Tuesday, September 10, 2013

சுயநிர்ணயம், சுயாட்சி, சமஷ்டி, அதிகாரப் பகிர்வு போன்றனவெல்லாம் நாட்டு மக்களையோ, உழைக்கும் மக்களையோ பிளவுபடுத்தாது மாறாக ஐக்கியப்படுத்தும் என்பதை உணர முடியும்.
இலங்கை தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கா அரசியல் நடவடிக்கையின் வரலாற்றில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 50துக்கு 50 என்ற சமஉரிமை, எஸ்.ஜே.வி.செல்வ நாயகத்தன் தலைமையிலான சமஷ்டி கோரிக்கை, பின்னர் 1976இல் நிறைவேற்றப்பட்ட தமிழர்களுக்கு தனியரசு வேண்டுமென்ற தீர்மானம் என்பன கணக்கில் எடுக்கப்பட வேண்டியவை. காலத்திற்கு காலம் முன்வைக்கப்பட்ட மேற்படி கோரிக்கைகளை வென்றெடுக்கும் இலக்கை கொண்டு அகிம்சை போராட்டங்கள் நடத்தப்படவில்லை.அவற்றினூடாக ஜீ.ஜீ.பொன்னம்பலம் முதல் அமிர்தலிங்கம் வரை பாராளுமன்ற பேரப் பேச்சுகளினூடாக குறைந்த பட்ச அதிகாரப்பங்கீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு அத்தலைமைகளிடம் இருந்தது. அதனடிப்படையிலே அகிம்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 
 
அந்நம்பிக்கையின் முன்னெடுப்புகளினால் 1956 பண்டா செல்வா ஒப்பந்தம் 1965 டட்லிசெல்வா ஒப்பந்தம் என்பனவற்றினூடாக வடக்குகிழக்கு பகுதிகளுக்கு குறைந்தபட்ச அதிகாரப் பங்கீடுகளுக்கான உடன்பாடு எய்தப்பட்டிருந்தது. எனினும், அவ்வொப்பந்தங்கள் பேரினவாதிகளின் எதிர்ப்பினால் கிழித்தெறியப்பட்டன.பேரினவாத அரசாங்கங்கள் தமிழ்த்தரப்பு கோரிக்கைகளை கணிப்பில் எடுக்காமல் திட்டமிட்ட வகையில் 1958, 1977, 1980, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மீது பேரினவாத வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தன.
 
1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இலங்கையை சிங்கள பௌத்த நாடாக பிரகடனப்படுத்தும் ஏற்பாடுகளை கொண்டிருந்தன. இதன் விளைவாகவும், தமிழ்த்தரப்பின் சமவாய்ப்பு, பின்னர் சமஷ்டி கோரிக்கைகள் கணிப்பில் எடுக்கப்படாமையாலும் தமிழ் மக்களிடம் நிலவிய அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாத சூழ்நிலையில் தமிழரசு கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலை கூட்டணியை உருவாக்கின.அதற்கான பிரதான அரசியல் சுலோகமாக தமிழர்களுக்கு தனியரசு என்பது 1976இல் நிறைவேற்றப்பட்ட நிலையில் இ.தொ.கா.கூட்டணியில் இருந்து விலகியது. தனியரசு கோரிக்கையை முன்வைத்து 1977 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 19 ஆசனங்களை பெற்றுக்கொண்ட த.வி.கூ. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியானது. அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.
 
1977 தேர்தலில் த.தே.கூ.கிடைத்த வாக்குகள் தமிழர்களுக்கான தனியரசுக்கான ஆணையாக கொள்ளப்படுகின்றபோதும், அதனை இலக்காக கொண்டு த.தே.கூ. எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக, தனியரசிற்கான மக்களின் ஆணை என்பதை கொண்டு ஜே.ஆர்.அரசாங்கத்துடன் பேரம் பேசவே முற்பட்டது. அதனை ஜே.ஆர்.கரிசனையில் கொள்ளாது மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்படுத்தி 1980இல் தேர்தல்களை நடத்தினார். அப்போது வாக்குப் பெட்டிகள், கோயில்கள், த.வி.கூ. காரியாலயம் போன்றனவும் யாழ்.வாசிக சாலையும் அரசாங்க குண்டர்களால் எரிக்கப்பட்டன.
 
