Tuesday, October 22, 2013


தமிழ் மக்களுடைய  அதிகாரப் பரவலாக்கம் பற்றிய போராட்டம்  "உளவியல் தேவையாகும்'.
13 ஆவது  அரசியல் அமைப்புத் திருத்தம், மாகாண சபை அதிகாரங்கள், மாகாண  சபைத் தேர்தல்கள் இலங்கை அரசியலில் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இவ்விதமான கால கட்டத்தில் சிறுபான்மை இனமாகிய   முஸ்லிம்களின் மாகாண  சபை அரசியல் பற்றி நோக்குவதாகவே இக் கட்டுரை காணப்படுகிறது. குறிப்பாக இலங்கையிலுள்ள மாகாண சபைகளை எடுத்துக் கொண்டால் கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த  ஏனைய மாகாணங்களில் முஸ்லிம்களுடைய செல்வாக்கு இல்லையென்றே கூறலாம். கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த எந்தவொரு மாகாண சபையிலாவது முஸ்லிம் அமைச்சரொருவரைக் கண்டு கொள்ள முடியாது. ஆகவே முஸ்லிம்களும் மாகாண சபையும் பற்றி ஆராய்வராயின் அது கிழக்கு மாகாணத்தையே முக்கியத்துவப்படுத்துகின்றதை மறுக்க முடியாது.  1987.07.29 ஆம் திகதி இலங்கை  இந்திய  ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டது. 

வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு அரசியல் உரிமைகளை  பெற்றுக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் முக்கிய அம்சமாகும். இலங்கை  இந்திய  ஒப்பந்தப்படி மாகாண சபைகளை உருவாக்குதல் , மாகாணங்களை ஒன்றிணைத்தல் , மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் , கிழக்கு மாகாணத்தில் உத்தேச மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு, அரச கரும மொழிச் சட்டங்கள் போன்ற விடயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மையினராக வாழ்கின்றார்கள். இலங்கையின் மொத்த சனத்தொகையில்  சுமார் 9%  முஸ்லிம்களாவார். . கிழக்கு மாகாணத்தில் மொத்த சனத்தொகையில் 32% முஸ்லிம்களாவர்.  கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டே முஸ்லிம்களுடைய அரசியல் 1988 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக அஷ்ரப் தலைமையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென்ற தனியானதொரு அரசியல் பிரவேசம், கிழக்கு மாகாணத்தில் இருந்தே தோற்றம் பெற்றது.   1988 ஆம் ஆண்டு வட மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்பட்டு வடக்கு ,கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாணத்தில் 33% பெரும்பான்மையைக் கொண்ட முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்புடன் அரசியல் நிர்க்கதிக்கு ஆளாகின்றனர். இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே கலவரங்கள் ஏற்பட்டமையும் இந்திய இராணுவம் அவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையும் முஸ்லிம்களுக்கு மேலும் ஏமாற்றத்தை அளித்தது.  முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் அவர்கள் அதிகாரப் பகிர்வில் அதிகளவு ஆர்வம் காட்டாவிட்டாலும் ஆரம்ப கால மாகாண சபை முறையானது பெரும் ஏமாற்றத்தையே அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது. கிழக்கு மாகாணத்தை தமக்கு ஒரு அரசியல் தளமாக்க வேண்டுமென்ற முஸ்லிம் அரசியல் எதிர்பார்ப்புக்கு ஜே.ஆர். ஜெயவர்தனவின் நிறைவேற்று அதிகாரம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதாவது வடக்கு கிழக்கு மாகாணம்  ஒன்றிணைந்த தேர்தலில் சிறுபான்மை  தமிழ் மக்கள் எதிர்பார்ப்பையும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பையும் குழிதோண்டிப் புதைத்தது. இத் தேர்தலினை  தமிழீழ  விடுதலைப் புலிகள் கூட எதிர்த்தனர். இந்திய இராணுவத்தின் அனுசரணைப் பெற்றோரும் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்க பிரதிநிதிகளுமே வடக்கு, கிழக்கு மாகாண சபையில் நியமிக்கப்பட்டனர்.   மாகாண சபை ஆரம்பமே  முஸ்லிம்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. நாட்டில் பின்னர் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளினால் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இயங்கவில்லை. எவ்வாறாயினும் வடக்கு  கிழக்கு தற்காலிக இணைப்பு முஸ்லிம்களின்  எதிர்ப்புக்கு மத்தியிலும் 2006 ஆம் ஆண்டு வரை அமுலில் இருந்தது. 2006 ஆம் ஆண்டு உயர்  நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டன.  

 அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 52% வாக்குகளைப் பெற்ற ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணி  வெற்றி பெற்றது. இத் தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)  முதலமைச்சராகப் பதவி ஏற்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. அத்துடன் ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஹிஸ்புல்லாவின் முதலமைச்சர் கனவும் கை கூடவில்லை. எனவே இரண்டாவது தடவையாகவும் முஸ்லிம்கள் மாகாண சபை முறையில் ஏமாற்றம் அடைந்ததை இது எடுத்துக்காட்டுகின்றது.  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்று 14 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைத்தது. இதன் போது முதன் முதலாக முஸ்லிம் ஒருவர்  கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். முஸ்லிம் ஒருவர்  முதலமைச்சராக வரவேண்டும் என்ற இலக்கை மையமாக வைத்தே ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம், ஹலால் பிரச்சினை முஸ்லிம்களுக்கு எதிரான பொதுபலசேனாவின் நடவடிக்கைகளை மையமாக வைத்து அரசாங்கத்திற்கு எதிராகத்  தேர்தல் பிரசாரம்  மேற்கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைத்ததானது கிழக்கு மாகாண முஸ்லிம்களை மேலும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

தேர்தல் முடிவில் இலங்கைத்  தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களைப் பெற்றாலும் ஆட்சி அமைக்கக் கூடிய பலம் அதற்கு இருக்கவில்லை.  சிறுபான்மை மக்களின் பலம் கொண்ட கிழக்கு மாகாண சபையை உருவாக்க இருந்த சந்தர்ப்பத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல்லாதொழித்தது. தங்களுடைய அமைச்சுப் பதவிகளையும் ஏனைய வரப் பிரசாதங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் சுயநல  அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருந்தது  குறிப்பிடத்தக்கது.   எவ்வாறாயினும் தற்போதைய கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி ஏற்பட ஆரம்பித்துள்ளதை மறுக்க முடியாது. ஆனாலும் கிழக்கு மாகாண சபையின் ஆளுநரின் அதிகாரங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் ஜனாதிபதியினுடைய அதிகாரங்களை  நேரடியாக பிரயோகிக்கக் கூடிய ஒருவராக ஆளுநர் காணப்படுகின்றார். இதனால் தான் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தங்களுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.  தற்போது வட மாகாண சபைத் தேர்தல்   அறிவிக்கப்பட்ட நிலையில் 13 ஆவது அரசியல் சீர்த்திருத்தம் பற்றி மீண்டும் பேசப்படுகின்றது. 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ், காணி மற்றும் மாகாணங்கள் ஒன்றிணைத்தல் ஆகிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்.  அல்லது மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற யோசனை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில்  எதிர்வரும் வட மாகாண   சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் இவ் அதிகாரங்கள் சிறுபான்மைத் தமிழ் மக்கள் கைகளில் போய்விடக் கூடா து என சிங்களக் கடும் போக்குக் கட்சிகளும் எதிர்பார்க்கின்றன. 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இத் தெரிவுக் குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ஏனெனில் மு.கா. இந்த 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நீக்குவதை யிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றமையாகும்.  

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியோர் தமிழ் மக்கள் கோரிய அதிகாரப் பகிர்வு முறையை ஒருபோதும் கோரியதில்லை. விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தைகளின் போது தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற தொனியிலேயே முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் போராட்டம் காணப்பட்டதேயொழிய முஸ்லிம்களுக்கென்ற தனியான அதிகாரப் பகிர்வைக் கோரி போராடவில்லை எனலாம். 1990 களில் விடுதலைப் புலிகளினால் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். எனினும்  இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமையை இலங்கைச் சிறுபான்மை மக்களைப் பொறுத்தமட்டில் வரவேற்கத் தக்க விடயமாகும். கிழக்கு மாகாண சபை மூலம் கிழக்கு முஸ்லிம்கள் அனுபவிக்கும் அரசியல்   மற்றும் பொருளாதார  நன்மைகளை இழந்து விடக் கூடாது என்பதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்காகும்.

 மாறாக தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கப் போராட்டத்துக்கு இதனை ஒப்பிட முடியாது. தமிழ் மக்களுடைய  அதிகாரப் பரவலாக்கம் பற்றிய போராட்டம்  "உளவியல் தேவையாகும்'.  அதனை இலகுவாகத் தீர்க்க முடியாது. ஆனால் முஸ்லிம்களுடைய அதிகாரப் பரவலாக்கம் பற்றியப் போராட்டம்"பொருள்மைய தேவையாகும்'இதனைச் சில பொருளாதார வளங்களை வழங்குவதன் மூலம் தீர்க்கலாம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகள் பட்டம் பதவிகளுடன் தமது போராட்டங்களை முடக்கிக் கொள்வது இதற்குச் சிறந்த உதாரணமாகும்.    13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறையில் குறிப்பாகக் கிழக்கு மாகாண சபையில் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னரே முஸ்லிம்கள் உண்மையாக ஆட்சி அதிகாரம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். ஆகவே மாகாண சபை முறையில் அதிகாரங்கள் குறைக்கப்படுவதை கிழக்கை மையமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பதில் எவ்விதமான ஆச்சரியமும் இல்லை

No comments:

Post a Comment