சிறுபான்மை சமூகமொன்றின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அதி தீவிர வன்முறைகளின் உச்சக்கட்ட நிகழ்வுதான் களுத்துறை மாவட்டத்திலுள்ள அளுத்கம, பேருவளை, தர்காநகர் மற்றும் பதுளை, தெஹிவளைப் பகுதியில் நடந்த கொடுமைகளும் கொடூரங்களுமாகும். சுதந்திரத்துக்கு பின்னைய கடந்த ஆறரை தசாப்த காலத்தில் இலங்கையில் வாழுகின்ற சிறுபான்மை சமூகம் அமைதியாகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்ததாக சரித்திரக் குறிப்பில் எந்த இடத்திலும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை.இந்த வன்மங்களும் இனச்சீறல்களும் கொடுமைகளும் ஏன் நடக்கின்றன என்பதற்குரிய நதி மூலமும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சூத்திரமாகவே காணப்படுகின்றது. களுத்துறை மாவட்டத்திலுள்ள தர்காநகர், பேருவளை பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனச்சீறலுக்கு நான்கு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் 80 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தும் கோடிக்கணக்கான சொத்துக்கள் துவம்சம் செய்யப்பட்டும் கொள்ளையடிக்கப்பட்டும் ஒரு அனர்த்த விழாவைக் கொண்டாடியிருக்கிறது பேரினவாத சமூகத்தின் அமைப்பொன்று.
வாள்வெட்டு, பொல்லடி, கல்லெறி, கடையெரிப்பு, துப்பாக்கிச்சூடு, சூறையாட்டம் என்று எல்லா வகை கொடூரங்களும் இங்கே நடந்தேறியிருக்கின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய சீருடை பிரம்மாக்கள் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அளுத்கம நகரில் கூட்டம் போட்டு பேசிய பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இனவாத விஷத்தை இப்படி கக்கியிருக்கின்றார். இந்நாட்டில் நாங்கள் சிங்களப் பொலிஸை வைத்திருக்கிறோம், சிங்கள இராணுவம் இருக்கின்றது. இவற்றின் பின் மரக்கலாயவோ அல்லது ஒருபறையாவோ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களது முடிவாகும்.இதைப் பேசியவர் பௌத்த மதத்தின் பஞ்சசீலக் கொள்கைகளை தாரக மந்திரமாக உச்சரிக்கும் ஒரு பௌத்த துறவி.
சில தினங்களுக்கு முன் அளுத்கம நகரில் பிக்கு ஒருவரை முஸ்லிம் இளைஞர்கள் சிலர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு இதன் எதிர்விளைவாக பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அளுத்கம நகரில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இதன் திட்டமிட்ட விளைவாக வன்முறைகள் அந்நகரில் வெடித்தன. இனமுறுகலை ஏற்படுத்த நடத்தப்படும் இக்கூட்டத்தை தடை செய்யுமாறு முஸ்லிம் அரசியல் வாதிகள், அமைப்புகள், அப்பாவி முஸ்லிம் மக்கள் பொலிஸாரிடம் மன்றாட்டமான கோரிக்கை விட்டிருந்துங்கூட அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பல லொறிகளில் வந்து இறங்கிய காடையர் கூட்டமொன்று இணைந்த முறையில் இந்த இனக்கொடூரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பயம், பீதி காரணமாக பள்ளிவாசல்களில் தஞ்சம் கோரியிருந்துள்ளனர். ஊர்வலம் நடத்தப்பட்டு லொறிகளில் கொண்டு வரப்பட்ட காடையர் கும்பலின் பலத்துடன் துவம்ஷ விழா நடத்தப்பட்டிருக்கின்றது. இது இலங்கை வரலாற்றில்
முஸ்லிம் சமூகத்துக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய கொடுமை, கொடூரம் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் வன்முறைகளும் வன்மங்களும் ஏராளம் என்பதை யாரும் நிராகரித்துவிட முடியாது. அளுத்கம நகரின் அட்டூழியங்களை தொடர்ந்து சம நேரத்தில் இன்னும் பல சம்பவங்களும் குரோதங்களும் நடந்தேறியுள்ளன என்பதற்கு பதிவாக கடந்த ஜூன், 16 ஆம் திகதி, அதே பொதுபலசேனா அமைப்பினால் பதுளை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியிருக்கின்றது. பதுளை சிறைச்சாலைக்கு முன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஊர்வலம் நடத்தப்பட்டதுடன் வர்த்தக நிறுவனங்களை மூடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர் பலாத்காரம் செய்துள்ளனர். இதேநேரம் தெஹிவளை ஸ்டேசன் வீதியிலுள்ள பிரபல மருந்தகமொன்று இரவு தாக்கப்பட்டதுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டும் உள்ளது.
