அரசியல்வாதிகள் அறநெறிகள் தடம்புரண்டு ஆடுவதையும் துப்பாக்கிகள் ஏந்தி வெறியாட்டம் ஆடுவதையும் அவ்வப்போது காண நிர்ப்பந்திக்கப்படும் இலங்கையில் பிக்குகளின் கேவலமானதும் அவமானதுமான கும்மாளங்களுக்கும் எத்தகைய பஞ்சமுமில்லை.மக்கள் பிரநிதிகளான அரசியல் அதிகாரவாதிகள் பண்புடனும் மாண்புடனும் நடக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்ற சமூகத்தில் குன்றிய ஒழுக்கப் பண்புகளுடனும் சமூகச் சீர்கேடான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றமைக்கான பிரதான காரணம் தகைமையீனமே என்பது பொதுவாகவும் ஜனாதிபதி வரையிலும் பேசப்படுகின்ற, பேசப்பட்டுள்ள விடயமாக மாறியுள்ளது.
கல்வித் தகைமையின் முக்கியத்துவம்
தகுதி,தராதரம் பாராமல் ஒரு சிலரிடம் அரசியல் அதிகாரம் சென்றடைவதால் எச்ச சொச்சமாகவும் சொற்பமாகவும் அரசியலுக்கிருக்கின்ற மரியாதை மங்கிச் செல்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தகைமையற்றவர்களின் கரங்களில் அதிகாரம் இருப்பது பகைமைகளை வளர்ப்பதற்கே துணை புரிவதாக உணரப்படுகின்ற ஒரு கால கட்டத்தில் கல்வித் தகைமைகள் மாத்திரமன்றி காருண்யத் தகைமைகளும் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் கூறுகின்றனர். கல்வித் தகைமை கொண்டவர்களே தேர்தல்களில் போட்டி போட்டு மக்கள் பிரதிநிதிகளாக மிளிரலாம் என்று வந்தால் ஏற்கனவே பெயருக்கும் புகழுக்கும் பணத்துக்கும் பிரபல்யத்துக்கும் விளையாட்டுக்கும் சினிமாவுக்கும் பண்பட்டுப்போய் காணப்படுகின்ற இலங்கையின் அரசியல், சவால்மிக்கதாகவும் சாந்தம் கொண்டதாகவும் மாற இடமுண்டு. கல்வியறிவும் ,கல்வித் தகைமையும் கொண்ட அரசியல் சமூகம் இருப்பது விட்டுக் கொடுத்தல் , பரஸ்பர புரிந்துணர்வு, தேசியப் பிரச்சினைக்கான தீர்வுகளை தேட முனைகையில் முரண்பாடற்ற நிலை போன்றவற்றுக்கு களமமைத்துக் கொடுக்கும்.
மக்களின் வாழ்நாள் கனவு
சிந்தனை முதிர்ச்சி பெற்ற ஒரு அரசியல் சமூகத்தை இலங்கை தேடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய தேடல் கால கட்டத்தில் வெளியாகியிருக்கும் ஜனாதிபதியின் கருத்து காலத்தின் தேவையை சுட்டிக்காட்டியது. இது நடக்குமா ? நடக்காதா ? அல்லது செய்வாரா ? செய்ய மாட்டாரா ? என்ற கேள்விகளுக்கு விடை காண்பதற்கு அப்பால் அவர் கூறிய விடயங்களை எடுத்து நோக்குகையில் ஜனாதிபதி ராஜபக்ஷ, சங்கைக் குரிய சிறி விமல தேரரிடம் கருத்துக் கூறினார்.அதாவது அரசியலுக்குள் தகுதியானவர்களையும் தரம்மிக்கவர்களையும் உள்ளீர்க்கும் வகையில் அரசியல் அமைப்பிலும் திருத்தங்களை அறிமுகப்படுத்த நோக்கங்கள் கொண்டுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் அரசியல் வாதிகளுக்கான தகைமைகளாக பட்டங்கள், பட்டப்பின் படிப்பு தகைமைகள் காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டத்தவறவில்லை.வாய் மொழியாக வந்த அவரது வார்த்தைகள், இதற்கு முந்திய அரசியல் தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை உறுதியாக நினைவுக்குக் கொண்டு வர முடியாதவையாகும். கல்வித் தகைமை, கோட்பாடுகள், தியாகம், அர்ப்பணிப்பு, நேர்மை , திறமைகள், ஆளுமை போன்ற சிறப்புகளுடன் தங்களது பிரதிநிதிகளைக் காண வேண்டும் என்ற பல நூறாயிரம் மக்களின் வாழ்நாள் கனவை ஜனாதிபதியின் கருத்து நனவாக்கும் என்பதில் ஐயமில்லை.
