Tuesday, November 4, 2014

ஆரோக்­கி­ய­மான புத்திக் கூர்­மை­யுள்ள குழந்­தையைப் பெற்­றெ­டுக்க வேண்­டு­மென்­பது சகல தாய்­மா­ரி­னதும் நோக்­க­மாகும். அதனை அடை­வ­தற்கு கர்ப்ப காலத்தில் தாயி­னது உணவு சிறப்­பாக இருக்க வேண்டும். இதற்கு இலா­ப­க­ர­மா­னதும் இல­கு­வா­ன­து­மான முறையில் உணவைப் பெறு­வ­தற்கு சரி­யான ஆலோ­ச­னைகள் தாய்­மா­ருக்கு முக்­கி­ய­மா­னது.
பிர­தான உணவு வேளை­க­ளுக்கு மேல­தி­க­மாக சிற்­றுண்­டி­களை உட்­கொள்­வ­தற்கும் கிளினிக் மூலம் வழங்­கப்­படும் விற்­ற­மின்­களை உண்­ப­தற்கும் தாய்­மா­ருக்கு சரி­யான ஆலோ­சனை வழங்­கப்­படல் வேண்டும்.
தாயின் போஷாக்­கினை அள­வி­டு­வ­தற்கு உய­ரத்­திற்குப் பொருத்­த­மான நிறை­யுள்­ளதா என ஆராய்ந்­த­றி­வது அவ­சி­ய­மாகும். இதனை உடற்­தி­ணிவுச் சுட்டி (BMI) என அழைக்­கப்­படும். BMI 18.5 ஐ விடக் குறை­வாயின் போசணை மட்­டத்தில் குறைந்து செல்­வ­தாகக் கரு­தப்­படும். கர்ப்ப காலத்தில் நிறை அதி­க­ரித்தல் தொடர்­பாக விசேட கவனம் செலுத்­தப்­படல் வேண்டும். இதன் மூலம் நல்ல பிறப்பு நிறை கொண்ட குழந்­தை­யொன்றை பெறும் சந்­தர்ப்பம் ஏற்­படும்.கர்ப்ப காலம் முழு­வதும் தாயின் உடல்­நிறை 12-–14 Kg அள­வு­வரை அதி­க­ரிக்கும்.இரத்தச் சோகை குறித்துக் கர்ப்­பிணிப் பெண்கள் அறிந்­தி­ருத்தல் அவ­சியம்.

இரத்தச் சோகை உள்­ளதா? என அறி­வ­தற்கு கிளி­னிக்­கு­களில் ஹீமோ குளோ­பினின் அளவை இரத்­தத்தில் பார்ப்­பது அவ­சியம். இரத்­தத்தில் ஹீமோ­கு­ளோ­பினின் அளவு குறை­வாக இருந்தால் கர்ப்ப காலத்­திலும் பிர­சவ நேரத்­திலும் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம். அத்­துடன் குழந்­தையின் பிறப்பு நிறையும் குறை­வ­டையும். ஹீமோ­கு­ளோ­பினின் அளவு 11g ஐ விட அதி­க­மானால் இது திருப்­தி­க­ர­மான நிலை உள்­ள­தெ­னவும் 11g ஐ விட குறை­வானால் இது இரத்தச் சோகை நிலை எனவும் கரு­தப்­ப­டு­கின்­றது.இச்­சந்­தர்ப்­பத்தில் மருத்­து­வர்கள் தரும் விசேட ஆலோ­ச­னை­களைப் பின்­பற்­று­வ­துடன் கிளி­னிக்­கு­களில் தரப்­படும் இரும்­புச்­சத்து குளி­சை­க­ளுக்கு மேல­தி­க­மாக இரும்­புச்­சத்து (IRON) அடங்­கிய உணவு வகை­களை உண­வுடன் சேர்த்துக் கொள்­வதும் அவ­சி­ய­மாகும்.ஹீமோ­கு­ளோ­பினின் அளவு மேலும் 7g க்கு குறை­வானால் அது அதிக இரத்­தச்­சோகை நிலை­யாகும். இச்­சந்­தர்ப்­பத்தில் அப்­பெண்ணை வைத்­தி­ய­சா­லையில் அனு­ ம­தித்து சிகிச்­சை­ய­ளிக்க வேண்­டி­யி­ருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்­ணொ­ரு­வ­ருக்கு வழங்­கப்­படும் குளிசை வகைகள்...
01) முதல் 12 கிழ­மை­க­ளுக்குள் போலிக் அமிலக் குளிசை (Folic Acid) நாளாந்தம் ஒரு குளிசை வீதம் 12 கிழ­மை­க­ளுக்கு எடுக்க வேண்டும்.
இது சிசுவின் மூளை மற்றும் நரம்பு மண்­டல வளர்ச்­சிக்கு அவ­சி­ய­மாகும்.

02) முதல் 12 கிழ­மை­களின் பின் நாளாந்தம் ஒரு இருப்­புச்­சத்து குளி­சையும் விற்­றமின் C குளிசை ஒன்றும் இரவு உணவின் பின் எடுக்­கப்­பட வேண்டும்.
இரத்­தச்­சோகை பிரச்­சி­னையை தவிர் த்துக் கொள்­வ­தற்கு இக்­கு­ளி­சைகள் உத­வு­கின்­றன.

03) கர்ப்ப காலத்தில் 5 மாதங்­களில் வைத்­தி­யரால் சிபாரிசு செய்­யப்­ப­டும் பூச்சிக் குளி­சைகள் உட்­கொள்­ளப்­பட வேண்டும். (WORM TREATMENT) வயிற்றுப் புழுக்­க­ளி­லி­ருந்து பாது­காப்புப் பெறவும் இரத்தச் சோகை வராமல் காப்­ப­தற்கும் இவை உத­வு­கின்­றன.
தேயிலை, கோப்பி, பால் போன்­றன இருப்­புச்­சத்து குளி­சை­களில் மற்றும் உண­வு­களில் அடங்­கி­யுள்ள இரும்­புச்­சத்து உட­லினால் உறிஞ்­சப்­ப­டு­வதைத் தடுப்­ப­தனால் பிர­தான உணவு வேளைக்கு ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு முன்­னரும் மற்றும் உணவின் பின் ஒரு மணித்­தி­யா­லத்­திற்கும் அப்­ப­டி­யான பானங்­களை அருந்­தாமல் இருத்தல் பொருத்­த­மா­னது.
விற்­றமின் C குளி­சை­யி­னாலும் உணவின் பின் உட்­கொள்­ளப்­படும் பழங்­க­ளி­னாலும் உடம்­பினுள் இரும்புச் சத்து உறிஞ்­சப்­ப­டு­வது இல­கு­வாக்­கப்­ப­டு­கின்­றது.


04) வேறு நோய்கள் இருந்து அவற்­றுக்­காக மாத்­தி­ரைகள் பாவித்துக் கொண்­டி­ருப்பின் கிளி­னிக்­கிற்கு வந்த முதல் நாளி­லேயே அந்த விட­யத்தை வைத்­தி­யரின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்து அவ­ரது ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.
05) கர்ப்ப காலத்தில் மருத்­துவ ஆலோ­சனை இன்றி எந்த வேளை­யிலும் எந்த மருந்­தி­னையும் பாவிக்கக் கூடாது. ஏதேனும் நோய்க்கு ஆளானால் முடிந்­த­ளவு விரை­வாக வைத்­தி­யரை நாடி ஆலோ­சனை பெறுதல் அவ­சி­ய­மாகும்.
06) கர்ப்­பத்துள் வளரும் குழந்தை பூர­ண­மாகப் போஷாக்­கினை பெற்­றுக்­கொள்­வது தாய் உள்­ளெ­டுக்கும் உண­வு­க­ளி­லி­ருந்தே. ஆதலால் குழந்­தையின் ஆரோக்­கி­ய­மான விருத்­தியைக் கருத்­திற்­கொண்டு உள்­ளெ­ டுக்கும் உண­வு­களில் கவ­னஞ்­செ­லுத்­து தல் வேண்டும்.
07) முதல் 2–3 மாதங்­களில் உட்­கொள்ளும் உணவு சுவை­யின்றி அல்­லது உணவில் விருப்­ப­மின்றி இருந்தால் நாட்டுப் பழ­வ­கைகள், இளநீர், மரக்­க­றிசூப், பிஸ்கட் போன்­ற­வற்றை உட்­கொள்­ளலாம். அது­மட்­டு­மன்றி ஏனைய நாட்­களில் தான் உட்­கொண்ட பிடித்­த­மான உண­வு­களை வழக்­கப்­படி உட்­கொள்­ளலாம்.
புதிய பழங்­க­ளான வாழை, நெல்லி, வெரளு, விளா, கொய்யா, பழுத்த பப்­பாசி, பழுத்த அன்­னாசி போன்­ற­வற்றை உட்­கொள்­வதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் தேவை­யான விற்­றமின் போசணைப் பதார்த்­தங்­களை இல­கு­வாகப் பெற்­றுக்­கொள்­ளலாம்.


08) ஏனைய நாட்­களை விட சோறின் அளவு சற்றுக் கூடு­த­லாக உள்­ளெ­டுக்­கப்­பட வேண்டும். மரக்­கறி, கீரை­வகை, பருப்பு, அவரை மற்றும் விதை வகைகள் மற்­றைய நாட்­களை விட சற்றுக் கூடு­த­லாக உண­வுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* இய­லு­மான எல்லா வேளை­க­ளிலும் மீன், இறைச்சி அல்­லது நெத்­திலி உண­வுடன் சேர்த்தல் பொருத்­த­மா­னது.
* மீன் இறைச்சி உட்­கொள்­ளா­த­வ­ராயின் அதற்குப் பதி­லாக சோயா, பயறு, கடலை, கௌபி போன்ற அவரை வகை­களைக் கொண்ட உண­வு­களை அதிகம் எடுத்தல் வேண்டும்.
* வாரத்­துக்கு 3 முட்­டைகள் வீதம் உண­வுடன் சேர்த்துக் கொள்ளல் போது­மா­ன­தாகும்.
* இல­கு­வாகக் கிடைக்கக் கூடிய வச­திகள் இருக்­கு­மானால் ஒரு நாளைக்கு ஒரு தடவை ஒரு கிளாஸ் பால் அல்­லது யோகட், தயிர் போன்ற பாலு­ண­வு­களை உட்­கொள்­வது அவ­சி­ய­மாகும்.
* பிர­தான உணவின் பின் நாளைக்கு இரண்டு தட­வை­க­ளா­வது பழ­மொன்றை உட்­கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் அதிக தாய்­மா­ருக்கு ஏற்­ப­டு­கின்ற மலச்­சிக்கல் போன்­றன ஏற்­ப­டா­தி­ருக்க நார் சேர்ந்த மரக்­கறி, பழங்கள், கீரை­களை உண­வுடன் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். கீரை வகை­களை உண­வுக்­கென உட்­கொள்ளும் போது முடிந்­த­ளவு பச்­சை­யாக சலாது செய்து தயார்­ப­டுத்தல் சிறந்­தது. அதனால் அதி­லி­ருந்து போஷாக்கு பாது­காக்­கப்­படும்.