அண்மைக்காலமாக குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கெதிராக தூண்டி விடப்படும் சம்பவங்களும் கெடுதிகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. மிக அண்மையில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் காரியாலயத்துக்குள் புகுந்து பிரதேச செயலாளரை மங்களாராமய விகாராதிபதி தாக்கமுயன்ற சம்பவம். இதேபோன்று இந்துக்களுக்குச் சொந்தமான அகஸ்தியர் ஸ்தாபனத்தை மீள் அமைக்க விடாமல் ஒரு பிக்குவின் அட்டகாசம் தொடக்கம் பல விடயங்கள் மதகுருமார்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்படும் கேவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களை உடைப்பது, சுவீகரிப்பது, பள்ளிவாசல்கள், கடைகள், சொத்துக்கள் என்ற வகையில் அழிப்புக்கு உள்ளாக்குவது போன்ற இன்னோரன்ன கெடுதிகளும் இனக்குரோத செயல்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன.
தம்புள்ள பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் விகாரையொன்றினை தலைமை மதகுரு ஒருவரால் (20 ஏப்ரல், 2012) தாக்கப்பட்டது. குருநாகல் மாவட்டத்திலுள்ள உமர் இப்னு கத்தர் குர் ஆன் மதரஸாவில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு குருமார்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம், இதேபோன்று குருநாகல் மாவட்டம் தெதுரு ஓயாகம தாருல் அக்ரம் தக்கியாவில் இரவு நேரத் தொழுகையை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டமை, இதே போன்றே தெஹிவளை பீரிஸ் மாவத்தையிலுள்ள தாருல் அக்ரம் குர் ஆன் மத்ரஸாவில் தொழுகை நடத்துவதை உத்தியோகபூர்வமாக நிறுத்தியமை போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் நடந்த வண்ணமே இருந்திருக்கிறது.
இதுமாத்திரமன்றி, புத்தர் சிலை அமைப்பு, ஹலால் போராட்டம் என்ற எத்தனையோ வகையான இடைஞ்சல்களும் இடையீடுகளும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்துக்கெதிராக நடத்தப்பட்டன, நடத்தப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கருமலையூற்று என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் கருமலையூற்று பள்ளிவாசல் 175 வருட கால பழைமை வாய்ந்த பள்ளிவாசலாகும் (1837). இங்கு சுமார் 400 குடும்பங்களுக்கு மேல் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தொழுகை நடத்த முடியாத நிலையொன்று கொண்ட பள்ளிவாசலாக அது காணப்படுகிறது. இதேபோன்றே மூதூர் ஜபல் நகர் மலைப்பகுதியில் பௌத்த விகாரையோ, புத்தர்சிலையோ எக்காலப் பகுதியிலும் இருந்ததில்லை. ஆனால், அண்மையில் நடந்ததென்ன? முஸ்லிம் மக்கள் சுற்றிவளைத்து வாழும் இம்மலைப் பிரதேசத்தில் விகாரையொன்று அமைக்கப்பட்டு அது பௌத்த புனித தலமாக்கப்பட்டிருக்கிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பிரதேசத்திலுள்ள ஜெய்லானி பள்ளிவாசலுக்கு பௌத்த தீவிரவாதிகள் எதிர்ப்புக் காட்டியமை, மாத்தறை கந்தர பள்ளிவாசல் (09.02.2013) தாக்குதலுக்கு உள்ளாகியமை, காலி ஹிரும்புரை முஹையதீன் ஜும் ஆப் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை, கேகாலை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமை போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் கடந்த இரண்டு, மூன்று வருடங்களுக்குள் நடந்து கொண்டமை, முஸ்லிம் மக்களை பயத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்கப்பட்ட சம்பவங்களாகவே கருதப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, முஸ்லிம் மக்களின் கலாசார இருப்புக்கள் மீதும் பேரினச் சமூகத்தின் கை நீட்டல்கள் அதிகமாகிக் கொண்டன என்பதற்கு அடையாளமாக, ஹலால் என்ற மாயையை உருவாக்கி அதன்மீது காட்டப்பட்ட எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள் என்பன குறித்து மக்கள் சமூகத்தை ஓடோட விரட்டும் சம்பவங்களாக பார்க்கப்படுகின்றன. ஹலால் எதிர்ப்புக்கான சுவரொட்டிகள் நாடு தழுவிய ரீதியில் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டன.
