இலட்சக் கணக்கான தமிழர்கள் உடல்களின்மீது கடந்துவந்த வரலாற்றையும் மறந்துவிட்டு கட்சி ஆதிக்கத்திற்காகவும் பதவி மோகத்திலும் கழுத்தறுப்புகளிலும் காட்டிக் கொடுப்புகளிலும் ஈடுபடும் இவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காதுவடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று சாதனை வெற்றியைப் பெற்று இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியடைகின்ற போதும் அத்தேர்தல் வெற்றியினதும் அதன் விளைவுகளினதும் அதிர்வுகள் இன்னும் அடங்கிய பாடாக இல்லை. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்திக் காணப்பட்ட இந்த அதிர்வுகள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே ஏற்பட்டு பிளவுகள் தோன்றத் தொடங்கியுள்ளன. தமிழ் அரசியல் கட்சிகள், தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களிடையே என்றுமே காணப்படாத ஒற்றுமையென்பது தமிழர் வரலாற்றில் ஒரு சாபக்கேடாகவே உள்ளது. இத்தனை அழிவுகள், கொடூரங்கள், வேதனைகள், அனுபவங்களுக்குப் பின்னரும் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாது தமக்கிடையே வெட்டுக்குத்துக்களிலும் கயிறிழுப்புகளிலும் ஈடுபடுவது இன்றும் தொடர்வது தமிழர் எத்தனை வெற்றிகளைப் பெற்றாலும் அது நிலைக்காது என்பதையே காட்டுகின்றது. வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனக்கூறப்படும். நம்பப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையிலான சுயநல காய்நகர்த்தல்களும் வெட்டுக்குத்துகளும் கழுத்தறுப்புகளும் காட்டிக்கொடுப்புகளும் ஆரம்பித்துவிட்டன.
ஆரம்பத்தில் உள்ளரங்கில் நடைபெற்று வந்த இந்தக் கூத்துக்கள் அமைச்சர் பதவி நியமனங்களுடன் வெளியரங்கில் மேடையேற்றப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்பட்டு வருகின்றன. வடமாகாண சபைக்கான பொது முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட கயிறிழுப்புகள், அதன் பின்னர் கட்சிகளுக்கான வேட்பாளர் தெரிவுகள், போனஸ் ஆசன ஒதுக்கீடுகள், அமைச்சு ஒதுக்கீடுகள், அமைச்சர் தெரிவுகள், முதலமைச்சர் சத்தியப்பிரமாணம், உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணமென தொடர்கதையாக தினம் தினம் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டியாக மாறிவிட்டது. முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில் அவரை நீக்கி முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பெயர் சிலரால் பிரேரிக்கப்பட்ட போதே கட்சிக்குள் கழுத்தறுப்புகள் ஆரம்பமாகிவிட்டன. மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வந்தால் அதனால் கட்சிக்கும் அரசுக்கும் அயல்நாட்டுக்கும் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை அனுமானித்தே அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பதை திட்டமிட்டுத் தவிர்த்தவர்கள் தமது நோக்கத்திற்கு பொருத்தமானவராக விக்னேஸ்வரனைத் தெரிவு செய்திருக்க வேண்டுமென்றே எண்ணத் தோன்றுகின்றது.
