கூட்டமைப்புக்குரிய அதிகார உரிமை தங்களுக்கே இருப்பதால் அப் பெயரைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றுத் தருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகப் பத்திரிகைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது. குறித்த கோரிக்கைக் கடிதத்தின் உள்ளடக்கத்தை வாசித்த போது நாற்பதாண்டு காலத்திற்கு முந்திய உண்மை வரலாற்றை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படுத்தாது விடுவது சமுதாயத்திற்குச் செய்யும் துரோகம் என்றாலும் அது தவறல்ல. பல்வேறு வழிகளில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து விட்ட தவறுகளைச் சீர்செய்து,ஏற்படுத்தப்பட்ட தடைகள் இனியும் ஏற்படாமல் இருக்க வழி காண்பதே புத்தசாலித்தனமாகும். வரலாற்றுத் தவறுகள் தொடர்ந்து நிகழாதிருக்க வரலாற்று அறிவு அவசியம். ஜனநாயக நாடான இலங்கையில் எச்சமுகத்தினர் மத்தியிலாவது பாரம்பரிய அரச பரம்பரையினர் எவரும் அரசியல் நடத்தவில்லை. முறையாகக் கற்றறிந்த முனிவர்களிடம் அரசியல் அறிவு பெற்றவர்களுமில்லை. அதுமட்டுமல்ல பட்டத்து யானை மாலை போட்டு அரசாளத் தெரிவு செய்தவர்களோ அன்றி பண்டைய தமிழர் வழக்கப்படி குடவோலை மூலம் கற்றறிந்தோர் மத்தியிலிருந்து அரசாளத் தெரிவு செய்யப்பட்டவர்களுமல்ல.
தம்மைத் தாமே தலைவர்களாக முன்னிருத்தி அரசியல் நடத்துவோரே சகலரும் என்ற உண்மை வெளிப்படையானது. தம்மைத் தாமே மக்கள் சேவை செய்யவென்று புறப்பட்டுள்ளதாகப் பிரகடனப்படுத்தி வெளிப்படுபவர்களில் மக்கள் நம்பிக்கையை அதிகம் பெற்றவர்கள் அல்லது தமது சாதுர்யத்தால் மக்களைக் கவர்ந்தவர்கள் அரச நிர்வாக அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். அதுவே ஜனநாயகமென்று கூறப்படுகின்றது. நம்பப்படுகின்றது. மக்களின் நோக்கைப் பிரதிபலிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்ந் து ஒரே நோக்கில் செயற்படுவதுமில்லை. தமது இயலாமையை உணர்ந்து வெளியேறுவதுமில்லை. ஆனால், சுக போகங்களை அனுபவிக்கமட்டும் தயங்குவதில்லை. இது ஜனநாயகத்தின் சாபக் கேடாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு 2001 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மத்தியிலே இயங்கிய அரசியல் அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு என்ற கருத்து தவறானது. உண்மை அதுவல்ல. உதய சூரியன் சின்னம் தேர்தல் சின்னமாக முதலில் பயன்படுத்தப்பட்ட ஆண்டு 2002 அல்ல 1977 ஆம் ஆண்டே. குறித்த சின்னம் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டமை வரலாற்றுப் பதிவாகும். தனித்தனியாக இயங்கிய தமிழர் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்த ஆண்டு 1972 ஆகும். அன்று கொண்டு வரப்பட்ட நாட்டின் அரசியல் அமைப்பில் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக ஆராய 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் கூடிய தமிழ் அரசியல் அமைப்புகளின் கூட்டத்திலேயே ஒற்றுமைக்க õன அடித்தளம் இடப்பட்டது. அதற்காகப் பாடுபட்டவன் என்ற முறையில் உண்மையை வெளிப்படுத்தும் சமூகப் பொறுப்பு எனக்கும் உண்டு. இலங்கைத் தமிழரசுக் கட்சி , அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம், அடங்காத் தமிழர் முன்னணி ஆகிய வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டியங்கிய தமிழ் அரசியல் அமைப்புகள் நான்கும் மலையகத்தின் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுமாக ஐந்து பெறுமதிமிக்க தமிழ் அமைப்புகளால் அன்று விதைக்கப்பட்டதே தமிழர் கூட்டணி என்ற அமைப்பு.