உ+ம்- வல்­லாரை, பொன்­னாங்­கண்ணி, அகத்தி போன்­ற­வற்றை சிறி­தாக வெட்டி சலாது செய்­யலாம் )

உங்­க­ளது BMI பெறு­மானம் 18.5 ஐ விடக் குறை­வாயின் மாச்­சத்து மற்றும் கொழுப்­புச்­சத்து நிறைந்த உண­வு­களை உள்­ளெ­டுப்­பது சிறந்­தது.
கடை­களில் கிடைக்கும் சமைத்த உண­வு­களை தவிர்த்து வீட்டில் சுத்­த­மாக சமைத்த உண­வினை எடுப்­ப­தற்கும் கொதித்­தா­றிய நீரினைப் பரு­கு­வ­தற்கும் பழகிக் கொள்ள வேண்டும். எந்த வேளை­யிலும் இயற்கை உண­வு­களை உட்­கொள்­ளவும் தர­மற்ற செயற்கை பதார்த்­தங்­களை தவிர்க்­கவும்
 
கவ­னத்­திற்­கொள்ள வேண்­டிய
ஏனைய விடயங்கள்


* கர்ப்ப காலத்தில் பெண்கள் தமது உடற்சுத்தத்தைப் பேண வேண்டும். அத்துடன் அணியும் ஆடைகள் உள்ளா டைகளை தினமும் கழுவிச் சுத்தமாக பாவிக்க வேண்டும்.
* பற்சுகாதாரம் பற்றிக் கவனித்தல் அவசியம். தினமும் பிரதான உணவு வேளையின் பின் பற்பசை கொண்டு பற்தூரிகையினால் பல்லை துலக்குதல் பொருத்தமானது.
* மேலதிகமாக பல் வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பல் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும். கர்ப்ப காலத்தில் தொற்று நோய்களிலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும். நோய்கள் தொற்றக்கூடிய பொது மக்கள் கூடும் இடங்கள், வைத்தியசாலைகள், நோயா ளிகள், வீடுகள் போன்ற இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

Friday, October 3, 2014

அண்மைக் காலமாக இந்திய நீதிமன்றங்கள் தன்னெழுச்சி பெற்றுக் குற்ற விசாரணைகளில் ஈடுபட்டுத் தண்டனைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக 2ஜி விசாரணை, நிலக்கரி ஊழல் விசாரணை ஆகியவை மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ள சூழலில் நீண்டகாலம் தமிழகத்திலும், பின்னர் கர்நாடகத்திலுமாக நடைபெற்ற தமிழக (முன்னாள்) முதல்வரின்  சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. உடனடியாகத் தண்டனையின் நிறைவேற்றம் சிறையில் அடைக்கப்படும் நிகழ்வாகத் தொடர்ந்திருப்பது பல்வேறு சிந்தனை அலைகளை எழுப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் நீதியின் வெற்றியாக இத் தீர்ப்பைக் குறித்து அவசரம் அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நாளிதழ்களும் சட்டத்தின் ஆட்சியென்றும், ஊழல்களுக்கு எதிரான தீர்ப்பு என்றும் கருத்துரைகளை வெளியிட்டிருக்கின்றன. தினமணி மட்டும் தான் நடுவுநிலை பிறழாத, பக்கச் சார்பு இல்லாத, பெருவாரியான மக்களின் அதிர்ச்சி அலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பொது நோக்கோடு அருமையான தலையங்கத்தை அளித்திருக்கின்றது. கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பு நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் மிகுந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது தெளிவு. 

பாதிக்கப்பட்ட கட்சித் தொண்டர்களின் உணர்ச்சி வசப்பட்ட வெளிப்பாடுகள் இயற்கையானதென்றாலும் அதற்கு அப்பால் நின்று குற்றத்தின் தன்மையையும், தண்டனையின் அளவு, அதனை அளித்திருக்கும் முறையை ஆகியவற்றையும் சீர்தூக்கிச் சிந்திப்பது நாகரிகச் சமுதாயத்தின் இன்றியமையாக் கடமைகளில் ஒன்று எனக் கருதலாம். முதன்முதலாக உலகில் சட்டங்களை உருவாக்கியவன் என்று பாபிலோனிய (இன்றைய ஈராக்) அரசன் ஹம்முரபி என்பவனை வரலாறு சுட்டிக் காட்டும். அவனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 18ஆம் நூற்றாண்டு என்பார்கள். அவன்தான் சட்டங்களை உருவாக்கிய மூலவன் என அறியப்படுபவன். 282 சட்ட விதிகளைச் சமைத்து சமைத்து அவற்றைப் பல கருங்கற் பலகைகளில் பதித்து அறிவித்தான் அவன். அப்பலகைகளில் ஒன்று சுட்டுவிரல் போல் வடிவமைக்கப்பட்டு உச்சியில் அவனுடைய உருவத்தையும் கொண்டிருக்கிறது. பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இந்த ஒரு கல் மட்டும் இன்றும் காணக் கிடைக்கிறது. கல்லில் வெட்டியது போலவே அக்கேடியா மொழியில் களிமண் பலகைகளில் இச்சட்டங்கள் கைவினைப்பாட்டோடு அமைக்கப்பட்டிருந்தன. ஹம்முரபியின் ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சட்டங்களில் "கண்ணுக்குக் கண், கைக்குக் கை, உயிருக்கு உயிர்' என்ற தண்டனை முறை எடுத்தரைக்கப்பட்டுள்ளது. ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குத்தினால் அவன் கண்ணைக் குத்துவது தண்டனை. இப்படியே கைக்குக் கை, உயிருக்கு உயிர் என்ற தண்டனை முறையை இந்த ஆதிகாலச் சட்டம் வகுத்துரைக்கிறது. இதற்கு முன்பும் ஊர் என்ற பாபிலோனியாவின் நகரில் நம்ம ஊர் என்ற சட்டமுறை இருந்தது என்று சொல்லப்படுகிறது. 

ஹம்முரபிக்குப் பின்னர் உலக சமுதாயத்துக்கு முழுமையாகக் கிடைத்த சட்டங்களைத் தான் மனு ஸ்மிருதி என்கிறோம். கி.மு. 1000 என்று வரலாற்றாசிரியர் கருதும் இச் சட்ட நூலில் சமுதாயத்தின் அடித்தட்டு வர்க்கத்தைப் புழுவும் பூச்சியும் போல் கருதுகிற சட்டங்களும் தண்டனைகளும் அமைந்தன. வருண வேறுபாடுகளுக்கேற்ப நியாயங்களும் வகுக்கப்பட்டதை அந்நூல் தெளிவுபடுத்துகின்றது. தமிழர்களுக்குத் திருக்குறள் தோன்றுமுன் வாழ்வியல் வகுத்த சட்ட நூல்கள் இருந்ததை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், செவி வழியாக வழங்கி வருகிற சில தொன்மங்களைத் தமிழிலக்கியங்கள் முன் வைக்கின்றன. மனுநீதிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி, பொற்கைப் பாண்டியன் கதைகள் நமக்குச் சொல்லுகிற செய்திகளில் உயிர்க் கருணை ஊடு சரடாக ஓடுகிறதென்றாலும், உயிருக்கு உயிர், தசைக்குத் தசை, கைக்குக் கை என்ற கருத்தின் கூறுகள் அன்று மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்ட நீதிமுறையாக இருந்தன என்பதையே இக்கதைகள் புலப்படுத்திக் காட்டுகின்றன. அண்மைக் காலக் கதைகளில்கூடத் திருட்டுக் குற்றங்களுக்கு மாறு கால் மாறு கை வாங்குகிற கடுமையான தண்டனை முறைகள் இருந்ததை அறிய முடிகிறது.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் பின்னரும் குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. மரண தண்டனை ஏற்கப்பட்டிருந்தாலும் மனிதநேயம் மிக்கவர்கள் அத் தண்டனையை அகற்ற வேண்டுமென வலிமையோடு குரல் கொடுத்து வருகின்றனர். 

இத்தனையும் இங்கு கூறப்பட்டதற்குக் காரணம் நீதிமன்றங்களும் நீதியரசர்களும் தம்முன் வரும் வழக்குகளை அணுகும் முறை  வெறும் சட்டங்களின் இரக்கமற்ற சிட்டகங்களைத் தாண்டி கருணையும் இயற்கை நீதியும் கலந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான். சட்டங்களையும் வழக்குகளையும் அரசியல் பழிவாங்கும் கருவிகளாகப் பயன்படுத்தும் போக்கு இந்தியாவில் சில காலமாகப் பெருகி வருகின்றது. கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்ததும் அறிஞர்கள் அமைதி காத்தனர்; கலையுலகம் அமைதி காத்தது; மிகுந்த வேகத்தோடு கருத்துச் சொன்னவர்கள் அரசியல் தலைவர்கள்தான். இவ்வளவு ஆத்திரப்பட்டுக் கருத்துரை நல்கியதற்குக் காரணம் மெய்யாகவே ஊழல் எதிர்ப்பு அக்கறையா? அல்லது நீதியை நிலைநாட்டும் தீவிரமா? அல்லது அரசியல் களம் நமக்குச் சாதகமாக மாறி வருகிறது என்கிற கட்டற்ற உற்சாகமா? பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் சில அடிப்படை உண்மைகள் இருக்கலாம். அதிகாரம் சொத்துக்களை அதிகரிக்க உதவியிருக்கலாம். ஆனால் செருப்புகளையும், சேலைகளையும் கூடக் கடைபரப்பி வைத்து, ஆட்சி அதிகாரத்தால் சாட்சிகளை உருவாக்கி, குற்றவியல் வல்லுநர்களைக் குவித்து சதி வலைகளைச் சமைத்து  சிறிய அளவு தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை மலையளவு பெருக்கி உருவாக்கப்பட்ட வழக்கு இது என்பதைச் சின்னக் குழந்தை கூடச் சொல்லி விடும். நம்முடைய மாநிலத்தில் அப்பழுக்கற்ற முதல்வர்களாக அடையாளம் காட்ட வேண்டுமானால் ஓமந்தூராரைச் சொல்லலாம். குமாரசாமி ராஜாவைக் கூறலாம் . 

