Thursday, October 17, 2013

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை அடையாளம் காட்டியுள்ளார்....
இலங்கை அந்நியர் ஆட்சியின் பிடியிலிருந்து விடுபட்டதிலிருந்து சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான அமைதியின்மையும் நல்லுறவும் சீர்குலைந்தன. பாராளுமன்றம் நிறைவேற்றிய பிரஜாவுரிமைச் சட்டம் ,  சிங்களம்  மட்டும் ஆட்சி மொழி என்ற சட்டம் ஆகியவற்றின் மூலம் இரு சாராருக்குமிடையிலான நல்லுறவுகள் மேலும் சீர்குலைந்தன. பண்டா  செல்வா ஒப்பந்தம் 1957 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ,  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கும்  இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அது பண்டாரநாயக்க  செல்வநாயகம் ஒப்பந்தம் என்று சொல்லப்படும். அதில் தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை அடையாளம் காட்டியுள்ளார். ஒப்பந்தத்தில் சமஷ்டி அரசியல்முறை,  சுயாட்சி ,  வடக்கு ,  கிழக்கு மாகாணங்களில் இணைந்த அவ்விருமாகாணங்களும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடம் ,  பாரம்பரிய தமிழர் தாயகம் ,  உள்ளக சுயநிர்ணயம் ,  தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற கோட்பாடுகள் இன்று உரக்கப் பேசப்படுகின்றன. முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமே. இந்த பண்டா  செல்வா ஒப்பந்தம் மூலம் முஸ்லிம்களுக்கும் ஒரு பிராந்திய சபை உருவாக்கப்பட்டது. அவ் வுடன்படிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் கட்டாயமாக இரண்டு பிராந்திய சபைகள் (Regional Council) இருக்க வேண்டும். ஒன்று தமிழர்களுக்கு மற்றையது முஸ்லிம்களுக்கு எனக் கூறப்பட்டுள்ளன. 1965 ஆம் ஆண்டு மேலும் டட்லி   செல்வா ஒப்பந்தமும் செய்யப்பட்டு பின்பு இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தினால் நாடு பிரியும் என்பதை வலியுறுத்தி பௌத்த மகா சங்கத்தின் ஒரு பகுதியினரும் பிரபல்யமான ஊடகங்களும் UNP  கட்சித் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கடுமையான இன உணர்வுகளைத் தூண்டும் பிரசா ரங்களை மேற்கொண்டனர். அவற்றால் பீதியடைந்த பிரதமர் உடன்படிக்கையை இரத்துச் செய்வதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 1958ஆம் ஆண்டு தமிழருக்கு விரோமாக இனக் கலவரம் ஏற்பட்டது. இதன் பின் 1960ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு சுதந்திரக் கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்க  UNP  செல்வநாயகம் ஆகியோருக்குமிடையில் ஓர் இணக்கம் ஏற்பட்டது. அது கைச்சாத்திடப்படாத வாய் மொழியிலான ஒரு ஒப்பந்தமாகும். 