ஒன்றுபட்ட தமிழர்களின் தனியமைப்பாக உருவாகிய தமிழர் கூட்டணியின் முப்பெருந்தலைவர்களாக சௌமியமூர்த்தி தொண்டமான், ஜீ.ஜீ. பொன்னம்பலம் , எஸ். ஜே.வி. செல்வநாயகம் ஆகியோர் தெரிவாகினர். அமைப்பு ரீதியாகச் செயற்படத் தொடங்கிய தமிழர் கூட்டணியின் பெயர் கூட்டணித் தலைமையின் அனுமதியின்றி ஒரு சிலரால் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது. இதைத் தொண்டமான் எதிர்த்தார். தமிழர் நலனுக்காகத் தனிப்பட்ட அரசியல் , கொள்கை வேறுபாடுகளுக்கப்பால் சிந்தித்து உருவாக்கப்பட்ட அமைப்பு சகல தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கிச் செயற்பட வேண்டுமேயன்றி ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பது தொண்டமான் அவர்களது வாதமாயமைந்தது. அது நியாயமானதாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயர் மாற்றம் ஒன்றுபட்ட தமிழரின் அமைப்பில் விரிசலை ஏற்படுத்தியது. இதுவே உண்மை. தலைவர்களை நம்பி மக்கள் செம்மறியாடுகளைப் போல் போக முடியாது. போகவும் கூடாது. எவரையும் குறை கூறவோ புண்படுத் தவோ எண்ணவில்லை. ஆனால் மறுக்க முடியாத, மறைக்க முடியாத அரசியல் சம்பவங்களை நினைத்துப் பார்ப்பது தவிர்க்க வொண்ணாததாகின்றது. வரலாற்று நிகழ்வுகளை மாற்றியமைப்பது , மறுப்பது இலங்கை வரலாற்றில் யாழ்ப்பாணத் தமிழ் அரசு இருந்ததென்பதை மறைத்துள்ளது போலாகிவிடும். அதேபோல் தமிழ் அரசு அலுவலர் சிங்களம் படிக்கக் கூடாதென்று வலியுறுத்திய தமிழரசுக் கட்சி 1965 இல் டட்லி சேனாநாயக்கவின் அரசில் அங்கம் பெற்றவுடன் கொள்கையை மாற்றி தமிழ் அரசு அலுவலர் சிங்களம் படிக்க வேண்டும் ,தேர்ச்சி பெறவேண்டும் .
இன்றேல் அரசு சேவையிலிருந்து எந்தவொரு கொடுப்பனவுமின்றி நீக்கப்பட வேண்டும் என்ற விதியை ஏற்றுக் கொண்டதை மறைப்பது போலாகிவிடும். மதிப்புக்குரிய ஆனந்தசங்கரி அவர்கள் 1965 இல் கிளிநொச்சியில் லங்கா சமசமாஜக் கட்சியில் போட்டியிட்டார். 1970 இல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் போட்டியிட்டு வென்றார். தமிழ்க் காங்கிரஸில் வென்ற வட்டுக் கோட்டை ஆ.தியாகராஜா மற்றும் நல்லூரின் சி. அருளம்பலம் ஆ கியோருடன் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு ஆதரவு தந்தார். இரண்டு ஆண்டுகள் அன்றைய ஆட்சியில் தமிழ்க் காங்கிரஸில் வென்ற மூவரும் அங்கம் வகித்தனர் என்பது வரலாற்றுப் பதிவு . 1972 இல் தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்ட காலத்தில் குறித்த மூவரும் ஆளும் கட்சி ஆதரவாளர்களாகவே செயற்பட்டனர். றோயல் கல்லூரி நவரங்கஹலவில் நடைபெற்ற அரசியல் அமைப்பு உருவாக்கக் கூட்டத்திலிருந்து செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட் சி வெளிநடப்பு செய்தபோது எழுந்து நின்று இரு கைகளையும் தூக்கி அசைத்து டாட்டா போய் வாருங்கள் . இனித் திரும்பி வர வேண்டாம் என்று கூறிய வடமாகாணத் தமிழ்ப் பிரதிநிதி யார் என்பதை பத்திரிகைகள் அன்று பகிரங்கப்படுத்தியமையும் தெளிவானது. அரசியல் கட்சிகள் தேர்தலில் வாக்குகளைப் பெருக்கி வெற்றி பெறுவதற்காகவும் அதேபோல் வெற்றி வாய்ப்புள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் அமைப்பு எது என்று நாடிபிடித்துப் பார்த்து பக்கம் சார்வதும் அரசியல் வாதிகளதும் அரசியல் கட்சிகளதும் நிலையாயுள்ளது. ஜனநாயகச் சீர்கேடாகவும் இதைக் குறிப்பிடலாம். மக்கள் பிரதிநிதிகளாக சுயநலமின்றி நேர்மையாக மக்களின் விருப்பத்தைப் புறந்தள்ளாது செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பை ஏற்க முன்வருபவர்களின் கடந்த கால வரலாற்றை ஆராயும் பக்குவம், புத்தி அற்றதாக சமுதாயம் உள்ளவரை தவறான அரசியல் செயற்பாடுகளால் சமூகமும் நாடும் நாசமடைவதைக் கடவுளால் கூட தடுக்க முடியாது. 