ராஜாஜியையும் காமராஜரையும் பேசலாம்; குடியிருந்த வீட்டில் அரசு மேசை நாற்காலிகள் கூடக் கொண்டு வரப்பட வேண்டாம் என்று மறுத்த மனிதர் அண்ணாவை எண்ணிப் பார்க்கலாம். அவர்கள் வேறு யுகத்துப் பிறவிகள். பொதுவுடைமை இயக்கத் தலைவர்களையும், சில தியாகச் செம்மல்களையும் தவிர, மற்றவர்களில் யார் ஊழல் எதிலும் எனக்குத் தொடர்பில்லை; பணம் என் அரசியலைத் தீர்மானிக்காது என்று மார்தட்டிக் கூற வல்லவர்கள்? நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் என்று சராசரித் தமிழன் கேட்கமாட்டானா? தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வெற்றிடத்தை இந்த வழக்கின் தீர்ப்பு உருவாக்கி இருக்கிறது. முந்தைய மத்திய அரசின் காலத்தில் உப்புக்கும் புளிக்குமாக அவர்களிடம் சிறையிலிருக்கும் (முன்னாள்) முதல்வர் போரிட வேண்டியிருந்தது. மின்சாரப் பாதைகளைச் செப்பனிட்டு வடக்கேயிருந்து மின்சாரம் கொண்டு வரும் இன்றியமையாப் பணியில் கூட இடையூறுகள் விளைவிக்கப்பட்டன. விளங்காத காரணங்களால் நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன மறுக்கப்பட்டன. ஏழைகளின் அடுப்பெரிக்கும் மண்ணெண்ணெய் கூட மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது. காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு சிக்கல் என மேலும் மேலும் முடிச்சுகள் போடப்பட்டன. இலங்கைத் தமிழன் ரத்தத்திலும் கண்ணீரிலும் ஊறித் தொலைந்தான். இத்தகைய இக்கட்டான தருணத்தில் தமிழகத்தில் போராளித் தன்மைமிக்க ஒரு தலைமை தேவைப்பட்டது. மக்கள் சிறையிலிருக்கும் (முன்னாள்) முதல்வரைத் தெரிவு செய்தனர். அந்தத் தலைமையின் ஆளுமை மத்திய அரசை மட்டுமல்லாது, கர்நாடக, கேரள அரசுகளையும் தமிழகப் பிரச்சினைகளில் நல்ல தீர்வு காண நெருக்கியது. உச்சநீதிமன்றத்தில் நியாயமான முடிவைப் பெறவும் காரணமானது. 

தேர்தல் களத்தில் அசைக்க முடியாத வெற்றிகளை அடுக்கடுக்காகப் பெற்றதால் தமிழக அரசியலில் எல்லா அணிகளும் ஒன்று சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாத அவலத்தைச் சந்தித்தன. இந்த நிலையில் ராஜபக்ஷவும் குதூகலிக்கும் வண்ணம் கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்ததும், நம் அரசியல் தலைவர்கள் சூதில் பாஞ்சாலியை வென்றபோது, சகுனியை அரவணைத்துக் கொண்ட துரியோதனன் போல, "அன்று நகைத்தாளடா  என் மாமனே அவளை என் ஆளாக்கினாய் என்றும் மறவேனடா  உயிர் மாமனே என்ன கைம்மாறு செய்வேன்?'  பாரதி என்று ஆர்த்து முழங்கத் தலைப்பட்டிருப்பது மிகுந்த தலைகுனிவாக இருக்கிறது. பணத்தால் தேர்தலில் வென்றுவிட்டதாக ஒரு பஞ்சாங்கப் பழங்கதையைப் பணம் கொடுத்தும் வெற்றி பெறாதவர்கள் சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள்."திருமங்கலம்' கோட்பாட்டைத் தேர்தலில் உருவாக்கியவர்களே இப்படிச் சொல்லிச் சமாதானம் செய்து கொள்கிறார்கள். கர்நாடக முதலமைச்சர் "நாங்கள் ஒன்றும் செய்யவில்லை; எல்லாம் நீதிமன்றத்தின் சுதந்திரமான தீர்ப்பு' என்கிறார். இதைக் கேட்கிறபோது "எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதை ஞாபகம் வராமல் போகாது. கர்நாடகத்துக்கு மட்டுமல்ல அண்டை மாநிலங்களுக்கும் நம் அரசியல் இயக்கங்களைப் போலவே இந்தத் தீர்ப்பின் முடிவில் அக்கறையும் ஆர்வமும் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. மேல்முறையீடுகள் இருக்கின்றன. அவற்றில் வெற்றி கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால் ஒன்று மட்டும் சராசரித் தமிழனின் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும்.அறுபத்தாறு கோடி ரூபாய் அளவுக்கு மீறிச் சம்பாதித்தார்கள் என்ற குற்றம் சாட்டி, நூறு கோடி ரூபாய் அபராதம், நான்கு ஆண்டு சிறை, ஆறாண்டு தேர்தல் தடை என்ற கொடூரமான தீர்ப்பை  ஒரு அரசியல் தலைவரின் எதிர்கால அழித்தொழிப்பை  நல்ல உள்ளங்கள் நிச்சயமாக ஏற்காது. ஊழல் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தண்டனை, டிராட்ஸ்கியின் படுகொலை போல் அரசியல் பழிவாங்கலாகத் தாழ்ந்து போகலாகாது. இந்தத் தீர்ப்பின் நெடிய வரலாற்றுப் பின்புலத்தில் அரசியல் நிர்ப்பந்தங்கள் இல்லையென்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே இருக்கும். 

Monday, September 29, 2014


நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை ஏற்படுத்திய 2ஆம் குடியரசு அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு அதிகளவிலான அதிகாரங்களைக் குவித்துள்ளது. முதலாம் குடியரசு யாப்பில் பிரதமர் பெற்றிருந்த உண்மை அதிகாரங்களையும் ஜனாதிபதி கொண்டிருந்த பெயரளவு அதிகாரங்களையும் ஒருங்கே கொண்டதாக 2ஆம் குடியரசு யாப்பின் ஜனாதிபதிப் பதவி விளங்குகின்றது.  நிறைவேற்றுத்துறையில் மட்டுமன்றி சட்ட மற்றும் நீதித்துறைகளிலும் ஜனாதிபதி பெற்றுள்ள அதிகாரங்கள் உலகில் ஜனாதிபதி ஆட்சி முறைக்குச் சிறப்பித்துக் கூறப்படும் அமெரிக்க ஜனாதிபதியை விடவும் அதிகமென விமர்சிக்கப்படுகின்றது.   யாப்பின் முதலாம் அத்தியாயத்தின் 4(ஆ) பிரிவு "இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்றுத்துறை அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்படும் குடியரசு ஜனாதிபதியால் பிரயோகிக்கப்பட வேண்டும்' என்கிறது. யாப்பின் 30(1) பிரிவு "இலங்கைக் குடியரசுக்கு ஜனாதிபதி ஒருவர் இருக்க வேண்டும் என்பதுடன் அவர் அரசின் தலைவரும் நிறைவேற்றுத்துறைத் தலைவரும் அரசாங்கத்தின் தலைவரும் ஆவார்' எனக் கூறுகின்றது. பாராளுமன்றத்தைக் கூட்டல், கலைத்தல், அமர்வை இடைநிறுத்தல் என்பன ஜனாதிபதிக்குரிய பிரதான சட்டத்துறை அதிகாரங்களாகும். இது குறித்து அரசியலமைப்பின் 70(1) பிரிவு தெளிவாகக் கூறுகிறது. பொதுத் தேர்தல் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர் ஜனாதிபதி எந்நேரத்திலும் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம். அத்துடன் 2 மாதங்கள் வரை பாராளுமன்ற அமர்வை இடைநிறுத்தி வைக்கலாம். மேலும் கலைக்கப்பட்ட அல்லது அமர்வு இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றத்தை (3 நாட்களுக்குப் பின்னர்) முற்கூட்டியே கூட்டலாம்.        32(3) பிரிவின்படி ஜனாதிபதி ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு தடவை பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும். இது ஜனாதிபதியை பாராளுமன்றத்திற்கு கட்டுப்பாடுடையவர் போல காட்டப்படினும் இதன்மூலம் ஜனாதிபதி பாராளுமன்றம் தொடர்பான விடயங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும். 32(4) பிரிவின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவும் செய்திகளை அனுப்பவும் உரிமையுடையவர். 33 பிரிவின்படி  பாராளுமன்றத்தில் சிம்மாசனப் பிரசங்கம் நிகழ்த்துதல், ஒவ்வொரு அமர்வின் ஆரம்பத்திலும் அரச கொள்கைக் கூற்றை வாசித்தல் என்பன ஜனாதிபதிக்குரிய கடமைகளாகும். 