குருநாகல் மாவட்டத்தில் (11.02.2013), காலியில் முஸ்லிம் மக்களுக்கெதிரான சுவரொட்டிகள், (14.02.2013) இதே மாதம் 21ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கெதிரான சுவரொட்டிகள் என்பவற்றுடன் களுத்துறை மாவட்டம் பேருவளை பிரதேச சபைக்கு சொந்தமான தர்கா நகரில் மாடு அறுப்பதற்கு (2.3.2013) எதிர்ப்புக் காட்டப்பட்டமை, ஹலால் சான்றிதழ் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டுமென ஷரீஆ சட்டங்களுக்கு இந்நாட்டில் இடமளிக்க முடியாது. இஸ்லாமிய வங்கிமுறை, காதி நீதிமன்றம் முதலியவை தேவையற்றவை என பொதுபலசேனாவின் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தமை, (27.02.2013) மாத்தறை மாவட்டத்தில் நுபே பகுதியில் வகுப்புக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த மாணவிகள் தாக்குதலுக்கு உள்ளானமை, கண்டி போதனா வைத்தியசாலையிலும் முஸ்லிம் பெண் தான் அணிந்திருந்த அபாயாவையும், ஹிஜாபையும் அகற்றுமாறு அங்கு கடமையிலிருந்த தாதியினால் நிர்ப்பந்திக்கப்பட்டது (8.03.2013) போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம், பொருளாதாரம், சமூக விழுமியங்கள் போன்ற எல்லாத் துறைகளையும் நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கும் கொடுமைகளாகவே காணப்படுகிறது.
இஸ்லாமிய சமூகத்தை பொறுத்தவரை இந்த நாட்டின் தேசிய அரசியலுடனும் பெரும்பான்மை இனத்துடனும் ஒத்துப்போகும் சமூகமாகவே அவர்கள் இருந்து வந்துள்ளார்கள். அதுவுமன்றி இந்த நாட்டிலுள்ள எல்லா பிரதேசங்களிலும் பரந்து வாழும் ஒரு சமூகமாகவும் அவர்கள் வாழ்ந்து வருவது இன்னுமொரு வகை பலமாகவும் இருக்கின்ற நிலையில் அவர்கள் மீது அடிக்கடி நடத்தப்படும் இந்த வகை இன வீச்சுக்கள் அவர்களுக்கு மனக் கஷ்டத்தையும் விரக்தியையும் வழங்குகின்ற அசம்பாவிதங்களாகவே ஆகிவிடுகின்றன. இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு உரங்கொண்டு நிற்கின்ற இனவாத அமைப்புக்களும் கட்சிகளும் தலைவர்களும் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, இன உறவு, மத சமத்தன்மை ஆகிய அனைத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டுக்கொண்டிருப்பதை இலங்கை அரசாங்கம் கண்டும் காணாமலும்தெரிந்தும் தெரியாமலும் ஏன் நடந்து கொள்கிறது என்பது புரியாததொரு விடயமாகவே காணப்படுகிறது.
