வட மாகாணத்தில் மக்களினுடைய பங்களிப்பு மற்றும் அவர்களின் ஆர்வம் என்பவற்றினால் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வட மாகாணத்தில் சர்வதேச தரத்தில் உள்ளதை அவதானிக்க முடிவதாக யாழ். மற்றும் வவுனியா வைத்தியசாலைகளின் கண் சிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி எம். மலரவன் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் விழிப்புணர்வற்றோர் தொடர்பாக அவருடன் கலந்துரையாடியபோது அவர் தெரிவித்ததாவது ; விழிப்புணர்வற்றோருக்கான கிரிக்கெட் போட்டியை நாம் சவுண்ட்போல் கிரிக்கெட் ரி . 20 என பெயரிட்டு இம்முறை வவுனியாவில் நடத்தியிருந்தோம். ஏனெனில் , விழிப்புணர்வற்றோரும் சமூகத்தில் ஆளுமையுள்ளவர்கள் என்பதுடன் , அவர்கள் சாதாரண மனிதர்களை போல் அனைத்து செயற்பாட்டிலும் ஈடுபடக்கூடியவர்கள் என்பதனை வெளிப்படுத்தும் நோக்கோடு இதனை ஏற்பாடு செய்திருந்தோம். இதன் போது இலங்கையின் பல பாகங்களில் இருக்கும் விழிப்புணர்வற்றோருக்கான பதிவு செய்யப்பட்ட 12 அணிகளில் 8 அணிகள் பங்கேற்றிருந்தன.
இவ் அணிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அணியும் பங்கேற்றிருந்தது. அவர்களுக்கு போதியளவு பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்காவிடினும் அவர்களும் பங்கேற்றிருந்தார்கள். இவ்வீரர்கள் பந்தில் இருந்து வரும் சத்தத்தை உணர்ந்து விளையாட்டில் ஈடுபடுவார்கள். அதனைப் பார்க்கும் போது சாதாரண வீரர்கள் பங்கேற்பது போல் அவர்கள் சத்தத்தை அடையாளப்படுத்தி விளையாடுவதை அவதானிக்க முடியும். நாம் விழிப்புணர்வற்றோருக்கான நிகழ்வுகளை யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் வைப்பதற்கு முதல் வவுனியாவில் வைப்பதற்கு காரணம் இம் மாவட்டம் விழிப்புணர்வற்றோரின் செயற்பாட்டில் முன்மாதிரியாக உள்ளமையே ஆகும். மாற்று திறனாளிகளுக்கு இச் சமூகத்தில் அனைத்து உரிமைகளும் சாதாரண மனிதனைப்போலவே உள்ளன. உதாரணமாக படிப்பதற்கு, அரசியல் செய்வதற்கு என அனைத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்முடியும். அந்த வகையிலேயே நாம் கடந்த வருடம் இதே தினத்தில் வவுனியா பொது நூலகத்தில் பார்வையற்றோருக்கான நூலகம் ஒன்றினை இலங்கையில் முதன்முறையாக ஏற்படுத்தியிருந்தோம்.
இவ்வாறான விழிப்புணர்வற்றோருக்கான செயற்பாடுகளை நாம் பலவாறு ஏற்படுத்தியிருந்தாலும் விழிப்புணர்வற்றோருக்கு உள்ள சட்டங்கள் தொடர்பில் போதுமான விளக்கம் இன்மை காணப்படுகின்றது. அதாவது , வீதியில் விழிப்புணர்வற்றவர் வெள்ளைப்பிரம்புடன் செல்லும்போது வாகனங்களை அவதானமாக செலுத்த வேண்டும் என்பதும் அவர் வீதியில் எவ்விடத்தில் வீதியை கடப்பதற்காக தனது வெள்ளைப்பிரம்பை நீட்டினாலும் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் அவர்கள் பஸ்ஸை மறிக்கும் போது அது பஸ் தரிப்பு நிலையம் இல்லாவிட்டாலும் நிறுத்த வேண்டும் என்பது தொடர்பிலுமான சின்னச் சின்ன விடயங்கள் தொடர்பில் மக்கள் அக்கறை செலுத்தாத நிலையுள்ளது. எனவே இவ்வாறான விழிப்புணர்வற்றவர்கள் மீதான சட்ட மீறல்களுக்கு சாதாரண தண்டனையை விட இரட்டிப்புத் தண்டனையுள்ளது என்பதனையும் மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் , விழிப்புணர்வற்றவர்கள் வாழ் நாள் பூராகவும் கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டிய தேவையுள்ளது. இது தொடர்பாக கற்ற சமூகத்தை சேர்ந்த சிலருக்கும் பூரண அறிவின்மை காணப்படுகின்றது.