அத்துடன் வாக்களித்தல் தவிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள எல்லா சிறப்புரிமைகள்,  விடுபாட்டுரிமைகள், தத்துவங்கள் என்பன ஜனாதிபதிக்குண்டு. மேலும் பாராளுமன்றத்தின் அல்லது அதன் உறுப்பினர்களின் ஏதேனும் சிறப்புரிமைகளை மீறியமைக்காக அவர் வகை சொல்லவும் தேவையில்லை.  அரசியலமைப்பின் 13ஆம் அத்தியாயத்தில் "மக்கள் தீர்ப்பு' மூலம் ஜனாதிபதி சட்ட ஆக்க விடயங்களை வழிநடத்தும் அதிகாரங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. 85(1) பிரிவின்படி அமைச்சரவை விரும்புகின்ற அல்லது உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ள ஒரு சட்ட மூலத்தை ஜனாதிபதி மக்கள் தீர்ப்புக்கு விட வேண்டும். அத்துடன் 86 பிரிவின்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனாதிபதி கருதுகின்ற ஒரு விடயத்தையும் மக்கள் தீர்ப்புக்கு விடும் அதிகாரம் அவருக்குண்டு.  மேலும் 85(2) பிரிவின்படி பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட ஏதேனும் சட்டமூலத்தை (அரசியலமைப்பு அல்லது அதன் ஏதேனும் ஏற்பாட்டைத் திருத்துதல், மாற்றுதல், நீக்குதல், அரசியலமைப்பில் சேர்த்தல் தவிர்ந்த) தனது தற்றுணிபின் பேரில் மக்கள் தீர்ப்புக்கென ஜனாதிபதி சமர்ப்பிக்கலாம். ஜனாதிபதியின் கையொப்பத்துடன் மக்கள் தீர்ப்பு அமுலுக்கு வரும். நிறைவேற்றுத்துறையில் ஜனாதிபதி மிகக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டுள்ளார். 8 ஆம் அத்தியாயம் நாட்டு நிருவாகத்துக்குப் பொறுப்பான அமைச்சரவை பற்றிக் கூறுகின்றது. தமது கருத்துப்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறக்கூடியவரை பிரதமராக நியமித்தல், அவசியமானால் பிரதமரைக் கலந்தாலோசித்து பாராளுமன்றத்திலிருந்து தேவையான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோரை நியமித்தல், அவர்களின் அமைச்சுப் பதவியை மாற்றுதல், பதவியைக் குறைத்தல், பதவியிலிருந்து நீக்குதல், ஒப்படைக்கப்படாத  தான் விரும்புகின்ற அமைச்சுப் பொறுப்புக்களைத் தாமே வைத்திருத்தல் என்பன ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களாகும்.  

மேலும் 43(2) பிரிவின்படி ஜனாதிபதி அமைச்சரவையின் ஓர் உறுப்பினராக இருப்பதுடன் அமைச்சரவையின் தலைவருமாவார். அத்துடன் அமைச்சரவை கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தொடர்ந்தும் பதவி வகிப்பார். 42 பிரிவின்படி ஜனாதிபதியும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்பு வகிக்கக் கடமைப்பட்டிருப்பினும் அவர் பெரும்பாலும் பாராளுமன்றத்தின் வழமையான சட்ட ஆக்க நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாததால் அப்பொறுப்பு எத்தகையது என்பது குறித்து தெளிவற்ற நிலை காணப்படுகின்றது.  சில உயர்தர பதவி நியமனங் களையும் ஜனாதிபதி மேற்கொள்கின்றார். அவற்றுள் அரச தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பூரண அதிகாரம் பெற்ற அரச பிரதிநிதிகள், ஏனைய இராஜதந்திர முகவர்கள் போன்றோரை ஏற்று அங்கீகரித்தல், நியமித்து பொறுப்பளித்தல், சிறப்புமிக்க சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்தல், மாகாண ஆளுநர்களை நியமித்தல், பொலிஸ் மா அதிபரை நியமித்தல் என்பன ஜனாதிபதியின் கடமைகளில் குறிப்பிடத்தக்கன.  குடியரசின் பொது இலச்சினையை வைத்திருத்தல், அதனைப் பயன்படுத்தல், காணி நன்கொடை வழங்குதல், போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்தல், சம்பிரதாய விழாக்களில் கலந்து கொள்ளல், சர்வதேச பிராந்திய மாநாடுகளிலும் அமைப்புகளிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தல் போன்ற கடமைகளையும் ஜனாதிபதி மேற்கொள்கிறார்.  குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், தண்டனைக் காலத்தை தள்ளி வைத்தல், தண்டனைகளை குறைத்தல், பாராளுமன்றத்தின் சிபாரிசில் உச்ச நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கல், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசில் மேல் நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கல் போன்ற நீதித்துறை அதிகாரங்களையும் ஜனாதிபதி மேற்கொள்கின்றார்.  

மேலும் அரசியலமைப்புக்கான 18 ஆம் திருத்தப்படி பாராளுமன்றப் பேரவையின் அவதானிப்பில் ஜனாதிபதி சில உயர்தர அரச பதவிகளுக்கான ஆட்களையும் சில மிக முக்கிய ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களையும் அதன் தலைவர்களையும் நியமனம் செய்கிறார். பாராளுமன்றப் பேரவையின் அவதானிப்பு எப்படி இருந்த போதிலும் அந்நியமனங்களை ஜனாதிபதி தம் இஷ்டம்போல நியமித்துக் கொள்வதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. தேர்தல் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய  சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு ஆகிவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பிரதம நீதியரசர், ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், ஏனைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், நீதிச்சேவை ஆணைக்குழுவின் (தவிசாளர் தவிர்ந்த) உறுப்பினர்கள், சட்ட மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்), பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய பதவி நிலைகள் ஜனாதிபதியின் இந்நியமனத்திற்குள் அடங்கும்.  மேலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சில அதிகாரங்களையும் நடைமுறையில் ஜனாதிபதி பிரயோகிக்கிறார். அதாவது ஜனாதிபதியின் கட்சி மாகாண சபையொன்றில் பெரும்பான்மை பெற்றிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அம்மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களை ஜனாதிபதி தீர்மானிக்கிறார். இவ்விதமே உள்ளூராட்சி சபையொன்றில் ஜனாதிபதி சார்ந்த கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கின்ற போது ஜனாதிபதியே அவ்வுள்ளூராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் உப தலைவரைத் தீர்மானிக்கிறார். மேலும் மாகாண சபையொன்றை அதன் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னர் கலைக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை அரசியலமைப்பு அதன் முதலமைச்சருக்கு வழங்கியுள்ள போதிலும் ஜனாதிபதியின் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள மாகாண சபை விடயத்தில் அதனைக் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொள்கிறார். அரசியலமைப்பின் 155 பிரிவின் பொதுமக்கள் பாதுகாப்பின் கீழ் ஜனாதிபதி அவசரகால சட்டங்களை இயற்றலாம். நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள  சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பைத் தவிர்ந்த எச்சட்டத்தையும் நீக்க, திருத்த, இடைநிறுத்த அதிகாரங்கொண்டுள்ளார்.  ஜனாதிபதி பிறப்பிக்கின்ற அவசரகால நிலைக்கு 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கினால் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு அமுலிலிருக்கும். பின்னர் பாராளுமன்றம் விரும்பினால் ஒவ்வொரு மாதமும் நீடித்துக் கொள்ளலாம். 

எனினும் 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் அனுமதி வழங்காவிடின் 14 நாட்களின் பின்னர் ஜனாதிபதியின் பிரகடனம் காலாவதியாகிவிடும்.  அரசியலமைப்பின் 129(1) பிரிவின்படி ஜனாதிபதி ஒரு விடயம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனை கேட்கலாம். இதன்படி 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி கேட்ட ஆலோசனைக்கிணங்க பாதுகாப்பு அதிகாரங்கள் ஜனாதிபதியினால் மாத்திரமே பிரயோகிக்கப்பட முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் ஜனாதிபதியின் 2ஆவது பதவிக்காலம் 2010.11.19 ஆம் திகதி ஆரம்பமாவதாக உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருந்தது.  மேலும் ஜனாதிபதி குறித்த நிதியாண்டுக்கான வரவு  செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைத்திருந்தால் புதிய பாராளுமன்றம் கூடும் தினத்திலிருந்து 3 மாதங்களுக்கு பொதுச் சேவைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டு நிதியிலிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரம் கொண்டுள்ளார் (150/3). அத்துடன் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு திகதி நிர்ணயித்திருந்தால் அத்தேர்தலுக்குத் தேவையான செலவுத் தொகையை திரட்டு நிதியிலிருந்து வழங்கலாம் (150/4). முத்துறைகளிலும் பல அதிகாரங்களைப் பிரயோகிக்கும் ஜனாதிபதி; தனியான தேர்தலொன்றின் மூலம் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார். 6 ஆண்டுகள் பதவி வகிக்கும் ஜனாதிபதி எத்தனை தடவைகளும் தெரிவு செய்யப்படலாம். ஜனாதிபதியின் 6 ஆண்டுகள் பதவிக் காலத்தை மாற்றம் செய்வதாயின், பாராளுமன்றத்தில் 2/3 விசேட பெரும்பான்மையுடன் ஒரு மக்கள் தீர்ப்பும் பெறப்பட வேண்டும்.  இவை தவிர பல பதவிக்காலப் பாதுகாப்புகளும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன. 

யாப்பின் 35(1) பிரிவின்படி ஜனாதிபதி அவரது பதவிக் காலத்தில் செய்த, செய்யாது விட்ட எந்தவொரு விடயத்திற்காகவும் அவருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாததுடன் வழக்கு நடவடிக்கைகள் முன் கொண்டு செல்லப்படவும் முடியாது. ஜனாதிபதியின் சம்பளம், படிகள், ஓய்வூதியம் என்பன அவர் முன்னர் வகித்த பதவியிலுள்ளதை விட அதிகமாக இருக்கும்படி பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் அவை திரட்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டும். மேலும் அவை கூட்டப்படலாமே தவிர குறைக்கப்பட முடியாது என அரசியலமைப்பின் 36(1),(3),(4) பிரிவுகள் கூறுகின்றன.  இதன்படி இலங்கையின் ஜனாதிபதிப் பதவி மிகுந்த முக்கியத்துவமுடையதாகவும் நாட்டின் சகல விடயங்களிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாகவும் விளங்குகின்றது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதியுச்ச அதிகாரங்கள் நாட்டில் அனைத்தாண்மை ஆட்சியைக் கொண்டு நடத்தக்கூடிய வகையில் அவரை ஒரு யாப்புசார் சர்வாதிகாரி என்ற நிலையில் அமர்த்தியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. 