1970களின் நடுக்கூற்றில் இருந்து தமிழ் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வந்த தீவிர தமிழ்த்தேசிய சிந்தனை 1980களில் மேலும் தீவிரமடைந்து அரசாங்க ஆதரவாளர்களுக்கும், பொலிஸ் இராணுவத்திற்கும் எதிரான ஆயுத நடவடிக்கைகளாக வளர்ச்சியடைந்து 1983 ஜூலை மாதம் யாழ்.பல்கலைக் கழகத்திற்கு அருகில் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அரசின் திட்டமிட்ட வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இதன் விளைவாக த.வி.கூ. தலைவர்களும் எம்.பி.க்களும் இந்தியாவுக்கு சென்றுவிட்டனர். இதன் பின்னர் இலங்கை (1978) அரசியல் யாப்பிற்கு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் விளைவாகவும் (எல்லாம் எம்.பி.க்களும், அரச உத்தியோகத்தர்களும் இலங்கையில் தனிநாட்டினை கோருவதில்லை என்றும் அதற்காதரவாக உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ, செயற்படுவதில்லை என்றும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற திருத்தம்) இந்தியாவில் இருந்ததனாலும் த.தே.கூ. எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தனர்.
 
இவ்வேளையில் பேரின வன்முறையில் இடதுசாரி கட்சியின் தலைவர்களுக்கும், ஜே.வி.யினருக்கும் தொடர்புண்டென கூறி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இனவன்முறை பற்றி விசாரிக்க சன்சோனி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் விசாரணை அறிக்கை முழுமையற்றதெனினும், அதன்படி பேரின கலவரங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூரணமாக திருப்தி தரும் வகையில் நிவாரணங்கள் வழங்கப்படவும் இல்லை.
 
இக்கால கட்டத்திற்கு பிறகு புலிகள் இயக்கம், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஈரோஸ் உட்பட 37 தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் இயங்கின. இவற்றில் புலிகள் இயக்கம், புளொட் என்பனவற்றின் பாரியதும், ஈ.பி.ஆர்.எல்.எப்.பினது சிறியளவிலான ஆயுத நடவடிக்கைகளும், ஈரோஸின் குண்டுவெடிப்புகளும் இலங்கை அரசிற்கு பாரிய தலையிடியை கொடுத்தன. அவ்வியக்கங்கள் இந்தியாவை தளமாகவும் கொண்டு இயங்கின. இதனால் இலங்கைக்கு இந்தியாவுடன் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்திரா காந்தியின் படுகொலையை அடுத்து இலங்கை அரசிற்கு எதிரான கடும்போக்கு மாற்றமடைந்து ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் விளைவாக 1987இல் இந்தியஇலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இலங்கை அரசியல் (1978) யாப்பிற்கு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு மாகாணசபைகள் முறை ஏற்படுத்தப்பட்டது.
 
இதனை புலிகள் இயக்கம் ஆரம்பித்தில் நிர்ப்பந்தத்தின் பேரின் ஏற்றுக்கொண்ட போதும் இலங்கை இந்திய அரசின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைகளை நிராகரித்து. முதலில் அப்போது இங்கிருந்த இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாசவுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு இந்திய இராணுவத்தை இங்கிருந்து அனுப்பியது மட்டுமன்றி, தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் இயக்கம் ஜனாதிபதி சந்திரிகா (1995 இல்) காலத்தில மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளினால் யாழ்ப்பாண குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னியிலும் கிழக்கிலும் அவர்களின் நிலையை உறுதிப்படுத்தினர். பின்னர் வன்னியில் அவர்களின் நிகழ்வு ரீதியான அரசை நிறுவினர். பிரேமதாஸ காலத்தில் ராஜீவ் காந்தியும், அதன் பின்னர் பிரேமதாஸவும் கொலை செய்யப்பட்டனர்.
 