தமிழர்கள் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்குப் பதிலாக பண்டாரநாயக்க  செல்வநாயகம் ஒப்பந்தத்தை தனது கட்சி நடைமுறைப்படுத்தும் என சிறிமாவோ பண்டாரநாயக்க வாக்குறுதியளித்தார். தேர்தலில் சுதந்திரக் கட்சி 75  ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மைப் பலத்தையும் பெற்றது. பாராளுமன்றம் கூடிய போது வில்லியம் கொப்பலாவ தேசாதிபதியின் கொள்கைப் பரிந்துரை தமிழிலும் வாசிக்கப்பட்டது. இதனைத் தவிர உறுதி மொழிகள் தொடர்பாகப் புதிய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. அது தமிழருக்கு எதிரான போக்கினைத் தீவிரப்படுத்தியது. நீதி பரிபாலனமும் சிங்கள மொழியில் மட்டும் நடைபெற வேண்டும் என்ற சட்டத்தையும் நிறைவேற்றியது. இதனால் அரசாங்கத்தின் அரசகரும மொழிச் சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் சாத்வீகப் போராட்டங்களை நிகழ்த்தினார்கள். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவத்தின் மூலம் எதிர்ப்பியக்கத்தை அடக்கியது. இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும்பாலும் அப்பொழுது மாறி மாறி ஆட்சிக்கு வரும் UNP,  SLFP போன்ற கட்சிகளின் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்று பாராளுமன்றம் சென்ற போதிலும் ,  வடக்கு ,  கிழக்கு மாகாணங்களில் வசித்த முஸ்லிம்கள் தங்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை தமிழர்களின் அரசியற் கட்சிகளினூடாகவே பாராளுமன்றம் சென்றனர். அவ்வாறு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைத் தமிழர் கட்சியினூடாகப் பெற்ற பின்பு ஆளும் கட்சிகளான UNP ,  SLFP போன்ற பேரின கட்சிகள் ஆளும் கட்சிகளாக இருந்த வேளைகளில் அதில் சேர்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற வரலாறுகள் நிறையவே உண்டு. அந்த வகையில் MS காரியப்பர் ,  நிந்தவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் MM முஸ்தபா, சம்மாந்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் MA அப்துல் மஜீட் போன்றவர்களை உதாரணமாகக் கூறலாம்.

இலங்கை முஸ்லிம்களுக்கு 1987 ஆம் ஆண்டிலிருந்தே முஸ்லிம் அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் எப்போலுதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பங்கெடுக்காமல் விட்டாலும் தமிழ்த் தலைமைகள் முஸ்லிம்களை கைவிடாமல் முஸ்லிம்களும் வடக்கு, கிழக்கு பூர்வீகம் கொண்டவர்கள் தான் என்பதனை உறுதியாகக் கருதி தமிழர்களின் அகிம்சைப் போராட்டம் தொடக்கம் ஆயுதப் போராட்டம் வரைக்கும் முஸ்லிம்களும் தமிழ் பேசும் இனம் என்பதனைக் கூறத் தவறவில்லை. 1974 இல் புத்தளத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் படுகொலை செய்யப்பட்ட போது பாராளுமன்றத்தில் தந்தை செல்வா முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் முஸ்லிம்களுக்கும் தமிழ்த் தலைமைகள் தான் பாராளுமன்றம், சர்வதேசம் வரை குரல் கொடுக்கின்றனர். 1987 க்குப் பின்பு 30 வருடங்கள் சென்றதும் தமிழரின் நிலைமை ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றது. 1970 களில் பல புதிய தமிழ் இளைஞர் அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தன. அவற்றை ஒடுக்க அரசாங்கம் மேற்கொண்ட அடக்கு முறையும் ஜனநாயக விரோதமான மனித உரிமைகளை மீறிய சட்டங்களும் வெளிநாடுகளின் கவனத்தைப் பெற்றன. அப்பொழுது அதிக சக்தி வாய்ந்தவராக இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். இலங்கையில் இனங்களுக்கிடையில் அமைதி நிலையையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தக்கூடிய  ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்பது அவரின் நிலைப்பாடாகும். அந்தத் தீர்வு இலங்கையின் ஐக்கியத்தைப் பேணக்கூடிய நிலையில் அமைய வேண்டும் எனவும் கூறினார். 