Wednesday, September 10, 2014


இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாகக் கடந்த காலங்களில் கிடைத்த வாய்ப்புகளைத் தவற விட்டதையிட்டுக் கவலை தெரிவிக்கும் வகையில் சம்பந்தன் அண்மையில் பேசியிருந்தார். சந்தர்ப்பங்களைத் தவற விட்டதில் சம்பந்தனுக்கும் பங்கு உண்டு. அவ்வாறான சில தீர்மானங்களில் வரும் ஒரு பங்காளி. கிடைத்த சந்தர்ப்பங்களை உணர்ச்சிப் பேச்சுக்கள் மூலமும் வெற்றுக் கோஷங்கள் மூலமும் நிராகரித்த அன்றைய அரசியல் எவ்வளவு தவறானது என்பதை இன்று சம்பந்தன் உணர்வது போல் தெரிகின்றது. முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் இப்படியான கருத்தைச் சம்பந்தன் வெளியிட்டிருக்கின்றார். பல சந்தர்ப்பங்களை நாங்கள் இழந்துவிட்டோம் என்று அப்போது அவர் கூறியதற்கும் கூட்டமைப்புக்குள்ளிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இப்படியான கருத்துகளைத் தெரிவிப்பது விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் என்று எதிர்ப்பாளர்கள் கூறினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயல்பான குணாம்சம் என்று இந்த எதிர்ப்பைக் கூறலாம். தமிழ் அரசியலுக்குத் தலைமை தாங்கும் அரசியல் கட்சியிடம் இருக்க வேண்டிய பிரதான அம்சம் கூட்டமைப்பில் இல்லை. இனப் பிரச்சினையின் தீர்வு பற்றிய ஏகமனதான நிலைப்பாடு கூட்டமைப்பில் இல்லை. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்போரையும் தனிநாடு தான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ளோரையும் தீர்வு பற்றிய எந்த நிலைப்பாடும் இல்லாமல் ஏதேதோவெல்லாம் சொல்லிக் காலங் கடத்துவோரையும் கொண்ட கூட்டாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. 

இவ்வாறாக வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டவர்களின் கூட்டு என்பதாலேயே சம்பந்தன் இழந்த சந்தர்ப்பங்கள் பற்றிப் பேசியபோது எதிர்ப்பு எழுந்தது. இப்போது தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாட்டு வேளையில் சம்பந்தன் மீண்டும் அதே கருத்தைக் கூறியிருக்கின்றனர். உலகின் எந்தவொரு நாடும் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்றும் சம்பந்தன் சொல்கிறார். அதாவது ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்பதையே சம்பந்தன் கூற முற்படுகின்றார். இக்கருத்தைச் சீரணிக்க முடியாத தலைவர்கள் தமிழரசுக் கட்சியிலும் இருக்கின்றார்கள் என்பது சம்பந்தனுக்குத் தெரியும். அவ்வாறிருக்க மீண்டும் அதே கருத்தை முன்னரிலும் பார்க்க வலுவுடன் அவர் முன்வைப்பதற்கான காரணம் என்ன? தனது கருத்து  உட்கட்சி மட்டத்தில் அங்கீகாரம் பெறும் நிலை முன்னரிலும் பார்க்க இப்போது வலுவானதாக இருக்கின்றதென அவர் கருதுகின்றாரா? அல்லது கடசிக்குள்ளே ஒரு கருத்துப் போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றாரா? சம்பந்தன் கூறியது போல் பல சந்தர்ப்பங்கள் தமிழ்த் தலைவர்களுக்குக் கிடைத்தன. இச்சந்தர்ப்பங்களை நிராகரித்ததால் தலைவர்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. கிடைத்த சந்தர்ப்பங்களிலும் பார்க்க தீவிரமான ஒரு நிலைப்பாட்டை உணர்ச்சிகரமான கோஷங்களுக்கூடாக வலியுறுத்தியதன் மூலம் அவர்கள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆனால் இந்த நிராகரிப்புகள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மோசமான பாதைக்குத் திருப்பியதால் மக்கள் இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்ததோடு இனப்பிரச்சினையின் தீர்வும் சிக்கலாகியது. பண்டா செல்வா ஒப்பந்தத்தின் பிரதான சரத்துகளை நடைமுறைக்குக் கொண்டவரக் கிடைத்த சந்தர்ப்பங்களைக் கைநழுவ விட்டதும் சந்திரிகா குமாரதுங்கவின் அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளை நிராகரித்ததும் தமிழ் அரசியல் வரலாற்றில் தலைவர்கள் விட்ட பாரிய தவறுகள். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைச் சிக்கலாக்கும் தவறுகள் முன்னைய அதே பாணியில் இப்போதும் தொடர்கின்றன. 

ஜெனீவா மகாநாடு தொடர்பாகவும் சர்வதேச விசாரணை தொடர்பாகவும் உணர்ச்சியூட்டும் பேச்சுகளையும் வெற்றுக் கோஷங்களையும் இன்றும் கேட்க முடிகின்றது. யுத்தத்தின்போது தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. போர்க்குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையைவிடக் கூடுதலான அக்கறை தமிழ் மக்களுடைய பிரதான பிரச்சினைகளின் தீர்வில் இருக்க வேண்டியது அவசியம். ஜெனீவாத் தீர்மானத்துக்கு அமைவாக சர்வதேச விசாரணை நடந்து அரசாங்கம் குற்றவாளியாகக் காணப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். அதனால் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்கோ வேறு முக்கிய பிரச்சினைகளுக்கோ தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஜெனீவாத் தீர்மானத்தின் சூத்திரதாரிகளான மேற்கத்திய நாடுகள் வேறொரு தளத்தில் நின்றே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுகின்றன. அதில் இனப் பிரச்சினையோ தமிழ் மக்களின் மற்றைய பிரச்சினைகளோ சம்பந்தப்படவில்லை. அரசாங்கத்தைத் தண்டிப்பது அல்லது ஆட்சி மாற்றம் என்ற தங்கள் இலக்கு நிறைவேறினால் மேற்கத்திய நாடுகள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளின் பக்கம் திரும்பப் போவதில்லை. சர்வதேச விசாரணையின் முடிவு இலங்கை அரசாங்கத்துக்குப் பாதகமாக அமைவது இனப்பிரச்சினையின் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர். எவ்வளவுதான் சர்வதேச அழுத்தம் இருந்தாலும் அரசியல் தீர்வில் முக்கியமான பாத்திரம் வகிப்பவர்கள் சிங்கள மக்கள், சர்வசன வாக்கெடுப்பில் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்திலேயே அரசியல் தீர்வு நடைமுறைக்கு வர முடியும். அதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவசியம். மேற்கத்திய நாடுகளின் கூட்டு முயற்சி சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிக்கும் உணர்வலை அரசியல் தீர்வுக்குச்  சாதகமானதாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. 

Sunday, September 7, 2014

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பானுக்குச் சென்று வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பல ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுத் திரும்பி இருக்கிறார். வாராணாசி நகரத்தை மேம்படுத்துவது, புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது, ரூ.2.10 இலட்சம் கோடி நிதியுதவி, பாதுகாப்புத் துறையில் பரஸ்பர உதவி என்று தொடங்கி, ஜப்பானிடமிருந்து பல ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைப் பெற்றிருக்கிறார் பிரதமர். நீண்டகாலமாக முடிவு காணப்படாத இந்திய  ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இந்த விஜயத்திலும் தீர்வு காணப்படவில்லை என்பதுதான் ஒரே குறை. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நல்லுறவு தனித்துவம் வாய்ந்தது. புத்த மதம் ஒரு மிகப்பெரிய பந்தத்தை ஏற்படுத்துகிறது என்றால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கும் அவரது இந்திய தேசிய ராணுவத்துக்கும் ஜப்பான் அளித்த ஆதரவு, சுதந்திரத்திற்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஏற்படுத்தி விட்டிருந்தது. 

பண்டிதர் ஜவஹர்லால் நேருவுக்கும் அன்றைய ஜப்பானியப் பிரதமர் நொபுசுகே கிஷிக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவும், 1957இல் அவரது இந்திய விஜயமும் தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் ஜப்பானிய ஒத்துழைப்பை உறுதிப்படுத்தின. எழுபதுகளில் இந்திய  ஜப்பானிய உறவு சற்றுத் தொய்வை எதிர்கொண்டது என்றாலும், 1980 முதல் 2014 வரையில் எட்டு பிரதமர் விஜயங்கள் உள்ளிட்ட 57 உயர்நிலை ஜப்பானியக் குழுக்கள் இந்திய விஜயத்தை மேற்கொண்டன. அதேபோல, 10 பிரதமர்கள் உள்ளிட்ட 87 உயர்நிலை இந்தியக் குழுக்கள் ஜப்பானுக்குச் சென்று இருதரப்பு ஒப்பந்தங்கள் பலவற்றில் கையொப்பமிட்டிருக்கின்றன. வி.பி. சிங், சந்திரசேகர், தேவெ கௌட, குஜ்ரால் தவிர்த்து, 1980 முதல் எல்லா இந்தியப் பிரதமர்களும் ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே, ஜப்பானிய உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வந்திருப்பது புலப்படும். இந்தியா, ஜப்பான் இரண்டு நாடுகளுக்குமே சீனாவின் வளர்ச்சியும், மேலாதிக்கமும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும்கூட, அதேநேரத்தில் பொருளாதார நிர்பந்தங்கள் சீனாவுடனான உறவைப் பலவீனப்படுத்த முடியாத இக்கட்டிலும் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியாவைவிட இந்த விஷயத்தில் ஜப்பான்தான் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொள்கிறது. 