தனது தலைமையினதும் தலைமையை இயக்கும் சக்திகளினதும் நோக்கத்தை மாவை சேனாதிராஜா புரிந்து கொண்டாலும் கட்சிகளின் ஒற்றுமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை கருத்தில் கொண்டு முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலிருந்து கண்ணியமாக ஒதுங்கிக்கொண்டு முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு வாக்களிக்க வேண்டுமென்ற பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால் கட்சித் தலைமையின் நோக்கம் அத்துடன் நின்று விடவில்லையென்பது அடுத்தடுத்த காய்நகர்த்தல்களில் தெளிவானது. தமிழ் மக்களின் நாடிபிடித்துப் பார்த்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்ததுடன் பிரபாகரன் மாவீரன் என தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கி இமாலய வெற்றியையும் பெற்ற பின்னர் தனது அரச, அயல்நாட்டு விசுவாச காய்நகர்த்தல்களை கட்சித் தலைமை மேற்கொண்டது. ஒவ்வாரு விடயம் தொடர்பிலும் முடிவுகளை எடுக்க பங்காளிக் கட்சித்தலைவர்களை அழைத்து மோதவிட்டு வேடிக்கை பார்த்தபின் தாம் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த விடயங்களை கட்சித் தலைமை நிறைவேற்றியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த இரு போனஸ் ஆசனங்களில் ஒன்று ஏற்கனவே மக்கள் நல்லாட்சிக்கான இயக்கத்தைச் சேர்ந்த அஸ்மினுக்கு தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில் மீதமிருந்த ஒரேயொரு ஆசனத்துக்காக ஒரு வாரத்துக்கு மேலாக கூடி ஆராய்ந்ததுடன் அது தொடர்பில் மாவட்ட ரீதியாக குழப்பங்கள் ஏற்படவும் கட்சித்தலைமை வழி வகுத்தது. ஒரு போனஸ் ஆசனத்துக்காக கட்சித்தலைமை பிரதேசவாதத்தைத் தூண்டித்து என்றே கூறவேண்டும். அதேபோன்றே அமைச்சர்கள் தெரிவுகளிலும் மாவட்டங்களுக்கிடையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தவும் இடமளித்தது. போனஸ் ஆசன தெரிவு, அமைச்சர்கள் தெரிவில் பிரதேசவாதத்தையும் குழப்பங்களையும் தூண்டிய கட்சித்தலைமை அதன் பின்னர் முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வரன் யார் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்வது என்ற நாடகத்தைத் தொடங்கியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாகவே சத்தியப்பிரமாணம் செய்வது என்பது ஏற்கனவே கட்சித் தலைமையாலும் முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வரனாலும் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரின் சத்தியப்பிரமாணம் தொடர்பில் தினமும் ஒவ்வொரு கதைகள் அவிழ்க்கப்பட்டு தமக்கு வாக்களித்த மக்களை முட்டாள்களாக்கும் வேலைகள் இடம்பெற்றன.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் எந்தக்கட்சியும் சாராத பொதுவேட்பாளர். ஆனால் அவர் இன்று தமிழரசுக்கட்சியின் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கின்றார். அவர்களின் தாளத்துக்கேற்ப ஆடுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழரசுக் கட்சியின் தலைமை தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டு அதற்கான பொறுப்பை முதலமைச்சர் மீது சுமத்தும் போக்கே காணப்படு கின்றது. இதற்கு முதலமைச்சரும் தெரிந்தோ தெரியாமலோ துணை போய்க் கொண்டிருக் கின்றார். கட்சி வேட்பாளர் களுக்கான இட ஒதுக்கீடுகள், போனஸ் ஆசன ஒதுக்கீடு, அமைச்சரவை ஒதுக்கீடு, அமைச்சர்கள் தெரிவு போன்ற விடயங்களில் முதலமைச்சரை முன்னிறுத்தி தனது நோக்கத்தையே தமிழரசுக்கட்சித் தலைமை நிறைவேற்றி யிருக்கின்றது. அதாவது தமிழரசுக் கட்சியின் குழந்தைக்கு முதலமைச்சர் தந்தையாக வேண்டியுள்ளது. போர்க்குற்றவாளியென தமிழ் மக்களால் குற்றம் சாட்டப்பட்டு சர்வதேச விசாரணை கோரும் நிலையில் ஜனாதிபதி முன்பாக சத்தியப்பிரமாணம் செய்யக்கூடாதென முழுத்தமிழினமும் பங்காளிக் கட்சிகளும் விடாப்பிடியாக நின்றபோதும் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு குடும்பத்துடன் அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி முன்பாக விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை தமிழ் மக்களை அதிர்ச்சியும் விசனமும் அடைய வைத்தது.
விக்னேஸ்வரனின் இச்சத்தியப்பிரமாண நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா,பங்காளிக்கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி போன்றோர் பங்கேற்கவில்லை. தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் மட்டும் கலந்து கொண்டார். தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென ஆனந்தசங்கரி பின்னர் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மூலம் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை தமிழ் மக்களிடம் மட்டுமன்றி பங்காளிக் கட்சிகளிடையேயும் கடும் கொதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் அமைச்சரவை நியமனம் தொடர்பில் விக்னேஸ்வரன் எடுத்த அல்லது விக்னேஸ்வரனால் எடுக்க வைக்கப்பட்ட தீர்மானங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பகிரங்க மோதலை ஏற்படுத்தின.
