Wednesday, January 1, 2014


கொழும்பு மாநகரம் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. அதாவது மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கதிகமானோர் தமிழ் பேசும் மக்கள் என்பதைப் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன. கொழும்பு மாநகரம் கொழும்பு வடக்கு,  கொழும்பு மத்தி,  கொழும்பு மேற்கு,  கொழும்பு கிழக்கு,  பொரளை ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாகவுமுள்ளது.  கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்தி. ஆகிய தேர்தல் தொகுதிகள் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவிலும் பொரளை,  கொழும்பு கிழக்கு,  கொழும்பு மேற்கு ஆகிய தொகுதிகள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவிலும் அடங்குகின்றன. விகிதாசாரப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத் தெரிவு முறைக்கு முன் கொழும்பு மத்தி மூன்று அங்கத்தவர் தொகுதியாக இருந்ததுடன்,  அன்று கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட ஐந்து தேர்தல் தொகுதிகளிலிருந்தும் ஏழு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர். கொழும்பு மாநகர சபைக்கு மக்களால் விகிதாசார வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐம்பத்தி மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.  தமிழ் பேசும் மக்களின்  குறிப்பாக தமிழர்கள்,  தமது உதாசீனப் போக்கால் தமக்குரிய பிரதிநிதித்துவங்களை கொழும்பு மாநகர சபையில் இழந்தவர்களாகவே உள்ளமை காலம் காலமாகக் கண்டுகொள்ளப்படாத,  புரிந்துகொள்ளப்படாத ஒன்றாகவேயுள்ளது.  கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளினதும் நிர்வாக மொழிகளாகத் தமிழ் மொழியும் சிங்கள மொழியும் உள்ளன. பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கொழும்பு மாநகர சபையினதும் நிர்வாக மொழிகளாக குறித்த இரண்டு மொழிகளுக்கும்  சம உரிமையுள்ளது.  

2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதிய 1171/15 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் திம்பிரிகஸ்யாய மற்றும் கொழும்பு ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிர்வாக மொழியாகத் தமிழ் மொழியும் சட்ட பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளில் மட்டுமல்லாது கொழும்பு மாநகர சபையின் செயற்பாடுகளும் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டும்.  ஆனால் நடைமுறையில் தமிழ் மொழி,  குறித்த மூன்று நிர்வாக அமைப்புகளிலும் புறக்கணிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. கொழும்பு மாநகர எல்லைக்குள் தமிழ் மொழிக்குச் சட்டரீதியான நிர்வாக மொழியுரிமை வழங்கப்பட்டு பதின்மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் அது நடைமுறைக்கிடப் படவில்லையென்பதையிட்டு நாட்டின் அரசியலமைப்பு விதிகள்,  நோக்கங்கள் மீறப்படுகின்றன. இழிவுபடுத்தப்படுகின்றன என்றே எண்ணத் தோன்றுகின்றது. அரசியலமைப்பு அவமதிக்கப்படுகின்றது என்றாலும் தவறில்லை.  நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் அச்சட்டத்திற்கு 1987 ஆம் ஆண்டிலும், 1988 ஆம் ஆண்டிலும் கொண்டுவரப்பட்ட 13 மற்றும் 16 ஆம் திருத்தங்களின் படியும் தமிழ் மொழிக்கு நாட்டில் வழங்கப்பட்டுள்ள செயற்பாட்டுரிமை தொடர்பில் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலே, நடைமுறையிலே அரச கரும மொழிகளைச் செயற்படுவத்துவது தொடர்பில்  பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சால் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 18/2009 இல் தெளிவான  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்,  ஒவ்வொரு அரச நிறுவனம் மற்றும் மாகாண,  உள்ளூராட்சி சபைகளினதும் மொழி விதிகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடைய அலுவலர் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கைக்கு மேலதிகமாக 2009 நவம்பர் மாதம் 25 ஆம் திகதிய 1620/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலமும் இது விடயம் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுநிருபமும் வர்த்தமானியும் வெளியிடப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவற்றில் கூறப்பட்டுள்ள எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்பதே யதார்த்தமாகவுள்ளது.  குறித்த சுற்றுநிருபம் மற்றும் வர்த்தமானிகள் மூலம் அரச கருமமொழிகளை நடைமுறைப்படுத்தும் பிரதம அதிகாரிகளாக அமைச்சின் செயலாளர்,  திணைக்களத் தலைவர்,  மாகாண சபையின் பிரதம செயலாளர்,  மாகாண சபை அமைச்சின் செயலாளர், மாகாண திணைக்களத் தலைவர்கள்,  மாநகர சபை ஆணையாளர்கள்,  நகர சபை செயலாளர்கள்,  பிரதேச சபை செயலாளர்கள் ஆகியோர்  பதவி வழியால் பெயரிடப்பட்டுள்ளனர். அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.  அவ்வாறே அரசகரும மொழிகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளாக பின்வருவோர் குறிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  அமைச்சுகளில் மொழிக் கொள்கையைச் செயற்படுத்தும் பொறுப்பு மேலதிக செயலாளர் அல்லது சிரேஷ்ட உதவிச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போன்று திணைக்களத்தின் மேலதிகத் தலைவர் அல்லது பிரதித் தலைவர்,  திணைக்களத்திற்கும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான  மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் ,  மாகாண சபைக்கும் , மாகாணசபையின் பிரதி பிரதம செயலாளர் ,  மாகாண சபைக்கும் மாகாண சபை அமைச்சின் பிரதிச் செயலாளர் மாகாண சபை அமைச்சுக்கும் மாகாண திணைக்களங்களுக்கு அவற்றின் மேலதிக தலைவர் அல்லது பிரதி மேலதிக தலைவர் ஆகியோருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