தேரரின் கருத்து
நாட்டில் காணப்படுகின்ற ஒரு எதிர்பாராத விதமான அறநெறிச் சீர்குலைவை கெட்டம்பே ராஜோ பவனாராமயவின் பிரதம சங்க நாயக்கர் சங்கைக்குரிய கெப்பட்டியாகொட சிறிவிமல தேரர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.நாட்டின் சங்க நாயக்கர்களால் ஒழுக்கப் பண்புகள், சிறப்புகள் தொடர்பில் குறிப்புகள் சொல்லப்பட்ட இடம் முக்கியமானதாகக் கூறப்படுகிறது. முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் சர்ச்சைக்குரிய நிலையை எட்டியதாக சுட்டிக்காட்டப்படுகின்ற தலத்தின் அதிபதி விமல தேரர் மேலும் தெரிவிக்கையில்;கல்வித் தகைமைகள் மாத்திரமன்றி வெளிப்படையாக சமூகப் பெறுமானங்களையும் மதிக்கத்தக்கவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குறிப்பாக பௌதீக நற்சான்று அடைவதையும் விட ஆவன நற்சான்றடைவது சுலபமானதாகையால் நாட்டு அரசியல் வாதிகளின் ஒழுக்கப் பண்பு தொடர்பில் அக்கறைப்பட்டார். நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அடிபணிந்தும் தத்தமது சமயங்களின் கோட்பாடுகளை மதித்தும் நடக்கின்ற அரசியல் சமூகத்தை அவர் எதிர்பார்க்கிறார்.
தர்க்கமும் இலக்கும்
அரசியல் கோட்பாடுகள் என்று பார்க்கையில் அரசியல்வாதிகளுக்கான கல்வித் தகைமைகள் என ஜனாதிபதியால் உதாரணத்துக்குக் கூறப்பட்ட பாகிஸ்தானில் வேறுபல நாடுகளைப் போன்று தோல்வியடைந்த கதை என்று கூறப்பட்டது.அந்த வகையில் கல்வித் தகைமைகளுடன் மாத்திரம் ஒரு சமூகத்தின் மரியாதையையும் ஒழுக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது என்ற தர்க்கமுமுண்டு. என்றாலும் அத்தகைய கல்வித் தகைமை குறித்த இலக்கிணை அடைவதற்குரிய பங்களிப்பினை நல்க முடியும்.இத்தகைய நிலைமைகளை சரிக்கட்டுவதற்கான பண்பியல் கடப்பாடு அரசுக்கு இருக்க வேண்டும் என்பது வலியுறுத்துப்பட்டதுடன் நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சி அரசியல் வாதிகள் சிலரில் ஒழுக்கச் சீர்கேடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.
நல்லாட்சிக்கு ஒரு வித்து
எது எப்படியிருந்த போதிலும் அரசியல்வாதிகளுக்கான ஒரு அடிப்படைத் தகைமை அரசியல் அமைப்பின் படியும் தேர்தல் சட்டங்களின் படியும் நிர்ணயமாகுமானால் திட்டவட்டமான ஒரு பங்களிப்பை நல்லாட்சிக்கு வழங்கும் . நல்லாட்சிக்கான கூறுகளை அழித்து வரும் விடயத்தில் அரசியல் வாதிகளின் தகைமையீனமும் ஒன்று எனில் தப்பு என்பதற்கில்லை.கடந்த தேர்தலில் தானும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியை காண்பித்தே தேர்தலில் வெற்றி பெற்றேன் என்று ஒரு முக்கிய அரசாங்க அரசியல் அதிகாரி கூறுகின்றமையும் ஒரு நல்லாட்சி கேலிக் கூத்தாகும். கடந்த காலத்தில் நடைபெற்ற சகல தேர்தல் காலத்தின் போதும் அநேகமாக சகல அரசியல் கட்சிகளும் சினிமா, பணபலம், சதையில் காணப்படக் கூடிய வதை போன்ற பிறதுறைகளில் இருந்த பிரபல்யம் உள்ளிட்டதாக எவ்வாறோ வேட்பாளர்களின் திறமைகளையும் ஆற்றல்களையுமே கவனித்தன.