1984 லேயே அவர் அகால மரணமானார். அதன் பின்பு அவரின் புதல்வர் ராஜீவ்காந்தி இந்தியப் பிரதமரானார். இலங்கை தொடர்பாகத் தாயார் கடைப்பிடித்த கொள்கையைப் பின்பற்ற வேண்டிய நிலைப்பாடு அவருக்கு இருந்தது. அந்தக் கட்டத்தில் இலங்கையிலேயே உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்களை அழித்து விட்டார்கள். போர் அவர்களுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான நேரடியான போராகியது. அமெரிக்கா போன்ற பலம் பொருந்திய மேற்குலக நாடுகள் இந்திய அரசாங்கத்திற்கு  ஆதரவளித்தன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தினை உக்கிரமான போரின் மூலமாக அரசபடைகள் கைப்பற்றின. அந்த வெற்றியைத் தொடர்ந்து அரச படைகள் யாழ்ப்பாண நகரத்தை நோக்கி முன்னேற பாரிய முயற்சிகளை கொண்டன. அந்நகரத்தைக் கைப்பற்றுமிடத்து 50,000 பொது மக்கள் வரை உயிரிழக்க நேரிடும் என பதவியில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன. இவ்வாறு ஏற்படவிருந்த பெரும் அழிவினைத் தடுப்பதற்காகவே இந்திய அரசாங்கம் உடனடியாத் தலையிட்டு போரை நிறுத்தியது. இலங்கை அரசாங்கத்தோடு இந்திய 1987 இல் ஒர் உடன்படிக்கையை உருவாக்கிறது. அதன் முன்னுரையில் கீழ்வரும் விடயங்கள் அழுத்தமாகக் கூறப்பட்டன. இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகியோர் வாழ்கின்ற நாடு. அவர்கள் எல்லோரும் தங்கள் மொழிகளையும் சமய நெறிகளையும் பண்பாட்டு மரபுகளையும் பேணிக் காப்பதற்கு உரிமையுடையவர்கள். சிங்களமும் தமிழும் இலங்கையின் ஆட்சி மொழிகளாக அமையும். ஆங்கிலம் தொடர்பு மொழியாகும். வட கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களுடைய வரலாற்று வதிவிடம். அங்கு அவர்கள் காலா காலமாக வேறு மக்களோடும் கூடி வாழ்ந்துள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். ஓர் ஆண்டிற்குள் இந்த இணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் ஒரு சர்வஜன வாக்குரிமை நடத்தல் வேண்டும். இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குதல்  அடிப்படையில் இவ்வுடன்படிக்கை 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியல் அமைப்பில் உள்ள சிங்கள மயமாக்கம் தொடர்பான அம்சங்களை நீக்குவது போல அமைந்தது. இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் சற்று முன்னேற்றகரமான ஒரு ஒப்பந்தமாக இதனைக் கருத முடியும். இந்த ஒப்பந்த மூலமான மாகாண சபைகள் இன்று இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தமானது ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வடக்கு, கிழக்கு தவிர நாட்டில் எல்லா மாகாணங்களிலும் நடைமுறையில் உள்ளன.

தற்பொழுது மிக முக்கியமாக 2013.09.21 இல் தான் வட மாகாணத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் பெற்று, மேலும் இது அபிவிருத்தி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வட பகுதி மக்கள் அரசியல் உரிமைக்காக முக்கியத்துவம் கொடுத்து ஆணை பிறப்பித்துள்ளமையை வட பகுதித் தேர்தல் காட்டுவதுடன், இது உலகத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழர்கள், கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று அமோக வெள்ளி பெற்றது. இதில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டவாறான காணி, பொலிஸ் அதிகாரங்கள் அந்த மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்கின்ற விடயம் சம்பந்தமான எதிர்பார்ப்பில் தமிழ்க் கூட்டமைப்பு இலங்கை அரசையும் சர்வதேசத்தின் உதவியினையும் பெற்றுக் கொள்ளவென முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வுடன்படிக்கை இலங்கை ஒரு பல்லின சமூகப் பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட நாடு என்பதும், அவர்கள் அனைவரும் இலங்கை அரசியலின் பங்கு பெறும். மனித உரிமைகள் அனைத்தையும் பேணிக் கொள்வதற்கும் தகுதியுடையவர்கள் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கை சர்வதேச ஒப்பந்தம் என்பதில் சர்வதேச அரங்கில் அங்கீகாரத்தைப் பெற்றது. அமெரிக்கா சோவியத் யூனியன் போன்ற வல்லரசு நாடுகளும் அதன் அடிப்படை அம்சங்களை ஒப்புக் கொண்டன. இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்குவதற்கு ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் முயற்சிகளை மெற்கொண்டது. 