சீனாவின் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்திற்கு ஜப்பான் மறைமுகக் காரணமாக இருக்கிறது என்கிற உண்மை பலருக்கும் தெரியாது. ஏறத்தாழ 20,000க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவில் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவிலான ஜப்பானின் 3 இலட்சம் கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டின் கணிசமான பகுதி சீனாவில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக ஜப்பான் சீனாவிலான தனது முதலீட்டைக் குறைத்து வருகிறது என்றாலும்கூட, சீனாவைப் பகைத்துக் கொள்வது ஜப்பானியப் பொருளாதாரத்தைத் தகர்த்துவிடக் கூடும் என்பது இரு தரப்பினருக்கும் நன்றாகவே தெரியும். பிரதமர் நரேந்திர மோடி எப்படி இந்தியாவைப் பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் தெற்கு ஆசியாவில் பலம் வாய்ந்த நாடாக மாற்ற விரும்புகிறாரோ, அதேபோல, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும், ஜப்பானின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதுடன் அதன் இராணுவ பலத்தையும் உறுதிப்படுத்த விரும்புகிறார். இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் தடையாக இருப்பது சீனாதான். இந்தியாவும் ஜப்பானும் நெருக்கமடைவதை சீனா நிச்சயமாகக் கவலையுடன் கவனிக்கும்.  ஆசியாவின் வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழையும் சீனா, தன்னுடைய பொருளாதார பலத்தால் எல்லா ஆசிய நாடுகளையும் தனது ஆதரவு வட்டத்திற்குள் இழுத்துக் கொள்ள விரும்புகிறது. அதனால் இந்தியா, ஜப்பான் போன்ற பெரிய பொருளாதாரங்கள் இணைவதை சீனா நிச்சயமாகத் தடுத்து நிறுத்த முற்படும். ஏற்கெனவே, இந்த இரண்டு நாடுகளுடனும் எல்லைப் பிரச்சினை இருப்பதால் சீனாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடியின் ஜப்பான் விஜயம் கவலையளிப்பதாகத்தான் இருக்கும். 

ஜப்பானைத் தொடர்ந்து, வியட்நாம், இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா நேசக்கரம் நீட்ட முற்பட்டிருக்கிறது. விரைவிலேயே, பிரதமர் நரேந்திர மோடி அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்களையும் சந்திக்க இருக்கிறார். ஏனைய நாடுகளின் ராஜதந்திர வலையில், தான் விழுந்து விடாமல், அவர்களிடமிருந்து இந்தியாவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி அடங்கி இருக்கிறது. 

Friday, August 22, 2014


முழங்கும் பீரங்கிகளின் சத்தம், போர் விமானங்களின் உறுமல், ராக்கெட் குண்டுகளால் சிதறும் கட்டிடங்களிலிருந்து வெளிவரும் அலறல், அபயக் குரல். இதுவே குழந்தைகளின் அன்றாட வாழ்வாகிப்போவது உலகின் பெரும் துயரம். அதிலும் பாலஸ்தீனத்தில் இப்போது கோடை விடுமுறை. ஆனால், குழந்தைகளுக்குக் கொண்டாட்டமில்லை. உயிரிழந்தவர்கள், அடைக்கலம் தேடி வெளியேறிவர்கள் தவிர அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். வீடுகளுக்குள் தொலைக்காட்சியில் எந்நேரமும் தாக்குதல் காட்சிகள். பாலஸ்தீனத்துக் குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் சிதைக்கப்படும் காட்சிகளையும் நார்நாராகக் கிழிக்கப்படும் காட்சிகளையும் மனம் உறுத்தாமல் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகள் உமிழ்ந்துகொண்டிருக்கின்றன. மறந்துவிட வேண்டாம். அனைத்து வீடுகளிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். இதுதான் அன்றாட வாழ்வு என அவர்கள் நினைக்கிறார்கள். இவர்களின் எதிர்காலம் என்னாகும்? இவர்களின் மனநிலையைத் தேற்றுவது எப்படி? கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் அங்கு பீரங்கி முழக்கங்களுக்கு மத்தியிலேயே பிறந்து, வளர்ந்து மடிந்துள்ளது. தொலைவில் தற்போது, முன் எப்போதையும்விட மிகக் கொடூரமாக காஸாவைத் தாக்கிவருகிறது இஸ்ரேல் ராணுவம். தரை வழியாகவும் தாக்கி, சுற்றிவளைத்துக் கடைசி பாலஸ்தீனர் வரை அழித்தொழிப்போம் என அங்குள்ள வலதுசாரிகள் கொக்கரிக்கிறார்கள். பள்ளிகள், மைதானங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் எனக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 600 குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கான சிறார்கள் உடல் சிதைந்து, சின்னாபின்னப்பட்டு மருத்துவ சிகிச்சையின்றி அவதிப்படுகின்றனர். காஸாவிலிருந்து ராமி அல்மிகாரி என்ற செய்தியாளர் இப்படிக் கூறுகிறார்: 

என் மகன் முகமது வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறான். அவனுக்குத் தொலைக்காட்சிதான் ஒரே பொழுதுபோக்கு. தொலைக்காட்சியோ யுத்தக் காட்சிகளையே அள்ளித் தெளித்துக்கொண்டு இருக்கிறது. "என் தம்பியைக் காப்பாற்றுங்கள்'என்று ஒரு செய்தி. அதில் குண்டுகளால் சிதைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் ஒரு சிறுவனின் புகைப்படம் காண்பிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பால் சிதைந்த கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் அவன். நினைவு திரும்பியவுடன் அவன் கூறிய வார்த்தை "தம்பி' என்பதுதான். ஆனால், மீட்கப்பட்ட சிறுவர்களில் அவனுடைய தம்பி இல்லை. ஆனால், அவனுடைய தம்பிதான் அதிகமாகக் காயமடைந்து இடுபாடுகளில் சிக்கியிருப்பதாகவும், அவனைக் காப்பாற்றும்படியும் மருத்துவர்களிடம் அந்தச் சிறுவன் கூறியதாக அந்தச் செய்தி முடிகிறது. இந்தச் செய்திகளின் நடுவிலும், போர் விமானங்களின் உறுமல்களுடனும் சத்தங் களுடனும்தான் சிறார்கள் வாழ வேண்டியுள்ளது. இந்தப் போர், குழந்தைகளின் மனதை வெகுவாகப் பாதித்துள்ளது என்கிறார். அவர் மேலும் எழுதுகிறார்:  "என் மகன் முகமதுவுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. ஆனால், அவன் காலை உணவின்போது, "பாலஸ்தீனத்துக்கு 11 மில்லியன் டாலர்கள் உதவி செய்ய ஜெர்மனி முன்வந்துள்ளது நல்ல விஷயம்' என்று கூறியபோது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மேலும் சொல்கிறார்: ஒருமுறை மசூதியிலிருந்து திரும்பும் வழியில் "இப்போது 2014. போர் நடக்கிறது. முன்பு 2012 இலும் போர் நடந்தது. இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை போர் நடக்கிறது, இல்லையா அப்பா?' என்று அவன் கேட்டான். 2008 இல் போரின்போது அவன் சிறு குழந்தையாக இருந்தான். ஒருநாள் ரேடியோவுக்கான பேற்றரிகளை மாட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென நினைவு வந்தவனாக "இரண்டு ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தபோது மின்சாரம் நன்றாக இருந்தது. இப்போதெல்லாம் தினமும் மூன்று மணி நேரம், ஆறு மணி நேரம்தான் மின்சாரம் இருக்கிறது' என்றான். அந்நிய நாடுகள் நிதியுதவி, ஐ.நா. தீர்மானம், செஞ்சிலுவைச் சங்கம், போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, மீண்டும் தாக்குதல் ஆரம்பம் போன்ற செய்திகள் குழந்தைகளின் மனநிலையை ஆழமாகப் பாதிக்கின்றன. இத்தகைய பிஞ்சுகள் நாளை என்ன மாதிரியான மனிதர்களாக உருவாவார்கள்? இஸ்ரேல் தாக்குதல்கள் இன்றைய சிறார்களை என்ன மாதிரியாக வளர்த் தெடுக்கும்? என்ற ஐயங்களை எழுப்புகிறார் ராமி அல்மிகாரி. போர் தொடங்கிய காலம் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை. செப்டம்பரில் மீண்டும் பள்ளிகள் திறக்க வேண்டும். 

போர் நீடித்தால் டிசம்பர் வரை பள்ளிகளைத் திறப்பது கடினம். காஸாவில் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல், தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் போல நவீன கால வரலாறு எங்கும் காண முடியவில்லை என்று மத்திய கிழக்குப் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். ஆனால், அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சர்வதேச சமுதாயத்தின் உதவிகள், முக்கியமாக மருத்துவ உதவிகள், கிடைப்பதேயில்லை. தற்போதைய சூழ்நிலையில் இஸ்ரேல் முற்றுகையைத் தகர்க்கும் வகையில், கடல் வழியாக மருத்துவக் கப்பல்கள் மூலம் மருத்துவ உதவிகளை அளிப்பது ஒன்றுதான் காஸாவுக்குள் முடக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்குச் சாத்தியமான வழி என்கிறார்கள். குறிப்பாக, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்க வேண்டியது மிக அவசரம், அவசியம் என வலியுறுத்துகிறார்கள். தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அனைத்து வசதிகளும்கொண்ட பிரம்மாண்டமான மருத்துவக் கப்பல்கள் உள்ளன. ஆனால், உதவுவதற்கான மனமும் துணிவும் சர்வ தேசச் சமுதாயத்துக்கு இருக்கின்றனவா என்பதுதான் சந்தேகம்! 

Tuesday, June 24, 2014


சிறு­பான்மை சமூ­க­மொன்றின் மீது கட்ட­விழ்த்து விடப்­ப­டு­கின்ற அதி தீவிர வன்­மு­றை­களின் உச்­சக்­கட்ட நிகழ்­வுதான் களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­நகர் மற்றும் பதுளை, தெஹி­வளைப் பகு­தியில் நடந்த கொடு­மை­களும் கொடூ­ரங்­க­ளு­மாகும். சுதந்­தி­ரத்­துக்கு பின்­னைய கடந்த ஆறரை தசாப்த காலத்தில் இலங்­கையில் வாழு­கின்ற சிறு­பான்மை சமூகம் அமை­தி­யா­கவும் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­ஷ­மா­கவும் வாழ்ந்­த­தாக சரித்­திரக் குறிப்பில் எந்த இடத்­திலும் எழு­தப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.இந்த வன்­மங்­களும் இனச்­சீ­றல்­களும் கொடு­மை­களும் ஏன் நடக்­கின்­றன என்­ப­தற்­கு­ரிய நதி மூலமும் இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத சூத்­தி­ர­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள தர்­கா­நகர், பேரு­வளை பகு­தியில் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட இனச்­சீ­ற­லுக்கு நான்கு அப்­பாவி மக்கள் கொல்­லப்­பட்டும் 80 பேருக்கும் மேற்­பட்­ட­வர்கள் படு­கா­ய­ம­டைந்தும் கோடிக்­க­ணக்­கான சொத்­துக்கள் துவம்சம் செய்­யப்­பட்டும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்டும் ஒரு அனர்த்த விழாவைக் கொண்­டா­டி­யி­ருக்­கி­றது பேரி­ன­வாத சமூ­கத்தின் அமைப்­பொன்று.
 