2000ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை கொண்டுவரும் அடிப்படையில் எடுக்கப்பட்ட முயற்சி ஐ.தே.கட்சியின் காட்டிக் கொடுப்பில் தோல்வியடைந்தது. (சந்திரிகா மீது புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியபோது அவர் உயிர் தப்பினார்).2000ஆம் ஆண்டுகளின் பின்னர் நோர்வே அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர் தோல்வியடைந்தன. த.வி.புலிகள் இயக்கம், ஈரோஸ் தவிர ஏனைய ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அமைப்புகளும், த.வி.கூ.வும் தனியரசு கோரிக்கையை பேரப்பேச்சுக்கான தந்திரோபாயமாக கொண்டிருந்தன என்பதே உண்மை. த.வி.புலிகள் இயக்கம் முடிந்த முடிவாக “தனித் தமிழரசை’ இலக்காகக் கொண்டிருந்தது.
 
நோர்வே அனுசரணையுடனான பேச்சு வார்த்தையின் போது இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கு இணங்கி இருந்தபோதும் பிரதமர் ரணில் தலைமையிலான பாராளுமன்றத்தை சந்திரிகா கலைத்ததை அடுத்து இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான முயற்சியும் கைவிடப்பட்டது. இடைக்கால சபைக்கு இணங்கி இருந்தபோதும் புலிகள் இயக்கம் ஒரேயடியாக தனித்தமிழ் அரசான தமிழீழத்தை அடைவதையே முடிந்த முடிவாக கொண்டிருந்தது.போராட்டங்கள் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் புலிகள் இயக்கத்தினால் சாதாரண மக்கள் கொலை செய்யப்பட்டமையையும், தனிநபர்கள் படுகொலை செய்யப்பட்டமையையும், அவர்களின் ஜனநாயக மறுப்பையும் மனிதஉரிமைகள் மறுப்பையும் நிராகரிப்பதுடன் அவர்கள் கெரில்லா போர் முறையை கைவிட்டு பாரம்பரிய படைத்தாக்குதல்களை ஒழுகிய நிகழ்வு ரீதியான தனியரசை அமைத்து செய்யப்பட்டமையை விமர்சிக்கின்றனர்.
 
இது அவர்களின் இராணுவ ரீதியான தோல்விகளுக்கும் இலட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் காரணமாயின என்கின்றமை அரசியல் ரீதியாக முடிந்த முடிவாக ஒரேயடியான இலக்காக தனியரசை கொண்டிருந்தமைக்காக புலிகள் பாரிய விமர்சனங்களுக்குள்ளாக்கப்படுகின்றனர்.இந்தப் பின்னணியில்தான் தமிழரசுக்கட்சி தலைமையிலான த.தே. கூட்டமைப்பு வட மாகாணசபை தேர்தலுக்கான விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமஷ்டி ஆட்சிமுறை அவசியமென வற்புறுத்துகிறது. முன்னர் தமிழரசு கட்சி சமஷ்டி கோரிக்கையை பேரினவாத அரசாங்கங்களுடன் அரசியல் தீர்விற்காக பேரம் பேசுவதற்காகவே முன்வைத்திருந்தது.
தற்போது அது முன்வைக்கும் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி என்பதும் மகிந்த அரசாங்கத்துடன் பேரம் பேசுவதற்கான கோரிக்கையாக இருக்கலாம். அத்துடன், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவும் வடமாகாண தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் முன்வைக்கப்பட்டிருக்கலாம்.
 
மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி கோரிக்கை பற்றி மகிந்த அரசாங்கம் இன்னும் உத்தியோக பூர்வமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாவிட்டாலும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனி ஈழக்கோரிக்கை முன்வைத்த த.தே.கூ. அமைப்பின் சமஷ்டி கோரிக்கை பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.ஆனால், த.தே.கூட்டமைப்பின் தற்போதைய சமஷ்டி கோரிக்கையை பற்றி உத்தியோக பூர்வமான நிலைப்பாட்டை வெளியிட்ட ஜே.வி.பி, த.தே.கூட்டமைப்பின் பழைய இனவாதத்தையே புதிய சமஷ்டி, கோரிக்கை வெளிப்படுத்துவதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் த.தே.கூ. அதனது இனவாத நிலைப்பாட்டை மாற்றுவதாக இல்லை என்றும், வடக்கு தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் த.தே.கூ. அதன் இனவாத நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்று கூறியுள்ளது. அத்துடன் த.தே.கூ. அமைப்பின் விஞ்ஞாபனம் தென்னிலங்கையிலுள்ள இனவாதிகளுக்கு தீனிப்போடுவதாக அமைந்துள்ளதாகவும் கூறுகிறது. வடக்குகிழக்கு தமிழ் மக்களின் தாயகமல்ல என்றும், வடக்கு கிழக்கிற்கு வெளியிலேயே 51 சதவீதத்திற்கு மேலான தமிழர்கள் வாழ்வதால் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு தாயகமல்ல என்று கூறியுள்ளது.
 
