தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களாகி விட்டன. யுத்தம் முடிவுற்ற போதிலும் அது ஏற்படுத்திய துயரம் ஓயவில்லை. பல உயிர்கள் காணாமல் போய்விட்டன. அநேக உயிர்கள் மரணித்து விட்டன. உடமைகள் அழிந்து விட்டன. உண்ணவும் உடுக்கவும் நாதியற்று பல குடும்பங்கள் நடைப் பிணமாக வாழ்கின்றன . இவைகளுக்கெல்லாம் முற்று முழுதான முடிவு காணப்பட வேண்டும் என்பதே பொது அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என யுத்தத்தினால் இறந்த காணாமல் போன உறவினர்களின் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்தார்.
கடந்த கால யுத்தத்தினால் தமிழ் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இக் கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோன்று எமது நாட்டின் அனைத்து சமூகங்களுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவும் எவராலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. நடந்தவைகள் பற்றி காலம் காலமாகப் பேசிக் கொண்டிருப்பதை விடுத்து அவற்றிற்கான நிவாரணத்தைத் தேடுவதும் எதிர்காலத்தில் அவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாதிருப்பதற்கான ஸ்திரமான வழிவகைகளை வகுத்து அவைகளை நடைமுறைப்படுத்துவதும் இந்நாட்டின் குடிம க்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள கடப்பாடு ஆகும். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களின் இருப்பிடத்தை அறிய வேண்டும். அதனை அவர்களது உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி காணாமல்போனவர்களோடு உறவினர்களைத் தொடர்புபடுத்த வேண்டும். காணாமல் போனவர், தடுப்புக் காவலிலோ அல்லது சிறையிலோ இருக்கலாம். அது பற்றிய தரவுகளை அரச நிர்வாகத்தின் உதவியோடு கண்டுபிடிப்பதும் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதும் எமது அமைப்பின் நோக்கங்களில் பிரதானமானது. யுத்தத்தில் இறந்தவர்களின் மரணச் சான்றிதழ்கள் கடந்த காலத்தில் பல இடங்களில் பெரும்பாலும் வழங்கப்படவில்லை. இது துரிதப்படுத்தப்படல் வேண்டும் . அதற்கான தடைகள் ஏதும் இருப்பின் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எமக்கு சாதகமாக அவைகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் . நாம் ஒரு தனிமனிதரல்ல, ஒரு சிறிய குழுவல்ல, தேசிய மட்டத்திலான ஒரு சுயாதீன அமைப்பு. இதனை நாங்கள் அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே அரசு எமது சரியானதும் சட்ட ரீதியானதுமான வேண்டுகோள்களைப் புறக்கணிக்கவோ தள்ளி வைக்கவோ முடியாது. இன்னும் பிரதானமானது இறந்தவர்கள் பற்றியது.
இறந்தவர்களுடைய இறப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். இறப்பொன்று யுத்தம் காரணமாக ஏற்பட்டதாயிருந்தால் அதற்கான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். ஒரு நபர் இறந்து விட்டார் என்றால் அந்த நபரால் தாபரிக்கப்பட்ட குடும்பம் பாதிக்கப்படும். இது நியதி. ஆகவே , அக் குடும்பம் அவஸ்தையின்றி வாழ நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.இதேபோலவே காணாமல் போனவர்களுடைய விடயத்திலும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரச நிர்வாகம் தொழில் வாய்ப்புகள், உதவிகள் வழங்கும் போது இவ்வாறான குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய எமது அமைப்பு முனைந்து நிற்கும் . உதாரணமாக ஆசிரிய நியமனம் அரசினால் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் பொருத்தமும் தகுதியானதுமான ஒருவர் இவ்வாறான பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்தால் அவருக்கு முன்னுரிமை வழங்குமாறு எமது அமைப்பு அரசை நிர்ப்பந்திக்கும். அத்துடன் பாதிப்புக்குள்ளான குடும்பமொன்றிற்கு வருமானத்தைத் தேடும் வழிவகைகளை அல்லது கிடைத்து வருகின்ற வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளை எமது அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். இவைகளையெல்லாம் செவ்வனே நிறைவேற்றுவதற்கு பண பலம் அவசியமானது. அரசின் துணை நிரந்தரமாகத் தேவைப்படும் .