ஆனால் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச பார்வையற்றோர் சங்கம், உலக சுகாதார தாபனம் என்பவற்றில் வலுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் , ஐக்கிய நாடுகள் சபையினால் விழிப்புணர்வற்றோருக்காக கொண்டு வரப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. அத்துடன், அனைத்து நாடுகளுமே கையொப்பமிட்ட ஒரு சாசனமும் இதுவாகவே உள்ளது. எனவே நாமும் அச்சாசனத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு செயற்பாட்டிலும் அடியெடுத்து வைத்து வருகின்றோம். அவ்வாறான செயற்பாடுகளை நாம் பார்க்கும்போது அண்மையில் இடம்பெற்ற வட மாகாண சபைத் தேர்தலில் கண்பார்வையற்ற ஒருவர் அரசியல் மேடைகளில் பேசியதை பார்த்தோம். உண்மையில் அவர் எக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்கு அப்பால் பார்வையற்ற ஒருவர் அரசியல் செய்வதானது எமது நாடு விழிப்புணர்வற்றோர் செயற்பாட்டில் தராதரத்தில் உயர்ந்ததாகவே உள்ளது என்பதையே காட்டியது. நாம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த போதிலும் இவ்வாறான செயற்பாட்டில் உலக நாடுகளில் முன்மாதிரியாக உள்ளோம்.
ஆனால் இவ் விடயம் ஐக்கிய நாடுகள் சபை வரை முறையான விதத்தில் கொண்டு செல்லப்படவில்லை. வவுனியா நகரசபை பொது நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பார்வையற்றோருக்கான நூலகத்தில் பார்வையுள்ளோரும் பார்வையற்றோரும் ஒரே நேரத்தில் பத்திரிகையை வாசிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறான நடைமுறை வவுனியாவில் மாத்திரமே உள்ளது. இவ்வாறான நூலகத்தை யாழ்ப்பாணத்திலும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே எமது 2014 ஆம் ஆண்டு இலக்காக யாழ்ப்பாணம் நூலகத்தில் பார்வையற்றோர் பகுதியை திறக்கவுள்ளோம். வட மாகாணத்தில் பார்வையற்றோர் சுமார் 500 பேர் வரையிலேயே உள்ளனர். ஆகவே அவர்களுக்கு இரண்டு பார்வையற்றோர் நூலகங்கள் தற்போதைக்கு போதுமானதாக இருக்கும். அத்துடன் , இவர்களுக்காக வெளிநாடுகளில் இருந்து வரும் புத்தகங்களுக்கான தபால் கட்டணம் இலவசமானது. எனவே தேவையான நூல்களை எங்கிருந்தும் பெற்றுக்கொள்ளாம். ஆகவே நாம் விழிப்புணர்வற்றவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு வட மாகாணத்தில் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதேவேளை , பார்வையற்றோர்களுக்கான தொழிற்பயிற்சிகளையும் நாம் வழங்கி வருகிறோம். அந்த வகையில் தற்போது 22 பேர் இலட்சக்கணக்கில் வருமானத்தை பெறுபவர்களாக மாறியுள்ளனர். இன்று கண்தெரிந்தவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு போவதற்கு வரிசையில் நிற்கின்றனர். ஆனால் கண் தெரியாதவர்கள் எமது நாட்டிலேயே மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறி வருகின்றனர். அதற்கு நாம் வழங்கி வரும் ஒத்துழைப்பும் அவாகளின் ஆர்வமுமே காரணமாகும். அத்துடன் , இவ்வாறானவர்கள் சாதாரண மனிதர்கள் செய்யும் வேலையை விட பல மடங்கு சிறப்பான வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றனர். இவ்வாறு தொழில் செய்பவர்கள் அனைவருமே தமது தொழில் நடவடிக்கைகளை சட்டபூர்வமாக பதிவு செய்தும் உள்ளனர். இதேவேளை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் ஓர் ஒன்றியமாக மாற்றி கிளிநொச்சியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறான நிகழ்ச்சித் திட்டமானது வளர்முக நாடுகளில் மிகவும் குறைவாக காணப்பட்டாலும் நாம் வட மாகாணத்தை மையப்படுத்தி இத் திட்டத்தை முன்னெடுக்கின்றோம். இதேவேளை வட மாகாணத்தில் உள்ள விழிப்புணர்வற்றோரை லண்டனில் உள்ள விழிப்புணர்வற்றோர் நிறுவனத்துடன் இணைத்துப் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் எமது செயற்பாடுகளை சர்வதேச தரத்திலும் விழிப்புணர்வற்றவர்களைச் சர்வதேச தொடர்புகளுடன் கூடியவர்காளகவும் மாற்றுவதற்குமான முயற்சியாக இது இருக்கும்.
No comments:
Post a Comment