தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலட்சிய உறுதியும் உருக்குப் போன்ற ஐக்கியமும் எமது பிரதான பலமாகும்.
30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்ச் சூழல் முற்றாகவே நீங்கி சமாதானமும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது. போரால் அழிவடைந்த வடபகுதி வெகு வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. இலங்கையின் அரச தரப்பினரும் அவர்களின் ஆதரவாளர்களும் வடக்குக் கிழக்கில் எங்கு சென்றாலும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் சொல்லி வருகிறார்கள். அதிலும் வடமாகாண சபைத் தேர்தல் அண்மித்துள்ள இவ்வேளையில் ஜனாதிபதி முதற்கொண்டு அமைச்சர்கள் வரை அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, உதவிக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வுகள் அபிவிருத்திப் பணிகள் என வெவ்வேறு பெயர்களில் மக்கள் சந்திப்புக்களை நடத்தி மேற்படி கருத்துக்களை வலியுறுத்தி வருகின்றனர்.
இவற்றுக்குச் சார்பாக அரச அதிகாரிகளும் இதுவரை வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கு அரசு இருபத்தாறாயிரம் கோடி செலவு செய்துள்ளதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அபிவிருத்தி வளர்ச்சி வீதம் 8.3 வீதமாக இருக்கும்போது வடக்கில் 23 வீதமாக இருப்பதாகவும் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.இவையயல்லாம் கேட்கும்போது காதுகளை மட்டுமன்றி மனதையும் குளிர வைக்கும் இனிமையான வார்த்தைகள். இங்குள்ள யதார்த்த நிலைமையைச் சற்று ஆழமாகப் பார்க்கும் எவரும் இந்த வார்த்தைகளின் போலித்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். எனினும் அரசு அகலிக்கப்படும் வீதிகளாலும் உயரமாகக் கட்டி எழுப்பப்படும் கட்டடங்களாலும் மக்களை ஏமாற்றி இதுதான் அபிவிருத்தி எனவும் உண்மையான சமாதானம் எனவும் நம்பவைக்க முயல்கிறது.
அரசின் அடிவருடிகளாக அரசியல் நடத்தும் ஒரு சில சுயநல அரசியல்வாதிகளும் ஒரு மாயையான விம்பத்தை மக்கள் முன் காட்டி மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளையும் உணர்வுகளையும் மழுங்கடிக்கவும் திசைதிருப்பவும் முயன்று வருகின்றனர்.அரச தரப்பும் அதன் ஆதரவு சக்திகளும் தாங்கள் வழமையை விட அதிகமான ஆசனங்களைப் பெறும் நோக்கத்துடன் அதாவது வட பகுதியில் அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்ற ஒரு தோற்றப்பாட்டை வடக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் ஏற்படுத்துவதற்காக இவ்வாறு பல உத்தியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதைவிட வாகனங்கள், நிர்வாக முறைமைகள் என அரச வளங்களைத் தமது தேர்தல் தேவைகளுக்குப் பயன்படுத்துவது தேர்தல் பணிகளில் அமைச்சு, நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரங்களைப் பிரயோகிப்பது இராணுவத்தினரின் சில தலையீடுகள், மிரட்டல்கள் எனப் பல்வேறு முறைகேடுகளும் அரச தரப்பால் பிரயோகிக்கப்படும். கபே, பவ்ரல், சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் எனப் பலரும் தேர்தல் விதிகள் மீறப்படுதல் தொடர்பான முறைப்பாடுகளைச் செய்தாலும் கூட அவை பட்டியலிடப்பட்டு பத்திரிகைகளில் வெளிவருவதுடன் முடிந்துவிடும். தேர்தல் முடிவுகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. வன்முறைகள், பணப் பரிமாற்றம், விலை பேசப்படல் என்பனவும் தாராளமாக இடம் பெறலாம்.