பிரதான கட்சியொன்றுடன் தேர்தலொன்றுக்காக அல்லது ஆட்சி அமைப்பதற்காக ஏனைய கட்சிகள் வைப்பதே கூட்டணி. இதில் தேர்தலாக இருந்தால் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் உரிமை அந்தக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களுக்கு உண்டு. அதேபோல் ஆட்சியமைப்பதாகவிருந்தால் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அமைச்சர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும் அந்தந்தக் கட்சித் தலைவர்கள், செயலாளர்களுக்கே உண்டு. இதுதான் கூட்டணி தர்மம். ஆனால் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் முதலமைச்சரைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சி சர்வாதிகாரப் போக்கிலேயே நடந்து கொண்டுள்ளது. வட மாகாண சபையில் 38 ஆசனங்கள் உள்ள நிலையில் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் அதன் பங்காளிக் கட்சிகளான சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 6, செல்வம் அடைக்கலநாதனின் தமிழீழ விடுதலை இயக்கம் 5, சித்தார்த்தனின் தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள மேலதிகமாக இரு போனஸ் ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.
இந்நிலையில், அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பல சுற்றுப் பேச்சுகளை தமிழரசுக் கட்சி நடத்திய நிலையில் இறுதிப் பேச்சுக்களின் போது பங்காளிக் கட்சித் தலைவர்களை அழைக்காமலேயே முதலமைச்சரின் பெயரில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதற்கிடையில் அமைச்சர்கள் நியமனத்துக்கு பங்காளிக் கட்சிகளிடமிருந்து தகுதியானவர்களை சுயவிபரங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களின் இணக்கமின்றி அவர்களின் சிபாரிசுகள் நிராகரிக்கப்பட்டு பங்காளிக் கட்சிகளில் யார் அமைச்சர் என்ற தீர்மானத்தை சர்வாதிகாரத்தனமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பெயரில் தமிழரசுக் கடசியே அறிவித்தது. இதனையடுத்தே பதவிப் பிரமாண நிகழ்வு பகிஷ்கரிப்பு, தனித்த பதவிப் பிரமாணம், ஊடக அறிக்கைகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் பகையாளிகளாக மாறினர். பங்காளிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அமைச்சுக்களைத் தீர்மானிக்கும் உரிமை பிரதான தமிழரசுக் கட்சிக்கோ அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கோ இருந்தாலும் பங்காளிக் கட்சிகளில் யார் அமைச்சர் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இவர்களுக்கில்லை. அதனை பங்காளிக் கட்சியின் தலைவரோ செயலாளரோ தான் தீர்மானிக்க முடியும். அது அவர்களின் உரிமை. ஆனால் தமிழரசுக் கட்சியின் சர்வாதிகாரத்தால் அந்த உரிமை மறுக்கப்பட்டமை கூட்டணி மரபுக்கு விரோதமானது.