இந்த இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டது. உத்தேச இடைக்கால நிர்வாக சபையிலுள்ள 15 அங்கத்தவர்களில் 12 பேரையும்அவர்களே நியமிப்பார்கள் என்றும் சபையின் தலைவரை அவர்கள் சிபாரிசு செய்யும் மூன்று பேர்களிடையே ஒருவரை அரசாங்கம் நியமிக்கும் என்றும் இரு அரசாங்கங்களும் ஒப்புக் கொண்டன. 70,000 இந்திய இராணுவத்தினர் இலங்கையிலே தங்கி இருந்த காலத்தில் இடைக்கல நிர்வாகத்தைத் தமிழர் தரப்பினர் ஏற்றுக் கொண்டிருப்பின் வட கிழக்குப் பிராந்தியத்தில் எல்லா ஆட்சி அதிகாரங்களையும் தமிழ் பேசும் மக்களின் சார்பில் அவர்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், தமிழ்த் தரப்பினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளைப் பொறுத்தவரையில் இதனால் ஏற்பட்ட விளைவுகள் பாரதூரமானவை. மாகாண சபைகள் அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. மாகாணங்களின் நிர்வாகத்தை பொறுத்தமட்டில்  அதிகாரங்கள் மூன்று தொகுதிகளாக வகை செய்யப்பட்டன. மாகாண சபைகளுக்குட்பட்ட விடயங்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் வரும் விடயங்கள், பொது விடயங்கள் என்று மூன்று பகுதியாக அமைந்தன. அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள். அவை அரசாங்கத்தால் இரத்துச் செய்யக்கூடியவை. ஆயினும், தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையுடைய மாகாண சபைகளை உருவாக்கியமையும் பெரும்பான்மை அங்கத்தவர்களின் ஆதரவுடைய ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதற்கு வகை செய்தமையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். ஆயினும், தமிழ்த் தரப்பில் அரசாங்கத்தோடு போர் புரிந்த பலமான இயக்கமானது மாகாணசபை நிர்வாகத்தில் பங்குகொள்ள மறுத்தமையால் வட கிழக்கு மாகாணசபை உறுதியாக செயற்பட முடியவில்லை. 

 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவொரு மாகாண சபையினையும் தனியாக  கலைக்க  முடியாது என்று  எல்லா மாகாண சபைகளையும் ஏக காலத்திலேயே கலைக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டமை வரவேற்கத்தக்க சட்ட வரையறையாகும். தொடரும்.... ஆயினும், 1989  இல் பாராளுமன்றத்திற்குத்  தெரிவாகிய தமிழ்ப் பிரதிநிதிகள் ஏனையோருடன் கூடி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வட கிழக்கு மாகாண சபையையும் கலைப்பதற்கு துணைபுரிந்தனர். சட்டத்தில் வழங்கப்பட்ட காப்பீட்டையும் நிராகரிப்பதற்கு தமிழர்களே துணையாக இருந்து விட்டனர். இலங்கையிலே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மிகக் குறைவானவை என்பதை அக்கால   இந்திய அரசாங்கம் உணர்ந்து கொண்டது. இந்திய சிந்தனையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் ஜனநாயக ஆட்சி நிலவுகின்ற நாடுகளின் அரசாங்கங்களும், இக்காலகட்டத்தில் சமஷ்டி மூலமான ஓர் அரசியலமைப்பே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வாகும் என்று கருதத் தொடங்கினார்கள். தென்னிலங்கையில் அப்போதிருந்த புதிய அரசியல் கட்சியான மகாஜனக் கட்சியை உருவாக்கிய மக்களின் அபிமானத்தை பெற்ற முதன்மை நடிகரான விஜயகுமாரதுங்க இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பாட்டார். தீவிரமான இனவாதிகளினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் மூலம் சந்திரிகா பண்டாரநாயக்க பிரதமரானார். பின்பு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமுலாக்கப்பட்ட யுத்த நிறுத்தம் நெடுங்காலம் நீடிக்கவில்லை. மிகவும் சிக்கலான உணர்ச்சி பூர்வமாகிவிட்ட பிரச்சினைகள்  பற்றி சுமுகமாகப் பேசக்கூடிய இராஜதந்ததிர முறையிலான நுட்பங்கள் இரு சாராகுக்குமிடையிலும் காணப்படவில்லை

 1996 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புதிய அரசியலமைப்பிற்கான நகல் திட்டம் பல முன்னேற்றகரமான அம்சங்களைக் கொண்டிருந்தது. இறைமை எல்லோருக்கும் உரியது. இந்த ஆவணத்திலே தான்  இறைமையானது நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்ற சிந்தனை ஒப்புக் கொள்ளப்பட்டது. அது மக்களின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாலும் பாராளுமன்றத்தினாலும் பிராந்திய சபைகளாலும் பிரயோகிக்கப்படுமென்று சொல்லப்பட்டது பெரும்பான்மையினர் ஆளப்படுவோர் என்ற நிலைக்குப் பதிலாக அனைத்து இனங்களும் சமத்துவமானவை என்ற கருத்து இதில் அடங்கியிருக்கின்றன. தென்னாபிரிக்காவிலுள்ள சமஷ்டி முறையைப் போன்ற ஆட்சியமைப்பை ஏற்படுத்துவது அந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இலங்கை இறைமையுடையது என்று பிராந்தியங்களின் இணைப்பான ஐக்கியப்படுத்தப்பட்ட நாடு என்று அதிலே சொல்லப்பட்டது. இந்த யோசனை இலங்கை அரசியலமைப்பு வரலாற்றில் முதன் முறையாக அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட சிந்தனை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிராந்தியங்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் மாகாண சபை அமைப்பிலுள்ள பலவீனங்ஙகளை நீக்குவதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டன. 13 ஆம் அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தில் அதிகாரங்களைப் பற்றிச் சொல்லப்படுகின்ற மாகாண சபைகளுக்கும் பொதுவானவை என்ற அதிகாரங்கள் பிராந்திய சபைக்கு வழங்குவது என்றும் அதிலே சொல்லப்பட்டது. காணி முதலாக பிரதானமாக எல்லா விடயங்களிலும் பிராந்திய சபைகள் அதிகாரம் கூடிய வாய்ப்புகள் அதில் அடங்கியிருக்கின்றன. இந்த மாநிலம் ஒன்றுக்குரிய எல்லா அதிகாரங்களையும் பிராந்திய சபைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. பேச்சுவார்த்தையின் மூலம் மேலும் கூடுதலான வாய்ப்புகளைப் பெற்றிருக்கக்கூடும். ஆயினும், அன்று பலம் கொண்டிருந்த தமிழர் தரப்பு இதனை முற்றாக நிராகரித்து விட்டது. ஊடகங்களும் இந்த அம்சங்களைப் பற்றி எதனையும் வெளியிடவில்லை. பொது மக்களும் இவை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கவில்லை. சர்வதேச முயற்சியினால் ஏற்படுத்தப்பட்ட ஒஸ்லோ பிரகடனம் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த புதிய அரசாங்கம் ( ஐக்கிய தேசிய முன்னணி) பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலே போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு உடன்பட்டது.

