Wednesday, June 4, 2014


யுத்தம் முடிவுற்ற ஐந்தாவது ஆண்டு நிறைவினை அரசாங்கம் "வெற்றி நாள்' கொண்டாட்டமாக  மாத்தறையில் 18.05.2014 இல் கொண்டாடியது. ஆனால் எதிர் புறத்தினருக்கு அவ்வாறான கொண்டாட்டங்கள் தொடர்பில் எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியில்லை. வட மாகாணத்தில் யுத்தம் நிறைவுற்றது தொடர்பில் எதுவித பொது நினைவு நிகழ்ச்சிகளும் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் சார்பில் பேசிய இராணுவப் பேச்சாளர் "தனிப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் யுத்தத்தின் போது இறந்ததற்கான சமய ரீதியான கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம். ஆனால் பொது நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தக்கூடாது' என அறிவித்தார்.  அரசாங்கத்தின் கொண்டாட்டங்களிலும் வெற்றி அணி வகுப்பிலும் தேசிய நல்லிணக்கம் நாட்டில் தோல்வியுற்றமை  நன்கு புலனாகக் கூடியதாகியிருக்கும். இவற்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதன் பின்னர் ஐந்தாண்டுகள் முடிந்துள்ள பின்னரும் அந்த வெற்றி ஏற்பட்டுள்ளதாக மட்டுமே அதாவது விடுதலைப் புலிகளை வென்றதொன்றே ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கம் நாட்டின் வட பகுதியையும் தென் பகுதியையும் நடத்துகின்ற முறையில் காணப்படும் ஏற்றத்தாழ்வான நடத்தை காரணமாக யுத்தம் முடிவுற்றதன் பின்னரும் கூட இன மற்றும் அரசியல் முரண்பாடுகள் நாட்டில் தொடர்ந்தும் நிலவி வருவதாகவே தோன்றுகின்றது. நாடு என்னவோ புவியியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் ஐக்கியப்படுத்தப்பட்டு விட்டதாகக் காணப்படுகின்ற போதிலும் அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் பிளவுபட்டதான ஒரு முரண்பாடான நிலையிலேயே இருந்து வருகின்றது. கடந்த சில வாரங்களில் அரசாங்கத்திற்கு ஒன்றே உள்ள சில தரப்பினரிடமிருந்தும் கூட சில எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

அரசாங்கத்திற்குள் அதிகாரம் மையங் கொண்டிருப்பதன் காரணமாக பல வருடங்களாக அங்கே அதிருப்தி நிலவுகிறது எனக்  கூறப்பட்டு வந்த கருத்தானது ஒரு வகையான வெளிப்பாடே இந்தப் பிளவாக இருக்கலாம். இப்போது படிப்படியாக அதிகரித்து வரும் அரசாங்கத்திற்குள்ளேயான எதிர்ப்பு தொடர்ந்தும் வளர்ந்து செல்லுமேயானால் பிளவுபடுத்தும் சக்திகள் ஒரு நிலையில் உச்சமடைந்து அரசாங்கத்தின் கூட்டு அமைப்பினை தகர்க்கும் அளவுக்கு அது வலிமையடைந்து விடலாம். முஸ்லிம் சமூகம் அடுத்த வருட ஆரம்பத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கமும் எதிர்க் கட்சியும் தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்களது ஆதரவினைப் பெற்றுக் கொள்ள பெரும் போட்டியுடன் முயன்று வருகின்றன. மாத்தறையில் நடைபெற்ற வெற்றி விழா கொண்டாட்டங்களின் பிரதான நோக்கம் மக்களிடம் அரசாங்கம் தான் ஈட்டிய முக்கிய சாதனையாக யுத்த வெற்றியினை நினைவு படுத்துவதன் மூலம் எதிர்வரும் தேர்தல் கால சவால்களை முறியடிக்க மக்களிடம் ஆதரவு கோருவதாக இருக்கலாம். எவ்வாறாயினும் தொடர்ந்தும் தேசியத்துவத்தினை அளவுக்கு மீறி ஒரு சமூகத்தின் மீது திணித்து வருவது இரு புறமும் கூரான முனை கொண்ட வாளின் ஆபத்தை கொண்டு வருவதாகவும் முடியலாம். அண்மைக் காலத்தில் அரசாங்கம் இழந்துள்ள மிக முக்கியமான வாக்காளர் ஆதரவு  முஸ்லிம் சமூகத்தினதாகும். பொதுபலசேனா போன்ற சிங்கள தேசியத்துவ குழுக்கள் முஸ்லிம்கள் மீது 2013 ஆம் ஆண்டு மாத்திரம் 211 தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்லாமிய தகவல் மைய புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. அதனால் முஸ்லிம்கள் அரசாங்கத்திலிருந்து பெரிதும் அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்குள் உள்ள சில பிரிவினர்களிடம் இவ்வாறாக தீவிரவாத குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் தாக்குதல்களுக்கு ஆதரவு இருந்து வருகிறது என்ற அனுமானம் நிலவுவது அதற்குக் காரணமாகும். குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் முஸ்லிம்  அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சின் உள்ளேயே நடந்தேறிய தீவிரவாத கும்பல்களது தாக்குதல்கள் இதற்கு சான்றாகும். இவ்வாறான தாக்குதல்களிலிருந்து ஒதுங்கி நிற்பது அரசாங்கத்திற்கும் ஒரு சமநிலையை பேணுவதற்கு சாதகமாயிருக்கும் என்பதும் அரசாங்கத்தின் ஆர்வங்களுக்கு ஏற்றதாகவும் இருக்கலாம். ஆனால் குறிப்பிடத்தக்கதோர் விளைவு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிட்டதக்கதாகும்.  

அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறான தீவிரவாத குழுக்களில் ஒன்றுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இவ்வாறான தீவிரவாத குழுக்கள் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக அவர்கள் பாதிக்கப்படக் கூடியதாகவும் அநாதரவாகவும் உணர்ந்து துயருற்று வரும் நிலையில் இருப்பதனை அமைச்சரது இந்நடவடிக்கை குறிப்பிட்டுக் காட்டுகின்றது. பொதுபலசேனா என்னும் கும்பல் அமைச்சரது அலுவலகத்தில் பலவந்தமாக நுழைந்தது மாத்திரமன்றி அவர், இடம்பெயர்ந்த முஸ்லிம்களை சட்டவிரோதமான முறையில் வில்பத்து விலங்குகள் சரணாலயத்தில் குடியேற்றுவதாகவும் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை முற்றாக நிராகரித்த அமைச்சர் பதியுதீன், இதற்காக இவ்வமைப்பு தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது அவருக்கு சார்பாக நீதித்துறை தீர்ப்பினை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இவற்றின் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் உள்ள பலர் மத்தியில் அமைச்சர் பதியுதீனுக்கு ஆதரவு கிட்டும் என்பது  உண்மையே. அரசாங்கத்தின் கூட்டுப் பங்காளியான அவருடைய அரசியல் கட்சிக்கும் அவருக்கும் இது சார்பான பெறுபேறுகளை கொண்டு வரலாம். எவ்வாறாயினும் கள நிலையில் என்ன நடக்கின்றது என்பதனைப் பற்றி முஸ்லிம் சமூகத்தவர்கள் சரியாக சிந்தித்துப் பார்ப்பார்களேயானால் அப்போது முஸ்லிம்களுக்கு எதிராக  நடக்கும் இவ்வாறான தாக்குதல்களை பார்த்தும் பாராது நடந்து கொள்ளும் அரசாங்கத்தின் மீது முஸ்லிம் மக்கள் வெறுப்பு கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடலாம். அதுமட்டுமன்றி அண்மையில் அளுத்கமவில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடை வன்முறைக் கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். மாத்தளையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்ததாகவும்  பேசப்படுகின்றது. அதேநேரத்தில் முஸ்லிம்களை இலக்காக வைத்து செயற்படும் சிங்கள தேசியவாத குழுக்களது செயல்கள் பெரும்பான்மை சிங்கள மக்களது கவனத்தையும் கவர்கின்றன என்பதனை அசட்டை செய்ய முடியாது. 