வாள்­வெட்டு, பொல்­லடி, கல்­லெறி, கடை­யெ­ரிப்பு, துப்­பாக்­கிச்­சூடு, சூறை­யாட்டம் என்று எல்லா வகை கொடூ­ரங்­களும் இங்கே நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாது­காக்க வேண்­டிய சீருடை பிர­ம்மாக்கள் கைகட்டி பார்த்துக் கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார்கள். அளுத்­கம நகரில் கூட்டம் போட்டு பேசிய பொது பல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இன­வாத விஷத்தை இப்­படி கக்­கி­யி­ருக்­கின்றார். இந்­நாட்டில் நாங்கள் சிங்­களப் பொலிஸை வைத்­தி­ருக்­கிறோம், சிங்­கள இரா­ணுவம் இருக்­கின்­றது. இவற்றின் பின் மரக்­க­லா­யவோ அல்­லது ஒரு­ப­றை­யாவோ சிங்­க­ள­வரைத் தொட்டால் அதுவே அவர்­க­ளது முடி­வாகும்.இதைப் பேசி­யவர் பௌத்த மதத்தின் பஞ்­ச­சீலக் கொள்­கை­களை தாரக மந்­தி­ர­மாக உச்­ச­ரிக்கும் ஒரு பௌத்த துறவி.
 
சில தினங்­க­ளுக்கு முன் அளுத்­கம நகரில் பிக்கு ஒரு­வரை முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் தாக்­கி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்டு இதன் எதிர்­வி­ளை­வாக பொது ப­ல­ சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மையில் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை, அளுத்­கம நகரில் கூட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது. இதன் திட்­ட­மிட்ட விளை­வாக வன்­மு­றைகள் அந்­ந­கரில் வெடித்­தன. இன­மு­று­கலை ஏற்­ப­டுத்த நடத்­தப்­படும் இக்­கூட்­டத்தை தடை செய்­யு­மாறு முஸ்லிம் அர­சியல் வாதிகள், அமைப்­புகள், அப்­பாவி முஸ்லிம் மக்கள் பொலி­ஸா­ரிடம் மன்­றாட்­ட­மான கோரிக்கை விட்­டி­ருந்­துங்­கூட அக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. கூட்­டத்தின் முடிவில் பல லொறி­களில் வந்து இறங்­கிய காடையர் கூட்­ட­மொன்று இணைந்த முறையில் இந்த இனக்­கொ­டூரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருக்­கி­றது. ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் பயம், பீதி கார­ண­மாக பள்­ளி­வா­சல்­களில் தஞ்சம் கோரி­யி­ருந்­துள்­ளனர். ஊர்­வலம் நடத்­தப்­பட்டு லொறி­களில் கொண்டு வரப்­பட்ட காடையர் கும்­பலின் பலத்­துடன் துவம்ஷ விழா நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இது இலங்கை வர­லாற்றில்
 
முஸ்லிம் சமூ­கத்­துக்­கெ­தி­ராக கட்ட­விழ்த்து விடப்­பட்ட பாரிய கொடுமை, கொடூரம் என்­பதை எல்­லோரும் ஏற்­றுக்­கொண்­டுதான் ஆக வேண்டும்.2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் யுத்­தத்தைத் தொடர்ந்து இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்டு வரும் வன்­மு­றை­களும் வன்­மங்­களும் ஏராளம் என்­பதை யாரும் நிரா­க­ரித்­து­விட முடி­யாது. அளுத்­கம நகரின் அட்­டூ­ழி­யங்­களை தொடர்ந்து சம நேரத்தில் இன்னும் பல சம்­ப­வங்­களும் குரோ­தங்­களும் நடந்­தே­றி­யுள்­ளன என்­ப­தற்கு பதி­வாக கடந்த ஜூன், 16 ஆம் திகதி, அதே பொது­ப­ல­சேனா அமைப்­பினால் பதுளை நகரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்டம் கார­ண­மாக அப்­ப­கு­தியில் பெரும் பதற்றம் நில­வி­யி­ருக்­கின்­றது. பதுளை சிறைச்­சா­லைக்கு முன் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக ஊர்­வலம் நடத்­தப்­பட்­ட­துடன் வர்த்­தக நிறு­வ­னங்­களை மூடு­மாறும் ஆர்ப்­பாட்­டக்­காரர் பலாத்­காரம் செய்­துள்­ளனர். இதே­நேரம் தெஹி­வளை ஸ்டேசன் வீதி­யி­லுள்ள பிர­பல மருந்­த­க­மொன்று இரவு தாக்­கப்­பட்­ட­துடன் தீயிட்டு கொளுத்­தப்­பட்டும் உள்­ளது.
 
அண்­மைக்­கா­ல­மாக குறிப்­பாக முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக தூண்டி விடப்­படும் சம்­ப­வங்­களும் கெடு­தி­களும் அதி­க­ரித்துக் கொண்­டே­யி­ருக்­கின்­றன. மிக அண்­மையில் பட்­டிப்­பளை பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்­துக்குள் புகுந்து பிர­தேச செய­லா­ளரை மங்­க­ளா­ரா­மய விகா­ரா­தி­பதி தாக்­க­மு­யன்ற சம்­பவம். இதேபோன்று இந்­துக்­க­ளுக்குச் சொந்­த­மான அகஸ்­தியர் ஸ்தாப­னத்தை மீள் அமைக்க விடாமல் ஒரு பிக்­குவின் அட்­ட­காசம் தொடக்கம் பல விட­யங்கள் மத­கு­ரு­மார்­க­ளா­லேயே முன்­னெ­டுத்துச் செல்­லப்­படும் கேவ­லங்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்­டே­யி­ருக்­கின்­றன. முஸ்லிம் மக்கள் வாழும் பிர­தே­சங்­களை உடைப்­பது, சுவீ­க­ரிப்­பது, பள்­ளி­வா­சல்கள், கடைகள், சொத்­துக்கள் என்ற வகையில் அழிப்­புக்கு உள்­ளாக்­கு­வது போன்ற இன்­னோ­ரன்ன கெடு­தி­களும் இனக்­கு­ரோத செயல்­களும் வளர்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன.
 
தம்­புள்ள பள்­ளி­வாசல் என்று அழைக்­கப்­படும் ஹைரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் விகா­ரை­யொன்­றினை தலைமை மத­குரு ஒரு­வரால் (20 ஏப்ரல், 2012) தாக்­கப்­பட்­டது. குரு­நாகல் மாவட்­டத்­தி­லுள்ள உமர் இப்னு கத்தர் குர் ஆன் மத­ர­ஸாவில் தொழுகை நடத்­து­வதை நிறுத்­து­மாறு குரு­மார்கள் தலை­மையில் ஆர்ப்­பாட்டம், இதேபோன்று குரு­நாகல் மாவட்டம் தெதுரு ஓயா­கம தாருல் அக்ரம் தக்­கி­யாவில் இரவு நேரத் தொழு­கையை நிறுத்­து­மாறு பௌத்த மத­கு­ரு­மார்­களின் தலை­மையில் ஆர்ப்­பாட்டம் செய்­யப்­பட்­ட­தோடு தொழுகை நடத்­து­வது நிறுத்­தப்­பட்­டமை, இதே போன்றே தெஹி­வளை பீரிஸ் மாவத்­தை­யி­லுள்ள தாருல் அக்ரம் குர் ஆன் மத்­ர­ஸாவில் தொழுகை நடத்­து­வதை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிறுத்­தி­யமை போன்ற இன்­னோ­ரன்ன சம்­ப­வங்கள் நடந்த வண்­ணமே இருந்­தி­ருக்­கி­றது.
 
இதுமாத்­தி­ர­மன்றி, புத்தர் சிலை அமைப்பு, ஹலால் போராட்டம் என்ற எத்­த­னையோ வகை­யான இடைஞ்­சல்­களும் இடை­யீ­டு­களும் சிறு­பான்மை சமூ­க­மான முஸ்லிம் சமூ­கத்­துக்­கெ­தி­ராக நடத்­தப்­பட்­டன, நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள கரு­ம­லை­யூற்று என்னும் கிரா­மத்தில் அமைந்­தி­ருக்கும் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் 175 வருட கால பழைமை வாய்ந்த பள்­ளி­வா­ச­லாகும் (1837). இங்கு சுமார் 400 குடும்­பங்­க­ளுக்கு மேல் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரு­கின்­றார்கள். அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தொழுகை நடத்த முடி­யாத நிலை­யொன்று கொண்ட பள்­ளி­வா­ச­லாக அது காணப்­ப­டு­கி­றது. இதே­போன்றே மூதூர் ஜபல் நகர் மலைப்­ப­கு­தியில் பௌத்த விகா­ரையோ, புத்­த­ர்சி­லையோ எக்­காலப் பகு­தி­யிலும் இருந்­த­தில்லை. ஆனால், அண்­மையில் நடந்ததென்ன? முஸ்லிம் மக்கள் சுற்­றி­வளைத்து வாழும் இம்­மலைப் பிர­தே­சத்தில் விகா­ரை­யொன்று அமைக்­கப்­பட்டு அது பௌத்த புனித தல­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
 
இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­ல் பலாங்­கொடை பிர­தே­சத்­தி­லுள்ள ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு பௌத்த தீவி­ர­வா­திகள் எதிர்ப்புக் காட்­டி­யமை, மாத்­தறை கந்­தர பள்­ளி­வாசல் (09.02.2013) தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யமை, காலி ஹிரும்­புரை முஹை­யதீன் ஜும் ஆப் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டமை, கேகாலை முஹைதீன் ஜும்ஆப் பள்­ளி­வாசல் கல்­வீச்சு தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை போன்ற நூற்­றுக்­க­ணக்­கான சம்­ப­வங்கள் கடந்த இரண்டு, மூன்று வரு­டங்­க­ளுக்குள் நடந்து கொண்­டமை, முஸ்லிம் மக்­களை பயத்­துக்கும் பீதிக்கும் உள்­ளாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.
 