பல ஆண்டுகளாக நடைபெற்ற சர்வதேச முயற்சியின் விளைவாக நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்புகள் ஏற்பட்டன. அவற்றின் விளைவாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அரசாங்கத்தின் சார்பில் ஒஸ்லோ பிரகடனத்தில் கையொப்பமிட்டார். சமஷ்டி அமைப்பு முறை மூலமாக இரு சாராரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இணங்கினர். அதன் விளைவாகப் போர் நிறுத்த உடன்படிக்கையும் போர் நிறுத்தத்தையும் கண்காணிப்பதற்கு வெளிநாட்டுக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும், பேச்சுவார்த்தைகளில் இடைக்கால நிர்வாக அமைப்புத் தொடர்பாக முரண்பாடுகள் தோன்றின. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வட கிழக்கு மாகாணங்களில் பங்கு கொள்ளாதமையினால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். ஒஸ்லோ பிரகடனம் முடிவடைந்தது. அதன் பாரதூரமான விளைவுகள் யாவரும் அறிந்ததே கடந்த 30 ஆண்டு காலமாக  நடைபெற்ற போர் சடுதியாக முடிவுற்றதும் 1987 இல் உருவாகிய இந்திய  இலங்கை ஒப்பந்தம் மூலமாக ஏற்பட்ட மாகாண சபை அமைப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. இலங்கைத் தமிழர்கள் தங்கள் அரசியல் தீர்வை .தங்கள் சுயாட்சி உரிமையை ஐக்கிய இலங்கைக்குள் நிலைநாட்டவும் புதிய பேச்சுவார்ததைகளை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2009 மே மாதம் 28 விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் பின்பு தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வுத் திட்டம் சம்பந்தமான போர் இன்று சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றமையை நாம் அவதானிக்கலாம். 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரைக்கும் தமது வயோதிபப் பருவத்தில் கூட தமிழ் மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமலும் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியிலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் துணிவுடன் நின்று தமிழ் மக்களின் உரிமைக்காக கருமமாற்றியவர் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா எனக் கூறலாம். முடிவடைந்த போரில் பெருந்தொகையான தமிழ் மக்களே பலியானதுடன் இடம்பெயர்ந்த மக்கள், அகதிகளான  மக்கள், காணாமற் போனோர் என இந்த நிர்க்கதிக்குள் ஆக்கப்பட்டன. 

இந்த நிலை இன்று வரைக்கும் முடிவில்லாத கதையாகத்தான் இருக்கின்றது ஜெனீவாப் பிரேரணை இந்த யுத்தத்தின் பின் அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தி சிங்கள மக்களும் சிங்கள அரசும் சந்தோஷமாக இருந்தபோது தான் சர்வதேச சமூகம் சம்பந்தப்பட்டு சர்வதேச  சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீறியதாகக் கூறி தமிழ் மக்களை மீள குடியேற்றுமாறு கூறிய போதும் கூட இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்தாமல் அகதி மக்களை கம்பி வேலி போட்டு அடைத்து ஆடு, மாடுகளைப் போன்று வைத்திருந்தது. மேலும் இந்த நடவடிக்கை மூலமாக தமிழ் மக்களை  ஏமாற்றியும் துன்புறுத்தியும் வந்த நிலையில் தான் அமெரிக்க நாடு சம்பந்தப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணையை அமெரிக்கா முன்வைத்தது. அந்தப் பிரேரணையில் இலங்கை தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட விடயத்தில் ஒருபடி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை, அதன் பரிந்துரைகளை தமிழ் மக்களுக்கு இனப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்க விரும்பாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் தான் தப்பித்துக் கொள்ள அந்த ஆணைக்குழு அறிக்கையை சர்வதேசத்திடம் முன்வைத்தது. ஆனால் இலங்கை அரசாங்கம் ஜெனீவாப்  பிரேரணையில் தோல்வியடைந்த போது தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும்படி சர்வதேசம் ஐ.நா மனித உரிமைப் பேரவையும் அமெரிக்காவும் கூறிவரும் நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்று சர்வதேசத்தின் கைகளில் உள்ளது. இந்த காலகட்டம் தமிழ் மக்களின் இன அழிப்பு அதிகமாக நடந்ததென்ற வலி மக்களிடத்தில் அதிகரித்திருந்த போதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் முக்கியமானதொரு கட்டமாகும். எனவே தான் சர்வதேச மயமாக்கப்பட்ட இந்த நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு மிக முக்கியமாகப் பங்காற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் கோர வடுக்கள்  தமிழ் மக்கள் மனதில் இன்னும் அகலவில்லை. இதனால் சதா அழுத முகத்துடனும் கண்ணீருடனுமே பெரும்பான்மையான குடும்பங்கள் தங்களது வாழ்வை நடத்தி வருகின்றன. வட பகுதியை எடுத்துக் கொண்டால் யுத்தம் காரணமாக கணவனை  இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள் என ஒரு பகுதியினரும் அதேபோன்று பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், உற்றார், உறவினர்களை இழந்தவர்கள் என இன்னொரு பகுதியினரும் காணப்படுகின்றனர்.