இவ்வாறான சிங்கள தேசிய வாத குழுக்கள் செய்யும் காரியங்களுக்கும் பாணிகளுக்கும் பல சிங்கள மக்கள் ஆதரவு தருபவர்களாக இல்லாததுடன் அவர்களுடைய அக்கறையையும் பகிர்ந்து கொள்பவர்களாகவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள இனம் பழிச்சொல்லுக்காளாவதனை அவர்கள் விரும்புபவர்கள் அல்லர். அரசாங்கத்தின் கஷ்டங்கள் அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எதிரணியினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிர்மாறானவை. அரசாங்கம் தன்னை மட்டும் மையப்படுத்திக் கொண்டு ஒரே பண்பினதாகவும்  செயற்படுவதாக மக்கள் சிந்திப்பார்களேயானால் தற்போதைய அரசாங்கக் கொள்கையின் ஒரு பகுதி மீது சாதகமாக சிந்திக்காத மக்கள் பிரிவினரிடமிருந்து அரசாங்கம் ஆதரவை  இழக்க நேரிடலாம். இது அரசாங்கத்தின் சூதாட்ட விளையாட்டான கசினோ பற்றியதாகவோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிகரித்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் மனப்பான்மை பற்றியதாகவோ இருக்கலாம். கடந்த மாகாண சபைத் தேர்தல் மார்ச் மாதம் நடந்த போது பெருமளவில் இனம் மற்றும் சமய ரீதியான சிறுபான்மை மக்களது வாக்குகள் அரசாங்கத்திற்கு குறைந்து போனமை பற்றி அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கின்றது. சிறுபான்மை இனத்தவரது ஒவ்வொரு வாக்குமே முக்கியமானதாகக் கருதப்படும். ஜனாதிபதித் தேர்தலிலும் சிறு பான்மையினரது வாக்குகள் அதேபோல் பிரிந்து செல்லும் ஆபத்தை அரசாங்கம் எதிர்கொள்ளுமா? தீவிரவாதத்துடன் ஒரு பக்கமாக செல்லாது சமூக, அரசியல் சமநிலையினை அரசாங்கம் பேணி வரவேண்டிய தேவை உண்டு. தற்போதைய எதிர்க் கட்சிகளிடம் காணப்படும் பலவீனங்கள் காரணமாக அரசாங்கம் ஒரு தீவிரவாத திசைநோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்குள்ளே உள்ள எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சக்திகள் அரசாங்கம் தீவிரவாத நிலைமைகளை பின்பற்றுவதனை தடை செய்யக் கூடியனவாகவும் உள்ளன. 

எதிர்க்கட்சிகளினால் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போகையில் இவ்வாறு அரசாங்கத்திற்குள்ளே உள்ள அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்ற சக்திகளினால் அவ்வாறான நடவடிக்கைகளுக்காக எதிர்க் கட்சியினருக்காக பார்த்துக் கொண்டிராது தாமே முன்வரும் நிலமைகளும் ஏற்படலாம். இதிலிருந்து இப்போது அரசாங்கத்திடம் கொள்கை மாற்றம் வேண்டும் என எதிர்பார்க்கும் அரசாங்க ஆதரவாளர்கள் (சிறுபான்மைக் கட்சியினர் தாராளவாத மற்றும் மிதவாத அரச தரப்பினர்) தம்மை ஒத்தவர்களும் அனுதாப எண்ணம் கொண்டவர்களுமான ஏனைய அங்கத்தவர்களுடன் இணைந்து தமது கொள்கை மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதே தெளிவாகின்றது. இலங்கை சமூகத்தில் தொடர்ந்தும் ஏற்பட்டு வரும் வேறுபாடுகளைக் கண்டு மனத்துயரமடைவது இலகுவான காரியமாகும். அதனால் ஏதும் பலன் ஏற்படப்போவதில்லை. மாறாக உண்மையாக அரசியலில் ஐக்கியப்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து செயற்படுவது தேவையானதாகும். இராணுவ தாக்குதல்கள், குண்டுத் தாக்குதல்கள், படுகொலைகள் என்பனவற்றாலான  பெருமளவு பொது மக்கள் கொல்லப்பட்டு பாதிப்புக்குள்ளான துயரத்தைக் கொண்ட முப்பது வருடத்தினை அனைத்து இலங்கையர்களுமே எதிர்கொண்டிருந்தனர். கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்று இரத்தம் சிந்தல் இனிமேலும் ஏற்படக்கூடாது என்பதை நம்பும் வகையில் இறந்தவர்கள் அனைவருமே நினைவுகூரப்பட வேண்டியவர்கள். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ள செய்தியும் சிபாரிசும் இதுதான். இது இன்னும் அமுலாக்கம் செய்யப்படாதுள்ளது. அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டின் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஏற்படவுள்ள தென்னாபிரிக்காவின் முயற்சிகளால் விரைவில் ஆவன நடைபெறும் என நம்புகிறோம். நாட்டு அரசாங்கத்தினதும் அதன் தேசியத்துவ கூட்டுப் பங்காளிகளினதும் செயல்கள் இவ்வாறான நம்பிக்கையினை தகர்ப்பதாக உள்ளமை வருத்தத்துக்குரியதே. 

No comments:

Post a Comment