இக்கருத்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் முதல் ஜனாதிபதி மகிந்தவரை கொண்டுள்ள நிலைப்பாட்டின் வெளிப்பாடாகும். அதனால் எந்தவொரு அதிகாரப் பரவலாக்கலையும் கூட இனவாதம் எனக்கூறும் ஜே.வி.பி. மேற்படி கருத்தை தெரிவிப்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. அவர்களின் ஸ்தாபக தலைவர் ரோஹன விஜேவீர, சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு தெரியாமல், அக்கட்சி அச்சகத்திலேயே டட்லி செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் அடித்து விநியோகித்தவர் மட்டுமல்ல; அவ்வொப்பந்தத்திற்கு எதிராக சுதந்திரக்கட்சி, பாரம்பரிய இடதுசாரி கட்சிகளும் நடத்திய ஊர்வலகத்தில் கலந்து கொண்டு தோசை, மசாலவடை எனும் கோஷம் எழுப்பியவருமாவார். ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக்கான 5 வகுப்புகளில் ஒன்று தோட்டத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கைக்கூலிகள் எனக் குறிப்பிட்டுள்ளது.
 
1987 இலங்கைஇந்திய உடன்பாட்டை இனரீதியாக மதிப்பிட்டு 1988இல் ஜே.வி.பி. அதன் இரண்டாவது கிளர்ச்சியை செய்தது. இலங்கை அரசாங்கம் 2008ஆம் ஆண்டில் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது அதனை ஆதரித்து பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்த கொள்கையை வகுப்பதில் ஜே.வி.பி.க்கு பாரிய பொறுப்புண்டு.இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை பற்றி ஐ.நா.மனித உரிமை பேரவையின் தலையீட்டை ஆரம்பத்தில் எதிர்த்தது. தற்போது ‘தனக்கும் தலைவலி’ வந்துவிட்டதால் நவநீதம்பிள்ளையின் வருகை தொடர்பாக எதிர்ப்பை காட்டவில்லை. இதேபோன்று உண்மையாக மார்க்சிய லெனினிஸத்தை ஏற்றுக்கொண்டால் சுயநிர்ணயம், சுயாட்சி, சமஷ்டி, அதிகாரப் பகிர்வு போன்றனவெல்லாம் நாட்டு மக்களையோ, உழைக்கும் மக்களையோ பிளவுபடுத்தாது மாறாக ஐக்கியப்படுத்தும் என்பதை உணர முடியும்.
 
இவை இல்லாவிட்டால் மாக்சிசயத்தை உச்சரித்துக் கொண்டு சமத்துவம் என்ற பேரில் புதியவகையில் பேரின மேலாண்மையே நிலை நிறத்தப்படும். இது புதியவகை பேரினவாதம் அதனால் அதிகாரப் பகிர்வு சமஷ்டி சுயநிர்ணயம் எல்லாம் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமை என்பதை ஜே.வி.பி. மட்டுமல்ல, முன்னிலை சோஷலிச கட்சி கூட ஏற்காவிட்டால் இலங்கையில் இனபேதம் கடந்த தொழிலாளர் வர்க்க ஐக்கியம் சாத்தியமில்லை.த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அதனது பழைய சமஷ்டியையும் பிரிந்துபோகும் உரிமையுடனான சுயநிர்ணயத்துக்கு பதிலீடாக மேற்கு நாடுகள் அறிமுகம் செய்து, புலிகள் இயக்கமு“ம் 2002இல் ஏற்றுக்கொண்ட உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதையும் கொண்ட கலவை ஆகும். அதனை வென்றெடுக்க மூன்றாவது போராட்ட வழிமுறைக்கு அழைப்பு விடுக்கும் த.தே.கூ. பேரப்பேச்சுக்கு அதனையும் வரையறுத்துக் கொள்ளுமா என்பதற்கு பதில் அதன் எதிர்கால நடவடிக்கைகளிலேயே இறுக்கப்படும்.
 

No comments:

Post a Comment