பொதுபலசேனா, ஹெல உறுமய, ராவண பலய என்ற அமைப்புக்களின் அண்மைக்கால உருவாக்கம் இலங்கை அரசியலுக்கு எல்லா வகையிலும் பாரிய சவாலாகவே அமைந்து காணப்படுவதை யாரும் புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லையென்பதே உண்மை. இதில் பொதுபலசேனா என்ற அமைப்பின் நடிபங்கு அதிகமாகவும், அதி தீவிரமாகவும் காணப்படுகிறது என்பது அரசாங்கத்துக்கு மட்டுமல்ல அகில உலகத்துக்கும் தெரிந்த ஒரு விடயமாகும். 2013ஆம் ஆண்டு இந்த அமைப்பு மாவனல்லையென்னும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் முஸ்லிம்களுக்கெதிரான ஒன்றுகூடலொன்றை நடத்தியது (25.2.2013.) இதன்போது முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்புநிற ஹிஜாப் ஆடையை தடை செய்வது குறித்து இந்த அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். சவூதியின் அடிப்படை வாதத்தையும் தீவிரவாதக் கொள்கையையும் இலங்கையில் முஸ்லிம்கள் பரப்புகின்றனர் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை புலிகள் இயக்கத்துடன் ஒப்பிட்டுக் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இப்படி பார்க்குமிடமெங்கும் நீக்கமற என்று குறிப்பிடுவதுபோல முஸ்லிம் மக்களுக்கெதிரான கெடுபிடிகளும், கொடுமைகளும் தாக்குதல்களும் அழிப்புக்களும் அட்டூழியங்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் முஸ்லிம் தலைமைத்துவங்களும், அதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளும் தங்கள் எதிர்கால சமூக வரலாற்றை எவ்வாறு அழைத்துக் கொண்டு செல்லப்போகின்றார்கள் என்பதிலேயே முஸ்லிம் அப்பாவி மக்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பது சொல்லாமலே புரியப்பட வேண்டிய விடயமாகும்.
உலக நாடுகளைப் பொறுத்த வரை சில நாடுகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழுகின்ற நாடுகள்கூட இருக்கின்றன. அந்த நாடுகளிலெல்லாம் அந்த தேசிய இனங்களின் பொருளாதாரம், வாழ்க்கை முறைகள், பண்பாடுகள், மதப் பாரம்பரியங்கள், மொழிகள் என்பன மதிக்கப்படுவதும் சமத்தன்மையோடு பேணப்படுவதும் ஒரு உயர்ந்த அரசியல் தத்துவமாக இருக்கின்றபோது ஆகக்கூடிய மூன்று தேசிய இனங்கள் வாழுகின்ற இந்த சின்னஞ்சிறிய நாட்டில் ஒரு மதத்தினருக்கு இன்னொரு மதத்தினரோடு உடன்பாடில்லை.
ஒரு மொழியைப் பேசுகின்றவர்கள் இன்னுமொரு மொழி பேசுகின்றவர்களை விரும்புவதில்லையென்ற நாகரீகமற்ற அரசியல் போக்குகளும் மத அனுட்டானங்களும் சமூக குறிகாட்டிகளும் நிறைந்த ஒரு நாடாகவே இலங்கையென்னும் தீவு சுதந்திரத்துக்குப் பின் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது கவலை தருகின்ற விடயந்தான்.இத்தகைய கெடுதிகளுக்கும் ஊறு விளைவிப்புக்கும் காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். வெறும் அரசியல் பீடத்தில் ஏறி இருந்து கொண்டு இந்த நாட்டை மதவாத, இனவாத நாடாக்க முனையும் ஒவ்வொருவரும் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய காலத்தை அழைப்பதை விடுத்து சமத்துவமான, சமாதானமான, இணக்கபூர்வமான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முனையாதவரை எதையுமே வென்றெடுக்க முடியாது.
No comments:
Post a Comment