அரசு எமக்கு உதவுவதற்கு உறுதி அளித்துள்ளது. பல வெளிநாடுகள் எமக்கு கை கொடுக்கும் என திடமாக நம்புகிறோம். இவைகளை எல்லாம் சட்டென்று செய்து விட முடியாது. முப்பது வருட கால யுத்தத்தின் வடுக்களை ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ நீக்கி விட முடியாது. ஒரு கால அவகாசம் தேவை. கால அவகாசம் என்பதை காலம் கடத்துவதாக எண்ணி விடக் கூடாது. இவைகளைச் சரியாக செய்வதற்கா க முதலில் மாவட்ட ரீதியாக விபரங்களை திரட்டி வருகிறோம். இதற்காக மாவட்ட ரீதியில் செயலணிக் குழுக்களை அமைத்து பணிப்பாளர்களை நியமித்து செயற்பாடுகளில் இறங்கியுள்ளோம். இற்றைவரைக்கும் கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கான ஆரம்ப நிர்வாக செயற்பாடுகள் முடிவுற்று தரவு திரட்டும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோன்று மரண அத்தாட்சிப் பத்திரம் பெற்றுக் கொடுக்கும் வேலைகளிலும் கரிசனை காட்டப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. சில மாவட்டங்களில் வேறுபட்ட சமூகங்கள் வாழ்கின்றன. அவர்கள் தரவுகளை வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவின மக்கள் வாழ்கின்றார்கள். மாவட்டப் பணிப்பாளராக தமிழர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்கு தகவல்களை வழங்குவதற்கு தமிழரல்லாத இனத்தவர்கள் தயக்கம் காட்டுவது தவறு. கடமையைச் செய்யும் போது, சேவையை எதிர்பார்க்கும் போது இனமோ, மொழியோ தடையாக இருக்கும் என கற்பனை செய்வது புத்திசாலித்தனமல்ல. மேலும் இவ்வாறான சேவைகளை வழங்குதவதற்கு அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் காரியாலயங்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன . இம் மாவட்டங்களுக்கான பணிப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்டார்கள் விபரங்கள் சேகரிக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆயினும் காரியாலயம் திறக்கப்படாமலிருக்கும் அம்பாறை, திருமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைபெறும் வேலைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பு மட்டு. மாவட்டப் பொறுப்பாளர் மகேஸ்வரனுக்கு பணிப்புரை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான விடயம் தகவல்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவுகள் கையளிப்பது. உறவுகள் கையளிக்கின்ற விடயங்களில் தான் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தங்கியிருக்கிறது. எனவே தரவுகள் பிரயோசனமானதாக இருக்க வேணடும். படிவத்தில் கேட்கப்பட்ட தரவுகளை விட மேலதிக விபரங்கள் இருக்குமாயின் அவைகளை விபரமாக எழுதி குறித்த படிவத்தோடு இணைத்து ஒப்படைக்கலாம். காணாமல் போனவர் விடயத்தில் அவரது புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும்.இந்த அறிக்கையூடாக பொது மக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். முதலாவது உங்கள் ஒத்துழைப்பு அவசியம். நீங்கள் காட்டும் ஆர்வமும் துரிதமும் எங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். இரண்டாவதாக நாம் அனைவருமே இலங்கையர்கள். இந்த நாடு எமக்கு சொந்த நாடு. வடக்கு, தெற்கு , கிழக்கு , மேற்கு என்ற பாகுபாடின்றி எல்லோரும் ஒன்றிணைந்து எமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைக் களையப் பாடுபடுவோம். ஒன்றுமையே எமது பலம்
No comments:
Post a Comment