மாநகர சபைகளைப் பொறுத்தவரை பிரதிமாநகர ஆணையாளரும் நகர சபைகளுக்கும் பிரதேச சபைகளுக்கும் அவற்றின் நிர்வாக அதிகாரிகளும் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடையவர்களாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  ஒரு அரச அலுவலருக்கு அவர் செயற்பட வேண்டிய முறைமை மற்றும் பொறுப்புகள் அடங்கிய பணிப்பட்டியல் வழங்கப்படுவது வழக்கிலுள்ள நடைமுறை. இந்நடைமுறை அதாவது பொறுப்புகளில் மொழி அமுலாக்கல் பற்றிய பொறுப்பு அரச அலுவலர்களின் அதாவது அமைச்சு திணைக்களங்கள் மாகாண,  மாநகர,  நகர,  பிரதேச சபைகளில் பொறுப்பிக்க வேண்டியவர்களது பணிப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பது ஆய்வுக்குரியது. பணிப்பட்டியலில்  பொறுப்பு அதாவது தனக்குரிய நிறுவனத்தில் அரச கரும மொழிக் கொள்கைøயைச் செயற்படுத்தும் பொறுப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தும், அதனை உரியபடி செயற்படுத்தாது அலட்சியப்படுத்தப்படுமாயின் அது பற்றிய  குற்றம் யாரைச் சார்ந்தது என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும். உரிய, செயற்படுத்த வேண்டிய பொறுப்பை ஆற்றாத விடுவது பணி உதாசீனமாகும். சுற்றுநிருபங்களும் வர்த்தமானிகளும் மொழி அமுலாக்கல் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்தாலும்  அதை உரியபடி நடைமுறைப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை, படுவதுமில்லை என்பதே உண்மை. கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்தும் பிரதம அதிகாரியாகவும் பிரதி மாநகர ஆணையாளர் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடைய அதிகாரியாகவும் உள்ளமை அப்பதவிகளை வகிப்போர் அறிந்திருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. கொழும்பு மாநகர சபையைத் தமிழ் மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தும் முன்மாதிரி நிறுவனமாகச் செயற்படுத்துவது தொடர்பில் அரச கரும மொழிகள் திணைக்களம் முன்முயற்சி மேற்கொண்டு செயற்படுவதாக இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது. 

