Tuesday, May 13, 2014


குமுதினிப் படுகொலைகள் நினைவு தினம் இன்று
தெற்கே பவளப் பாறைகளை அடித்தளமாகக் கொண்ட மாவலிதுறை  நெடுந்தீவு கிழக்கில் இருந்தது. அங்கிருந்து நயினாதீவின் கிழக்கு கரை நோக்கி பயணித்து புங்குடுதீவின்  கரையில் குறிகட்டுவான் துறைமுகத்தில் பயணிகளையும் பண்டங்களையும் கரை சேர்ப்பதும் அதேபோல் மீண்டும் மக்களையும் பொருட்களையும் நெடுந்தீவிற்கு எடுத்துப் போவதும் குமுதினிப் படகின் நாளாந்த கடமை.  அதிகாலை 6 மணிக்கு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் கரையை அடைந்து பின் 8.30 மணியளவில் நெடுந்தீவிற்குச் செல்வதும் பிற்பகலில் 2 மணிக்கு புறப்பட்டு 3 மணிக்கு புங்குடுதீவு கரையை அடைந்தும் மீண்டும் மாவலிதுறைக்குச் செல்வதும் வழமை.  அலையரசி, இராஜேஸ்வரி என்று வேறு படகுகள் சேவையில் ஈடுபட்டிருந்த போதும் 3 வருடங்கள் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கடமைபுரிந்த போது குமுதினியை தவிர வேறு படகுகளில் பயணித்த ஞாபகமில்லை. பயணிக்கவில்லை.  குமுதினி முழுவதும் மரத்தாலான பெரிய படகு கப்பலாகவே அது தீவகப் பயணத்தில் கருதப்பட்டது. சுருக்கமாகக் கூறுவதென்றால் நெடுந்தீவிற்கு கிடைத்த அற்புதமான சகாரப் பறவை என்பதே சரியானதாகும்.  

திங்கள், வெள்ளிக்கிழமைகளில் முறையே குறிகட்டுவானின் காலை பயணத்திலும் மாவலித்துறையின் நெடுந்தீவு கரையிலும் பயணிகளின் தொகை அதிகமாக இருக்கும்.  அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறை நாளில் யாழ்ப்பாணம் வந்து உறவுகளுடன் தங்கிச் செல்லும் மாணவர்கள் என எண்ணிக்கை அதிகம் இந்த இரு நாட்களிலும்.  அன்று ஜூன் மாதம் 15 ஆம் திகதி 1985 ஆம் ஆண்டு வழமை போல் தான் விடிந்தது. குமுதினியின் காலை பயணமும் வழமை போல் தான் சுமுகமாக முடிந்திருந்தது.  ஆனால் இப்பொழுதெல்லாம் 1983 ஆம் ஆண்டு நடந்த கோரமான இனக்கலவரத்தின் பின்னராக திருநெல்வேலியில் நடந்த இராணுவத் தொடரணி தாக்குதலின் பின்பாக சிறிய வித்தியாசமிருந்தது.  சில வேளைகளில் குமுதினியை "நேவி'சுற்றி வட்டமடிக்கும் சில வேளைகளில் குமுதினியை நேவி படகிலிருந்து இறங்கும் சீருடையினர் பரிசோதனை என்ற பெயரில் சாமான் மூடைகளை தட்டிப்பார்பதும் சிலவேளை அவிழ்த்துப் பார்ப்பதும் வழக்கம்.  முடிவில் சின்னச்சிரிப்போடும் ஒருசில சிங்கள சொற்களோடும் சென்றுவிடுவர்.