அத்தகையோரின் கல்வித்தகைமைகளோ, அரசியல் தகைமைகளோ சீர்தூக்கிப் பார்க்கப்படவில்லை. நல்ல வழியிலோ, கெட்ட வழியிலோ தேர்தல்களை வெல்வதே கட்சிகளதும் கட்சிக்காரர்களதும் நோக்கமாக இருந்தது. ஜனாதிபதி கூறியது போன்று சட்ட வாக்கமூடாக சகல தேர்தல்களிலும் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கான குறைந்த கல்வித் தகைமைகளையாவது நிர்ணயிப்பது ஓரளவுக்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவலாம். அதற்குக் கூட சம்பந்தப்பட்ட தகைமைகள் , ஒழுக்க விவகாரங்களை உள்ளடக்க வேண்டும்.
கசப்பான உண்மை
சுதந்திர இலங்கையில் காணப்பட்டு வருகின்ற எத்தகைய தேர்தல் சட்டங்களிலும் பேசப்படுவது போன்று தகைமைக் கூறுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை காண முடியவில்லை. பக்குவம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.பணம் இருந்தால் போதும் என்றடிப்படையில் வேட்பாளர்களும் வாக்காளர்களும் கருதுவது பரிதாபமானதாகும். குறைந்த பட்சம் தேசியத் தேர்தல்களாகக் கருதப்படுகின்ற பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் போன்றவற்றில் கூட தரம், தகுதி நிர்ணயமாகாதுள்ளமை நல்லாட்சித் தன்மையை மேலும் பலவீனமடையச் செய்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தையும் தேர்தல்கள் சட்டத்தையும் சேர்த்து வாசிக்கின்றபோது வாக்களிக்கத் தகுதி பெற்ற ஒவ்வொருவரும் வேட்பாளராக இருக்க முடியும் என்பதை அறியமுடிகிறது. அரசியல் அமைப்பின் 90, 91 ஆம் உறுப்புரைகளின் படி தகைமைகளாகக் கருதப்படுபவை எதுவும் கல்வித் தகைமைகளையோ, ஒழுக்கத் தகைமைகளையோ அன்றி அரசியல் ரீதியான தகைமையீனங்களைப் பற்றியே கூறுகின்றன.
பொது அபிப்பிராயம்
சிலர் கலாநிதிப் பட்டங்களையோ அல்லது க.பொ.த. உயர்தர, சாதாரண தர சித்தியையோ கொண்டிராத போதிலும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கின்றனர். எனவே ஒவ்வொரு தனிநபரும் சட்டதிட்டங்களை மதித்து நடத்தலே முதல் படியாகும். அதேநேரம் பொதுச் சேவைக்கோ, தனியார் ஸ்தாபனத்துக்கோ ஆட்சேர்ப்பு நடைபெறுகையில் சம்பந்தப்பட்டோர் அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருப்பது கட்டாயமானதாகும்.இந்த வரிசையில் ஏன் அரசியல்வாதிகளுக்கும் ஒரு அடிப்படைத் தேவைப்பாட்டினை வகுக்கக் கூடாது என்ற கேள்வியுண்டு. வேட்பாளர்களின் நேர்மைத் தன்மையிலும் பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையுண்டு.சமகால அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் சபா நாயகர் சபையை விட்டு தான் வெளிநடப்புச் செய்யப்போவதாக மிரட்டுகின்றளவுக்கு உறுப்பினர்களின் பாராளுமன்றப் பங்களிப்பு , எதிரணியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பாங்கு, பிரசன்னமாகும் பாங்கு, விவாதங்களில் பங்கேற்றல் குறைபாடு போன்ற விவகாரங்களும் கல்வித் தகைமையீனத்தோடு கைகோர்க்கின்றன.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தக்க சமயத்தில் தேரரிடமிருந்து வந்த கேள்விக்கு தக்க பதிலளித்திருப்பாராகில் எதுவும் நடக்கப் போவதில்லை.சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கூறுவது போன்று நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என எடுத்துக் கொள்ள வேண்டியது தான். அதனை விடுத்து சட்டவாக்கமூடாக கல்வித் தகைமையை நிர்ணயம் செய்ய முனைகையில் கஷ்டங்களையும் எதிர்நோக்க நேரிடலாம்.குறித்த விவகாரத்தில் சொந்தக் கட்சியினரையே வசப்படுத்த முடியாமல் போகலாம். நாட்டின் சமகால கட்டமைப்பில் அத்தகையதொரு சட்டவாக்கத்துக்கான ஆதரவைத் திரட்டுவதும் கஷ்டமானதொன்றாகும்.
No comments:
Post a Comment