இவற்றுக்கும் மத்தியில் காணாமற் போனோரின் பட்டியலும் மிக நீண்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜெனீவாவில் இரண்டு முறைகள் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.  அதில் சமத்துவம், கௌரவம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றோடு  கூடிய நிரந்தர சமாதானத்தை இலங்கை மக்கள் எட்டுவதற்கு உதவும் நோக்கையே இந்தப் பிரேரணை கொண்டுள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் எரின் சேம்பர் லெய்ன் டொனாட் தெரிவித்தார்.  இலங்கை  அரசின் நல்லிணக்கப்பாட்டுக்கான நடைமுறைப்படுத்தப்பட்ட போதிய நடவடிக்கை நிறைவேற்ற மேலதிக நடவடிக்கைகள் தேவை. இவ்விவகாரம் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இடம்பெறவில்லை. எனவே காலத்திற்கும் சமபாட்டுக்கும் பொருத்தமான இப்பிரேரணையை  ஐ.நா மனித உரிமைப் பேரவை பரிசீலனைக்கு உட்படுத்தி ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தனது கொள்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஊக்குவிக்கின்றது. நிரந்தரமான நல்லிணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதைத் தூண்டுகின்றது. இதற்கு மேலாக மனித உரிமைகள் தூதுவர் அலுவலகத்தோடு இணைந்து செயற்படுவதற்கும் ஆக்கபூர்வமன ஆலோசனைகளைப் பெறுவதற்கும் இப்பிரேரணை இலங்கையை வலியுறுத்துகின்றது. என்றார். அவர் இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக ஐ.நா வின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகஸ்ட் 25 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இலங்கையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இவர் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து முக்கிய பிரமுகர்களையும் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் சந்தித்து நேரடியாக உரையாடினார். அந்த வகையில் அரச தரப்பில் ஜனாதிபதியும் நீதி அமைச்சரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர், போரினால் பாதிக்கப்பட்ட, காணாமற் போனோரின் உறவினர்களையும் சந்தித்து உரையாடியிருந்தார். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு முஸ்லிம் கட்சி உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ ,அமைச்சர்களோ எவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் நிலை பற்றி கதைக்கத் தவறியுள்ளமையானது இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதனைத் தான் காட்டுகிறது. இந்த விடயம் முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் வெட்கக் கேடான விடயம் மட்டுமல்லாமல் இலங்கையில் எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும்  இருக்கும் போது பொதுபல சேனாவின் தீவிர  நடவடிக்கையால் 30 க்கும் மேற்பட்ட பள்ளிகள் உடைக்கப்பட்டும். அகற்றப்பட்டும் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற அமைச்சர்கள் வாய்மூடி மௌனியாக இருந்து கொண்டு எப்படி முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் உரிமைப் பெற்றுக் கொடுக்க போராடுகின்றார்கள்? இதனை முஸ்லிம் சமூகம் தீவிரமாக கவனத்திற் கொள்ள வேண்டும். 