1972 இல் தமிழர் கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட போது இன்று புதிதாக அரசியல் அமைப்புகளாகக் குறிப்பிடப்படும் எவையும் இருக்கவில்லை. தலைமைகள் தலைவர்கள் நிறைந்த இனமாக இன்று தமிழர்கள் உள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயர் அன்று பயன்படுத்தப்பட்டமை தமிழரின் அரசியல் களங்கமாகிவிட்டது என்பது வரலாற்றின் தெளிவான பக்கமாகும். 1972 இல் முதலில் கூடிய தலைவர்களில் இன்றும் இருப்பவர்கள் மதிப் புக்குரிய எம்.எஸ். செல்லச்சாமி மட்டுமே. அன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அ. அமிர்தலிங்கம், வி.தர்மலிங்கம், மு. சிவசிதம்பரம் , வ. நவரத்தினம் போன்றோர் இன்று நம் மத்தியிலே இல்லை. அவர்கள் மறைந்தாலும் அவர்கள் தொடக்கி வைத்த அரசியல் பயணம் பங்கம் இன்றி தொடர வேண்டியது கட்டாயமானது. அரசியல் என்பது புனிதமானது. அதை இன்று மதிப்பிறக்கம் செய்து அருவருப்பானதாக மாற்றிய பாவம் பொறுப்பற்ற அரசியல் வாதிகளையே சாரும். இன்று ஒரு அரசியல் வாதியோ, மக்கள் பிரதிநிதியோ தம்மை சகலகலாவல்லவர்களாக எடை போட் டுக் கொண்டுள்ளனர் என்றால் அதுவே யதார்த்த நிலையாயுள்ளது. இதை மறுப்பதற்கில்லை. நாட்டில் நிலவும் பிரச்சினைகள், அவற்றின் மூலங்கள் யாவற்றையும் தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் அவற்றிற்குத் தீர்வு காணும் வழிமுறைகளைத் தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் தமக்கு அதிகாரம் கிட்டினால் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றும் மந்திரவாதிகளைப் போல் பிதற்றுவதும் உருவேறி உரக்கக் குரலிடுவதும் நடைமுறையிலுள்ளன. இது சகல இன, மத, மொழிச் சமூகத்தவருக்கும் பொருந்தும். அரசியல் வாதிகளின் கூத்தாட்டத்தை நம் நாட்டில் இன்று மதத் தலைவர்கள் பலரும் கூட சுவீகாரம் எடுத்து விட்டார்கள். அரச அலுவலர்கள் நாட்டின் நிர்வாகத்தைப் பாகுபாடின்றி சட்ட விதிமுறைகளின்படி செயற்படுத்தும் பொறுப்புக்குரியவர்கள். நாட்டின் பொது நிதியை விதிமுறைகளுக்கிணங்க, மக்களின் நன்மைக்காகச் செலவிட்டு நாட்டுக்குப் பணியாற்றுபவர்கள் அரச அலுவலர்கள். அவர்களுக்கு அதற்காகப் பொது நிதியிலிருந்து ஊதியம் வழங்கப்படுகின்றது. அதேபோல் பொது நிதியை நாட்டின் நலனுக்காக உரியபடி செலவிட கொள்கை வகுத்துக் கொடுக்கும் பொது நிதியிலிருந்து ஊதியம் பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள்.முன்னையவர்களுக்குக் கல்வித் தகைமை உட்பட பல்வேறு தகைமை எதிர்பார்க்கப்படுகின்றது. பின்னவர்களுக்கு குறிப்பிட்ட தகைமைகள் எதுவும் அவசியப்படுவதில்லை. சாதாரண பொது மக்களில் எவராவது பொய் சொன்னால், ஏமாற்றினால் , வஞ்சித்தால் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால் குற்றவாளியா கக் காணப்பட்டால் தண்டனைக்குள்ளாக்கப்படுவர். தேர்தலின் போது ஒன்றைக் கூறி மக்களை உசுப்பேற்றி ஆதரவாக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றபின் கட்சி மாறி, கொள்கை மாறி மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்துத் தமது சொந்த இலாபங்களுக்காக விலைபோகும் அரசியல்வாதிகளை அவர்களின் வரலாற்றை அவர்களின் செயற்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்பையிட்டு ஆராயாத, கவலைப்படாத சமூகத்திற்கு என்றும் விடிவில்லை என்ற உண்மை புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இன்று தமிழர் மத்தியிலே தேர்தல் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் முப்பதை எட்டிவிட்டன. பதிவு செய்யப்படாது இயங்குபவை