சிலவேளை மூடையை திறந்து கண்ணில்படும் புழுக்கொடியல், பனாட்டு, பனங்கிழங்கு, கருவாடு என்பவற்றில் அளவோடு கைவைத்து பெரிய சிரிப்பை உதிர்ப்பதும் வழக்கம். சல்லி தென்னங், தென்னங், வரதி கல்பனாவ ஒனநேநே, சமாவென்ன என்ற சொற்களுக்கு பதிலாக பரவாயில்லை வேண்டாம், சந்தோசம் என்ற தமிழ் சொற்களை அவர்கள் கொண்டு செல்வர். எப்பா என்ற சிங்கள சொல்லோடு எம்மவர் திருப்திப்படுவர்.  அப்படித்தான் அந்த மே மாதம் 15 ஆம் திகதியும்  அந்தப் பயணிகள் நினைத்திருப்பர். இரண்டு மணிக்கு புறப்பட்ட குமுதினி வழமையான கலகலப்போடு நயினாதீவு முனை வரை அமைதியாகவே பயணித்திருப்பாள்.  அன்று வேகமாக வந்த கடற்படைப் படகுகள் சுற்றிச் சுற்றி வட்டமடிக்கும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பண்டங்களை தட்டிப்பார்த்துப் பரிசோதித்தவர்கள் இன்று பயணிகளை தட்டிப் பார்த்து தடவினர்.

எல்லோரையும் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்குச் செல்லுமாறு பணித்தனர். துப்பாக்கி முனைக் கத்திகள் வழமைக்கு மாறாக மனிதர்களை நோக்கி நீண்டன.  ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு ஒருவர் ஒருவராக சோதனை நடத்துவதற்காக அழைக்கப்பட்டனர். உள்ளே கண்ட கோடரிகளும் கூரான கத்திகளும் ஆயுதங்களும் வேலை செய்தன. மனித ஓலங்கள் கடலோடு கரைந்தன.வாழ்வோடும் வறுமையோடும் கூல் அலையோடும் போராடியோர் மீது நடந்ததாக்குதல் விபரிக்கும் தரமானதல்ல. தானுண்டு தன் வேலையுண்டு என இருந்த அப்பாவி ஜீவன்கள் மிருகத்தனமாக வெறியோடு கொல்லப்பட்டனர்.  ஏன் நடந்து இந்தக் கொடுமை? அப்பாவி தமிழர்களின் செங்குருதியால் குமுதினி குளிப்பாட்டப்பட்டாள்.  மாலை மூன்று மணி அளவில் 50 இற்கும் மேலானவர்கள் அந்தப் படகில் வைத்து அடித்தும் குத்தியும் வெட்டியும் கண்ட கோடரிகளால் கண்டத் துண்டமாக வெட்டியும் கொன்ற கொடுமை நடந்து முடிந்திருந்தது.  குமுதினியாள் நொண்டியாக்கப்பட்டாள். குறையுயிரும்  குற்றுயிருமாக அவள் தீவகத்தின் கடலில் பார்ப்பார், மேய்ப்பார் இன்றி அலங்கோலப்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல அலையோடு அலையாகி அடித்துச் செல்லப்பட்டாள். 
  
இனவாதமும் பேரினவாதமும் நெடுந்தீவான் மீது கோர முகத்தை தன்முறையாக காட்டி இருந்தது.  53 உயிர்களின் பெயர் நெடுந்தீவின் நினைவாலயத்தில் எழுதப்பட்டிருப்பதாக அங்கிருந்து பொறுப்பானவர்களின் தகவல் தெரிவிக்கிறது. அந்த நினைவு மண்டபமும் தூபியும் அண்மையில் சிதைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  மரண வேதனை சுமந்தோரின் ஆத்ம சாந்திக்காகவே மன வேதனையோடு நாங்கள் ஆராதனையை நடத்த வேண்டும். ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்கு பிரார்த்தனைகளும் பிதிர்க்கடன்களும் செய்ய வேண்டியது சமய கடமை என்பதையும் நாங்கள் மறுப்பது நிச்சயமாக நாகரிகத்தின் அப்பாற்பட்டதாக இருக்காது.

No comments:

Post a Comment