இலங்கை அரசில் பங்காளிக் கட்சிகள் உள்ள நிலையில் அதன் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னுரிமை கொடுப்பதைக் காண முடியும். அண்மையில் 11 பேருக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சர் நியமனங்களில் கூட பங்காளிக் கட்சித் தலைவர்களிடமிருந்தே அவர்களின் கட்சி சார்பில் பிரதியமைச்சர் பதவிக்குப் பெயர்களை பிரேரிக்குமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த கண்ணியம், கூட்டணி மரபுக்கான கௌரவம் கூட தமிழரசுக் கட்சித் தலைமையிடமோ முதலமைச்சரிடமோ இல்லாதது கவலைக்குரியது. அதுமட்டுமின்றி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சகோதரனுக்கு அமைச்சுப் பதவி கேட்டார். ஆனால் தகுதி அடிப்படையில் என்னால் கொடுக்க முடியவில்லையென முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குக்கு கூறியமை அவரின் நீதியரசர் பணிக்கும் முதலமைச்சர் பதவிக்கும் கூட்டணிக் கட்சிகளின் பண்பாட்டுக்கும் பொருத்தமானதல்ல. கட்சித் தலைவர்களிடையே இடம்பெற்ற விடயமொன்றை விக்னேஸ்வரன் பகிரங்கப்படுத்தியமை அவர் தன் பொறுப்பிலிருந்து விலகியமையைக் காட்டுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தன் தம்பிக்கு அமைச்சுப் பதவி கேட்டதை விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதை சரியென யாராவது வாதிடுவார்களேயானால் ஜனாதிபதி முன்பாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமென்பதில் யார் விடாப்பிடியாக நின்றார்கள் என்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தினால் அதனையும் சரியென ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஏனெனில் முதலமைச்சரின் செயலர் இணைப்பாளர் தொடர்பில் சுரேஷ் பிரேமச்சத்திரன் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே அமைச்சர் நியமனத்தில் தமிழரசுக் கட்சியினதோ அல்லது முதலமைச்சரினதோ முடிவுகள் தவறானவை என்பதே பொதுவான கருத்து. அதேவேளை அமைச்சர் தெரிவுகளில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறி பங்காளிக் கட்சித் தலைவர்கள் எடுத்த நடவடிக்கைகளும் நியாயப்படுத்தப்பட முடியாதவை. அதிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எடுத்த முடிவுகளும் பின்னர் அடித்த பல்டிகளும் நகைப்புக்கிடமானவை. அதேபோன்று உறுப்பினர் பதவிப் பிரமாணம் தொடர்பில் பங்காளிக் கட்சிகள் விடுத்த அறிக்கைகளும் அதன் பின்னர் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முறைகளும் வரவேற்கப்படக் கூடியவை அல்ல. மன்னார் மறை மாவட்ட ஆயரின் வேண்டுகோளைக்கூட அவர்கள் உதாசீனம் செய்தமை கவலைக்குரியது. சர்வதேச நாடுகளினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் என நம்பப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்பார்க்காதளவுக்கு இமாலய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வடக்கு மாகாணத் தமிழ் மக்கள் இன்று “இதற்குத் தானா ஆசைப்பட்டோம்’ என்ற வெறுப்பிலும் வேதனையிலும் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி தமிழரசுக் கட்சியினதும் முதலமைச்சரதும் பங்காளிக் கட்சியினதும் கூத்துக்களினால் இன்று தமிழினமே ஏனையவர்களால் கொச்சைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையில் எந்த அதிகாரமும் கிடையாதெனக் கூறியவர்கள் எதற்காக அமைச்சுப் பதவிகளுக்கு இவ்வாறு அடிபட்டுக் கொள்கிறார்கள் என்ற கேள்விகளே இன்று அதிகம்.
வடக்குத் தமிழனின் ஒற்றுமையை, இலட்சியத்தைப் பார்த்து வியந்த சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டினர் கூட இன்று தமிழகக் கட்சிகளின் ஒற்றுமை இது தானா? என கேலி பேசும் நிலைக்கு தமிழினத்தைக் கொண்டு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு இன்னொரு நாள் வடக்கு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டி வரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு மக்கள் கொடுத்த கௌரவம், இமாலய வெற்றி, அத்தனையையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டும் இலட்சக் கணக்கான தமிழர்கள் உடல்களின்மீது கடந்துவந்த வரலாற்றையும் மறந்துவிட்டு கட்சி ஆதிக்கத்திற்காகவும் பதவி மோகத்திலும் கழுத்தறுப்புகளிலும் காட்டிக் கொடுப்புகளிலும் ஈடுபடும் இவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. தமிழினத்தின் இலட்சியத்தை வைத்துக் கொண்டு இவர்கள் சகுனித்தன பகடையாடுகின்றனர்.இலட்சியத்திலிருந்து தவறியவர்களை தமது இதயத்திலிருந்து தூக்கயெறிந்து விடுவதே தமிழ் மக்களின் கொள்கை. இதனை இந்த வருட மாகாண சபைதேர்தல் முடிவுகளில் சிலர் பெற்ற படுதோல்விகள் மூலமும் தெரிந்து கொள்ள முடியும். எனவே தற்போது இலட்சியத்தை கைவிட்டு சுயநல இலக்கினை கையிலெடுத்துக்கொண்டவர்கள் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அடுத்துவரும் சந்தர்ப்பங்களில் அவர்களும் நிச்சயம் தமிழ் மக்களால் தூக்கியெறியப்படுவார்கள்.
No comments:
Post a Comment