அதை விட அதிகம். ஏழு பேர் ஒன்றிணைந்தால் ஒரு தொழிற் சங்கம் அமைக்கலாம் என்பது நடைமுறையிலுள்ள விதி. அதைப் பயன்படுத்தி சந்தா வசூல் செய்து தமது வருமானத்தை ஈட்டிக் கொள்ளவென்றே பலர் தொழிற்சங்கங்கள் அமைத்துள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அரசியல் அமைப்புகளின் உருவாக்கம், குறிப்பாகத் தமிழர் மத்தியிலே தேவைக்கதிகமான உருவாக்கம் தொடர்பில் ஆராய்ந்த போது ஒரு சில விடயங்கள் அம்பலமாகியுள்ளன. தேர்தலில் வெற்றி பெறுவது நோக்கமல்ல என்பதும் தேர்தல்களின் போது தமிழர்களது வாக்குகள் ஓரணியில் செலுத் தப்படாது சிதைவுபடுத்துவதன் நோக்கிலேயே பல அரசியல் அமைப்புகள் தமிழர் மத்தியிலே விதைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணி தேர்தல்களில் வாக்குகளைப் பிளவுபடுத்தி அதற்கான ஊதியத்தை வேறு வழிகளில் ஈட்டிக் கொள்வதாகும். ஒப்பந்தத்திற்குக் கொலை செய்வது போன்று இதுவும் ஒரு சமுதாய நலனைக் கொலை செய்யும் செயலாகும். அரசியல் என்பது இன்று உழைக்கும் வழியாகவும் வயிறு கழுவும் வழியாகவும் பரிணமித்து விட்டது . கேவலப்படுத்தப்பட்டு விட்டது. நாட்டின் மக்கள் அமைதியாக, நிம்மதியாக சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும். அதற்கு ஏற்ற வழிவகைகள் காண வேண்டும். அதுவே கௌரவமான அரசியல்வாதிகளின் சிந்தனையாக இருக்க வேண்டும்.
நம் நாட்டிலோ மக்களை மொழி, சமய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அதிலும் தமிழ் மக்கள் பல்வேறு அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியவர்களாகவுள்ளனர். மொழி உரிமை, சமய உரிமை, தமது சொந்த மண்ணில் நிம்மதியாகக் குடியிருக்கும் உரிமை, கல்வி, தொழில் உரிமைகள் என்று பலவாறு விரிவடைகின்றது. தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டோர் கவனம் அவற்றிலேயே செலுத் தப்பட வேண்டும் . அதுவே பண்பு. அதை விடுத்து கோள் சொல்லியும் காட்டிக் கொடுத்தும் விதண்டாவாதம் பேசியும் பயனற்ற அறிக்கைகளை வெளியிட்டும் குட்டையைக் குழப்புதல் பண்புடையதுமல்ல. ஏற்புடையதுமல்ல. அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல,சகலருக்கும் இது பொருந்தும். தமது செயற்பாடுகளால் சமூகத்திற்கு ஏற்படப் போகும் பின் விளைவுகளையிட்டு சிந்திக்க முடியாதவன் மக்கள் தலைவனுமாகமாட்டான், மக்கள் நம்பிக்கைக்குரியவனுமாகமாட்டான். தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் அரசியல்வாதிகள், குறித்த சமுதாயத்தின் சாபக்கேடுகளாகவே கணிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. இன்று தமிழர் கூட்டமைப்போ, தமிழர் விடுதலைக் கூட்டணியோ, தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழ்க் காங்கிரஸோ என்பது முக்கியமல்ல தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் நம்பிக்கை வைத்து தமது வாக்குகள் மூலம் தமது பிரதிநிதித்துவ அமைப்பாக வெளிப்படுத்திய அமைப்பில் பிளவோ அன்றி தெரிவான பிரதிநிதிகள் மத்தியில் ஒன்றுபட்ட செயற்பாட்டிற்குத் தடையோ ஏற்படாமல் காப்பதே முதன்மையான நோக்காக அமைய வேண்டும். 2001 ஆம் ஆண்டிற்குப் பின்னரான வரலாற்றை வெளிப்படுத்துபவர்கள் அதற்கு முந்தைய முப்பது ஆண்டுகளுக்குரிய வரலாற்றையும் தெரிந்து வைத்திருப்பது காலத்தின் தேவை. கடந்து வந்த நம்மவரின் அரசியல் வரலாறும் அவர்கள் காலத்திற்குக் காலம் உதிர்த்த பொன் மொழிகளும் ஆய் வு செய்யப்படின் பல உண்மைகள் வெளிப்படும். சில போற்றத் தக்கவையாகவும் பல வெட்கப்படத்தக்கவையாயும் கணிப்பிடப்படும். அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்ற முதுமொழியை மறக்கக் கூடாது.
No comments:
Post a Comment