அது வெற்றுப் பேச்சு என்பது நடைமுறையில் வெளிப்பட்டது.  கொழும்பு மாநகரின் வரியிறுப்பாளர்களில் அதிகமானவர்கள் தமிழ் பேசும் தமிழரும் முஸ்லிம்களும் ஆவர். இருந்த போதிலும் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகச் செயற்பாடுகளில் தமிழ் மொழி முற்றாகவே புறக்கணிக்கப்பட்டுள்ளமை மட்டுமன்றி தமிழரது நலன்களும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.  கொழும்பு மாநகரசபைத் தலைமை அலுவலகத்திலுள்ள கரும பீடங்களே தமிழ் மொழிப் புறக்கணிப்புக்குத் தெளிவான சான்றுகளாகவுள்ளன. சகல கருமபீடங்களிலும் உரிய அறிவித்தல்கள் சகலதும் சிங்கள மொழியில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல மாநகர சபையின் பிராந்திய அலுவலகங்களது நிலையும் அதுவாகவேயுள்ளது. வரியிறுப்பாளருக்கு அனுப்பப்படும் கடிதங்களும் சிங்களத்திலேயே அனுப்பப்படுகின்றன. அவ்வாறு அனுப்பப்படும் கடிதங்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பதை அறிந்து கொள்ளக் கூட முடியாதபடி கடிதத் தலைப்புகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பயன்பாட்டிலுள்ள  கடிதத் தலைப்புகளிலும் மாநகர அலுவலகங்களிலுள்ள கருமபீட அறிவித்தல்களிலுமாவது தமிழ் மொழி இடம்பெறச் செய்ய வேண்டியது உடனடித் தேவையாகும். கொழும்பு மாநகர சபையில் உறுப்புரிமை வகிக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் அவதானம் இவ்விடயத்தில் ஈர்க்கப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும். கொழும்பு மாநகர சபையால் வழங்கப்படும் சேவைகளில் ஒன்றான மயான சேவை மட்டும் தேவையின் போது தவறாமல் கிடைக்கின்றது. ஆம், கொழும்பு மாநகர சபையால் நிர்வகிக்கப்படும் நான்கு மயானங்கள் மட்டும் எந்த வேறுபாடுமின்றி மரணித்தவர்களை வரவேற்று அணைத்துக் கொள்ளும் சமத்துவம் பேணுபவையாகவுள்ளன.  

ஆனால் கொழும்பு மாநகர சபையால் நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் கற்பித்தல் இடம்பெறுவதில்லை. இதனால் தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற தமிழ்,  முஸ்லிம் பிள்ளைகள் தொழில் பயிற்சி பெற வழியிழந்துள்ளனர். "மொண்டிசோரி' எனப்படும் பாலர் பாடசாலைகள் பதினாறு கொழும்பு மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றபோதும், அதில் ஒரு பாடசாலையிலாவது தமிழ் மொழி மூலம் கற்பித்தல் இடம்பெறுவதில்லை. இது தொடர்பான அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம் சார்பாக கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸ்ஸம்மிலிடம் நேரில் எடுத்துரைத்த போது குறைபாட்டை அவரும் ஏற்று கொண்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் தமிழ் மொழி மூலப் பாலர் பாடசாலைகளுக்கான வழிமுறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கையின் பிரதான நூலகமாக கொள்ளப்படுவது கொழும்பு பொதுநூலகமாகும். பயங்கரவாதிகளால் யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டதன் பின் கொழும்பு பொதுநூலகம் முதன்மை பெற்றது. இருந்த போதிலும் ஆளணிப் பற்றாக்குறையுடன் இயங்கும் அதில் விரல் விட்டெண்ணக்கூடிய தமிழர்களே பணிபுரிகின்றனர். கொழும்பில் பல காலமாக இருந்த தமிழ் பெயர்கள் மறைக்கப்படுகின்றன. கைவிடப்படுகின்றன. முகத்துவாரம் என்பது இன்று "மோதர'  ஆகியுள்ளது. அதபோல் பாலத்துறை "தொட்டலங்க' வாகவும், கொட்டாஞ்சேனை "கொட்டஹேன' வாகவும், செட்டித்தோட்டம் "ஹெட்டியாவத்தை'  யாகவும் முத்தையா பார்க் "சீமாமாலய'வாகவும் ஆகிவிட்டன. கலாயோகி ஆனந்த குமார சுவாமியின் பெயரிலிருந்த வீதியின் அளவு குறுக்கப்பட்டுள்ளது. சரவணமுத்து மைதானம் "சாரா'  மைதானம் என்றாகிவிட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள்  இந்துக்கள் கொழும்பு மாவட்டத்தில் பெருமையுடன் வாழ்ந்தமைக்கான  ஆதாரங்கள் நிறையவேயுள்ளன. இரத்மலானை திருநந்தீஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை தொடர்பில் அன்றைய உதவி தொல்பொருள் ஆணையாளரும் இன்றைய தொல்பொருள் ஆணையாளர் நாயகமுமான கலாநிதி செனரத் திசாநாயக்க வழங்கியுள்ள சான்றிதழ் அதைத் தெளிவுறுத்துகின்றது.  கொழும்பு மாநகர குடியிருப்பாளரின் வரிப்பணத்தை வருமானமாகப் பெறும் மாநகர சபை, வரியிறுப்பாளரின் அடிப்படை உரிமைகளையும் கௌவரத்தையும்  பேணிக்காக்க வேண்டிய கடப்பாடு கொண்டுள்ளது. கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகங்களிலும் தமிழ் மொழிப் புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது. தமிழ் மொழிப் புறக்கணிப்பு என்பது தமிழர்களைப் புறக்கணிப்பதாகவே அமைகின்றது.ஓய்வூதியம், சமுர்த்தி,  பிறப்பு  இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் உட்பட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேற்படி இருபிரதேசச் செயலகங்களுக்குச் செல்லும் சிங்கள மொழி தெரியாத தமிழரோ முஸ்லிமோ தம்முடன் சமகால மொழி பெயர்ப்பாளர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது. தமிழில் கூறுவதை சிங்களத்திலும் சிங்களத்தில் கிடைக்கும் பதிலை தமிழில் மொழி பெயர்க்கவும் ஆள் உதவி தேவைப்படுகின்றது.

