவ்வாறான நிலையில் இந்தியாவின் ஆதரவு கிடைப்பது என்பது மிகவும் கடினமானதாகும். அதுமட்டுமன்றி அரசின் பங்காளிகளாவிருக்கும் கடும்போக்குடைய சக்திகள் 13ஆவது திருத்தத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் தங்களது வாக்குவங்கியை பாதுகாப்பதற்காக இந்தியா மற்றும் தமிழக அரசாங்கங்களை விமர்சிப்பதுடன் போராட்டங்களையும் நடத்துகின்றனர்.
இவ்வராறன செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்துவது முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. அதனைவிடுத்து தொடச்சியாக கண்மூடித்தனமான அரசின் எதிர்ப்புக்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலைமைகளையே ஏற்படுத்தும் என்பது நிச்சயம் எனவே 13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படத்தி நல்லிணக்கத்திற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதால் இந்தியாவின் பூரணமான ஆதரவைப் பெறமுடியும் என்பதுடன் சர்வதேசத்தையும் இராதந்திரமாக கையாள முடியும் என்றார்.
No comments:
Post a Comment