இது ஒரு­பு­ற­மி­ருக்க, முஸ்லிம் மக்­களின் கலா­சார இருப்­புக்கள் மீதும் பேரினச் சமூ­கத்தின் கை நீட்­டல்கள் அதி­க­மாகிக் கொண்­டன என்­ப­தற்கு அடை­யா­ள­மாக, ஹலால் என்ற மாயையை உரு­வாக்கி அதன்­மீது காட்­டப்­பட்ட எதிர்ப்­புகள், ஆர்ப்­பாட்­டங்கள் என்­பன குறித்து மக்கள் சமூ­கத்தை ஓடோட விரட்டும் சம்­ப­வங்­க­ளாக பார்க்­கப்­ப­டு­கின்­றன. ஹலால் எதிர்ப்­புக்­கான சுவ­ரொட்­டிகள் நாடு தழு­விய ரீதியில் எல்லா இடங்­க­ளிலும் ஒட்­டப்­பட்­டன.
 
குரு­நாகல் மாவட்­டத்தில் (11.02.2013), காலியில் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ரான சுவ­ரொட்­டிகள், (14.02.2013) இதே மாதம் 21ஆம் திகதி கண்டி மாவட்­டத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ரான சுவ­ரொட்­டிகள் என்­ப­வற்­றுடன் களுத்­துறை மாவட்டம் பேரு­வளை பிர­தேச சபைக்கு சொந்­த­மான தர்கா நகரில் மாடு அறுப்­ப­தற்கு (2.3.2013) எதிர்ப்புக் காட்­டப்­பட்­டமை, ஹலால் சான்­றிதழ் உட­ன­டி­யாக வாபஸ் பெறப்­பட வேண்­டு­மென ஷரீஆ சட்­டங்­க­ளுக்கு இந்­நாட்டில் இட­ம­ளிக்க முடி­யாது. இஸ்­லா­மிய வங்­கி­முறை, காதி நீதி­மன்றம் முத­லி­யவை தேவை­யற்­றவை என பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தமை, (27.02.2013) மாத்­தறை மாவட்­டத்தில் நுபே பகு­தியில் வகுப்­புக்குச் சென்று திரும்பிக் கொண்­டி­ருந்த மாண­விகள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­னமை, கண்டி போதனா வைத்­தி­ய­சா­லை­யிலும் முஸ்லிம் பெண் தான் அணிந்­தி­ருந்த அபா­யா­வையும், ஹிஜா­பையும் அகற்­று­மாறு அங்கு கட­மை­யி­லி­ருந்த தாதி­யினால் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டது (8.03.2013) போன்ற ஆயிரக்கணக்­கான சம்­ப­வங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் கலா­சாரம், பொரு­ளா­தாரம், சமூக விழு­மி­யங்கள் போன்ற எல்லாத் துறை­க­ளையும் நெருக்­கடி நிலைக்கு உள்­ளாக்கும் கொடு­மை­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றது.
 
இஸ்­லா­மிய சமூ­கத்தை பொறுத்­த­வரை இந்த நாட்டின் தேசிய அர­சி­ய­லு­டனும் பெரும்­பான்மை இனத்­து­டனும் ஒத்­துப்­போகும் சமூ­க­மா­கவே அவர்கள் இருந்து வந்­துள்­ளார்கள். அது­வு­மன்றி இந்த நாட்­டி­லுள்ள எல்லா பிர­தே­சங்­க­ளிலும் பரந்து வாழும் ஒரு சமூ­க­மா­கவும் அவர்கள் வாழ்ந்து வரு­வது இன்­னு­மொரு வகை பல­மா­கவும் இருக்­கின்ற நிலையில் அவர்கள் மீது அடிக்­கடி நடத்­தப்­படும் இந்த வகை இன வீச்­சுக்கள் அவர்­க­ளுக்கு மனக் கஷ்­டத்­தையும் விரக்­தி­யையும் வழங்­கு­கின்ற அசம்­பா­வி­தங்­க­ளா­கவே ஆகி­வி­டு­கின்­றன. இலங்கை வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு உரங்­கொண்டு நிற்­கின்ற இன­வாத அமைப்­புக்­களும் கட்­சி­களும் தலை­வர்­களும் நல்­லி­ணக்கம், தேசிய ஒற்­றுமை, இன ­உ­றவு, மத சமத்­தன்மை ஆகிய அனைத்­துக்கும் குந்­தகம் விளை­விக்கும் கைங்­க­ரி­யங்­க­ளி­லேயே ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருப்­பதை இலங்கை அர­சாங்கம் கண்டும் காணா­மலும்தெரிந்தும் தெரி­யா­மலும் ஏன் நடந்து கொள்­கி­றது என்­பது புரி­யா­த­தொரு விட­ய­மா­கவே காணப்­படு­கி­றது.
 
பொது­ப­ல­சேனா, ஹெல­ உ­று­மய, ராவண பலய என்ற அமைப்­புக்­களின் அண்­மைக்­கால உரு­வாக்கம் இலங்கை அர­சி­ய­லுக்கு எல்லா வகை­யிலும் பாரிய சவா­லா­கவே அமைந்து காணப்­ப­டு­வதை யாரும் புரிந்து கொள்ளும் தன்­மையில் இல்­லை­யென்­பதே உண்மை. இதில் பொது­ப­ல­சேனா என்ற அமைப்பின் நடி­பங்கு அதி­க­மா­கவும், அதி தீவி­ர­மா­கவும் காணப்­ப­டு­கி­றது என்­பது அர­சாங்­கத்­துக்கு மட்­டு­மல்ல அகில உல­கத்­துக்கும் தெரிந்த ஒரு விட­ய­மாகும். 2013ஆம் ஆண்டு இந்த அமைப்பு மாவ­னல்­லை­யென்னும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான ஒன்­று­கூ­ட­லொன்றை நடத்­தி­யது (25.2.2013.) இதன்­போது முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்­பு­நிற ஹிஜாப் ஆடையை தடை செய்­வது குறித்து இந்த அமைப்­பினர் ஆலோ­சனை நடத்­தினர். சவூ­தியின் அடிப்­படை வாதத்­தையும் தீவி­ர­வாதக் கொள்­கை­யையும் இலங்­கையில் முஸ்­லிம்கள் பரப்­பு­கின்­றனர் என்று குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தனர். இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையை புலிகள் இயக்­கத்­துடன் ஒப்­பிட்டுக் கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தார்கள். இப்­படி பார்க்­கு­மி­ட­மெங்கும் நீக்­க­மற என்று குறிப்­பி­டு­வ­து­போல முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ரான கெடு­பி­டி­களும், கொடு­மை­களும் தாக்­கு­தல்­களும் அழிப்­புக்­களும் அட்­டூ­ழி­யங்­களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்­கின்­றன. இந்த நிலையில் முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களும், அதைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற கட்­சி­களும் தங்கள் எதிர்­கால சமூக வர­லாற்றை எவ்­வாறு அழைத்துக் கொண்டு செல்­லப்­போ­கின்­றார்கள் என்பதிலேயே முஸ்லிம் அப்பாவி மக்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பது சொல்லாமலே புரியப்பட வேண்டிய விடயமாகும்.
 
உலக நாடு­களைப் பொறுத்த வரை சில நாடு­களில் ஐம்­ப­துக்கு மேற்­பட்ட தேசிய இனங்கள் வாழு­கின்ற நாடு­கள்­கூட இருக்­கின்­றன. அந்த நாடு­க­ளி­லெல்லாம் அந்த தேசிய இனங்­களின் பொரு­ளா­தாரம், வாழ்க்கை முறைகள், பண்­பா­டுகள், மதப் பாரம்­ப­ரி­யங்கள், மொழிகள் என்­பன மதிக்­கப்­ப­டு­வதும் சமத்­தன்­மை­யோடு பேணப்­ப­டு­வதும் ஒரு உயர்ந்த அர­சியல் தத்­து­வ­மாக இருக்­கின்­ற­போது ஆகக்­கூடிய மூன்று தேசிய இனங்கள் வாழு­கின்ற இந்த சின்­னஞ்­சி­றிய நாட்டில் ஒரு மதத்­தி­ன­ருக்கு இன்னொரு மதத்தினரோடு உடன்பாடில்லை.
 
ஒரு மொழியைப் பேசு­கின்­ற­வர்கள் இன்­னு­மொரு மொழி பேசு­கின்­ற­வர்­களை விரும்­பு­வ­தில்­லை­யென்ற நாக­ரீக­மற்ற அர­சியல் போக்­கு­களும் மத அனுட்­டா­னங்­களும் சமூக குறி­காட்­டி­களும் நிறைந்த ஒரு நாடா­கவே இலங்­கை­யென்னும் தீவு சுதந்­தி­ரத்­துக்குப் பின் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது கவலை தரு­கின்ற விட­யந்தான்.இத்­த­கைய கெடு­தி­க­ளுக்கும் ஊறு விளை­விப்­புக்கும் கார­ண­மா­ன­வர்கள் யார் என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட வேண்டும். வெறும் அர­சியல் பீடத்தில் ஏறி இருந்து கொண்டு இந்த நாட்டை மத­வாத, இன­வாத நாடாக்க முனையும் ஒவ்­வொ­ரு­வரும் அதற்­கான பலனை அனு­ப­விக்க வேண்­டிய காலத்தை அழைப்­பதை விடுத்து சமத்­து­வ­மான, சமா­தா­ன­மான, இணக்­க­பூர்­வ­மான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முனையாதவரை எதையுமே வென்றெடுக்க முடியாது.