அதேபோல் தமிழ் மொழியில் ஒரு கடிதத்தைக் கொண்டு சென்றால் அதற்குச் சிங்கள மொழி பெயர்ப்பு கொண்டு வரும்படி கூறப்படுகின்றது. தமிழ் மொழிக்கு நிர்வாக உரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கடிதம் செல்லுபடியற்றதாகக் கணிக்கப்படுகின்றது. அதாவது தமிழ் மொழியில் உரையாடி தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ தமிழ் மொழியில் தனது கோரிக்கையை எழுத்து மூலம் சமர்ப்பித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளவோ சட்டப்படி உரிமையிருந்தும் புறக்கணிக்கப்படும் நிலையில் தமிழ் மக்கள் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளனர் என்பது பகிரங்கப்படுகிறது. அதற்கு தானும் சளைத்தல்ல என்பது போல் கொழும்பு மாநகர சபையின் செயற்பாடுகளுமுள்ளன.  தேசிய ரீதியில் இன சமத்துவத்தைப் பேணவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவுமென உருவாக்கப்பட்ட தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சும் அதன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படும், அது மீறப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கைகள் வெளியிட்டு வரும் வழக்கமுள்ளது. தமிழ் மொழிக்கு சட்ட ரீதியாக நிர்வாக மொழிஉரிமை வழங்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் எட்டிவிட்ட நிலையில் அதனைச் செயற்படுத்தாது அசமந்தப் போக்கிலுள்ள கொழும்பு மாநகர சபை கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளையிட்டு அமைச்சர் வாசுதேவவும் அமைச்சும் கவனம் செலுத்தி ஏற்கனவே கூறியுள்ளது போல் சட்ட ரீதியாக செயற்படுவார்களா என்பதே இன்று கொழும்பு மாநகர தமிழ்,  முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள கேள்வியாகும். வாய்ச் சொல்லில் காட்டுவதை அறிக்கைகளில் காட்டுவதை,  செயலில் காட்ட வேண்டும். அரசியலமைப்பை மதிக்க வேண்டும்  மதிக்கச் செய்ய வேண்டும்  இது நடைபெறுமா?

No comments:

Post a Comment