ஆனால் முஸ்லிம்களும் இந்த நாட்டின் தேசிய இனம் தான் என்பதனையும் அவர்களுக்கும் இந்த நாட்டில் பிரச்சினைகள் உண்டு என்பதனையும் முஸ்லிம்களுக்கு வடக்கு, கிழக்குத் தாயக பூமி தான் என்பதனையும் தமிழ் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம்களின் பள்ளிவாசல் உடைப்புகள் பற்றியும் முஸ்லிம்களின் அரசியல் உரிமை பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சி இல்லாத சமயத்திலும் தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளார்கள். இப்பொழுதும் கூட முஸ்லிம்களுக்கு அரசியற் கட்சி இருக்கும் இச்சந்தர்ப்பத்திலும் கூட பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் குரல் கொடுத்துள்ளார்கள். எனவே முஸ்லிம்களை தலைமை தாங்குபவர்கள் யார் ? மேலும் பொதுபலசேனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையாக நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று முஸ்லிம்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகின்றார்கள். அதேவேளை ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வெறுப்படைந்தவர்களாகவும் முஸ்லிம் மக்கள் உள்ளார்கள். இவர்களை தங்களின் தலைவர்கள் என்றும் பிரதிநிதிகள் என்றும் கூறுவதற்கு வெட்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். மேலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேசம் கொடுத்துவரும் அழுத்தங்களின் விளைவாகவே அரசு தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இலங்கை இது உள்நாட்டு விவகாரம் என்று சொன்னாலும் இலங்கையின் கயாதிபத்தியம் இறைமை என்பன பற்றி உரத்துக் குரலெழுப்பினாலும் இன்று இலங்கையின் இனப் பிரச்சினை சர்வதேச விவகாரமாகிவிட்டது. உலக விவகாரங்களின் தாக்கம் இருப்பினும் தவிர்க்க முடியாதது. ஐ.நா.  மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் எந்தப் பரபரப்புகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் மத்தியில் ஒருமாத காலம் நடந்து முடிந்திருக்கின்றது. இக்கூட்டத் தொடரில் இலங்கை பற்றிய விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்ததொன்றாக விளங்கியது. இலங்கை தமிழ், முஸ்லிம், பறங்கிய மக்களுக்கு எதிராக இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவேற்றி வந்திருக்கின்றார்கள்.


அதன் காரணமாகவே இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தோன்றி வளர்ந்து எதிர்ப்புகள் போராட்டங்களாக இறுதியில் வளர்ந்தன ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மார்ச் 22 ஆம் திகதி 2012 இல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக கொண்டு வந்த பிரேரணை 47 நாடுகள் வாக்களித்ததில் 24 நாடுகள் அமெரிக்காவுடன் சார்பாகவும் 15  நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் 8 நாடுகள் நடுநிலமை வகித்தது. இலங்கை அதில் தோல்வியடைந்தது. அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது. ஆயுதப் போர் எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட மாட்டாது. அது மேலும் புதிய பிரச்சினைகளை உண்டாக்கும். பலாத்காரம் பலாத்காரத்தையே வளர்க்கும். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுமையாக வாழ்வது அவசியமாகும். கடந்த காலத்தில் இவ்விரு இனங்களுக்கும் இடையே திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகளுக்கு ஆளாகியதனால் பல துயரங்களை கண்டுள்ளோம். எந்த இனமும் மற்றொரு இனத்தினை பகைத்துக் கொண்டு வாழ முடியாது.  முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்தவொரு கொள்கையும் இல்லாமல் இவ்வாறு வேண்டிய  பக்கத்திற்கு ஏற்ப தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள.தமது சமூகத்தின் பிரச்சினைகளின் உண்மைகளை அச்சமின்றி கூறுவதற்கு முன்வருதல் வேண்டும். கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து கொள்வதற்கு இரு சமூகங்களும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்தேயாக வேண்டும். இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கேள்வி கேட்காத சமூகம் ஒருபோதும் தனது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளாது. 

No comments:

Post a Comment