எப்படியிருப்பினும் அரச தரப்பும் அதன் ஆதரவுச் சக்திகளும் எவ்விதத்திலும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற குறைந்த பட்சம் அதிகபடியான ஆசனங்களை எடுக்கச் சகலவிதமான முறைகேடுகள் உட்படப் பல பகீரத முயற்சிகளில் இறங்குவார்கள்.இங்கேதான் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகவும் பெரிய பொறுப்பு உண்டு. இந்தத் தேர்தலானது இரு எதிர்த்தரப்புகளுக்கிடையே இடம்பெறும் போட்டியில் ஏதோ ஒரு தரப்பு வெற்றி பெறுவது என்ற எல்லையுடன் நின்றுவிடப் போவதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளை எந்தக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பதையும் எமது சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும் எம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடுவது தொடர்பாகவும் நாம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம் என்பதை அரசுக்கு மட்டுமன்றி சர்வதேசத்துக்கும் பிரகடனம் செய்வதாக அமையும்.இந்தத் தேர்தலில் அரச தரப்பு வெற்றி பெறுமானால் தமிழ் மக்கள் அரசு எம்மீது மேற்கொள்ளும் ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொள்கிறோம் என்பதுடன் அரசின் தமிழ் மக்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம் என்றும் அர்த்தமாகிவிடும்.
அதன் அடிப்படையில் தான் விரும்பும் வகையில் மேலும் மேலும் எம்மை அடிமைப்படுத்தவும் எங்கள் மீதான சர்வதேச அக்கறை குறைவடையவும் நேரிடும். அதாவது எங்கள் எந்தப் பிரச்சினையையும் சர்வதேசம் அரசின் மூலமே அணுகும் நிலை உருவாகும்.இதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா? கடந்த பொதுத் தேர்தலின் போது வடக்குக் கிழக்கில் மிக அதிகப்படியான ஆசனங்களை வென்ற காரணத்தால் தான் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அரசோ, சர்வதேசமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அணுகும் நிலை நிலவுகிறது.
அதிக பிரதேச சபைகளைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப் பற்றிய காரணத்தினால்தான் அவற்றைத் தமிழ் மக்களுக்கு விரோதமாகப் பயன்படுத்த முடியாதுள்ளது.எனவே இந்த வடமாகாண சபைத் தேர்தலில் ஒரு ஆசனம் கூட எதிர்த் தரப்புக்கு கிடைக்காத வண்ணம் முழு ஆசனங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைத்தால் அதுவே ஒரு மாபெரும் சக்தியாக எழுச்சிபெறும். விகிதாசாரத் தேர்தலில் அது அவ்வளவு இலகுவானதல்ல. எனினும் மக்கள் அப்படியயாரு முடிவெடுத்தால் அதுவும் கூட சாத்தியமே.
அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுப்பது தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமா அல்லது அரசும் அதன் அடிவருடிகளுமா என்பதைத் தமிழ் மக்கள் ஆழ்ந்த பொறுப் புணர்வுடன் தீர்மானிக்க வேண்டும். அதே வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னுமொரு பெரும் பொறுப்பு உண்டு. 60 ஆண்டு கால உரிமைப் போராட்டத்தில் ஏறக்குறைய 2 லட்சம் மக்களும் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளும் ஐந்நூறுக்கு மேற்பட்ட கரும்புலிகளும் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.
ஏராளமானோர் தங்கள் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. எமது வரலாறு இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் கலந்ததியாக வரலாறு. அற்புதங்களையும் வெற்றிகளையும் ஈட்டிய வீர வரலாறு. அந்த வரலாற்றை முன்னெடுத்துத் தொடரும் பெரும் பொறுப்பு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்ற்றுவதையே இலட்சியமாகக் கொண்ட ஓர் அமைப்பல்ல. ஆனால் தேர்தல்கள் எமது உரிமைப் போராட்டத்தில் ஓர் ஆயுதம் மட்டுமே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலட்சிய உறுதியும் உருக்குப் போன்ற ஐக்கியமும் எமது பிரதான பலமாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது வடமாகாண முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வது வேட்பாளர்களைத் தெரிவு செய்வது போன்ற விடயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளும் சர்ச்சைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியம் தொடர்பான நம்பிக்கையீனத்தையும் குழப்பங்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடியவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக முதலமைச்சர் தேர்வின் போது தமிழரசுக் கட்சியின் ஒரு கிளை விடுத்த பத்திரிகை அறிக்கை பொறுப்பற்றதும் எமது உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையிலானது என்பதை நாம் மறக்கக்கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பாகவும் வெளிவந்த கருத்துக்கள் ஆரோக்கியமானவையல்ல. ஒரு கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுவது இயற்கை. அவை நீண்ட விவாதங்களினூடாகப் பொதுக் கொள்கையின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியவை. அவை சந்திக்கு வருவது அநாகரீகம் மட்டுமல்ல கூட்டமைப்பு தொடர்பான நம்பிக்கையைப் பலவீனப்படுத்தக் கூடியவை.
வேட்பாளர்கள் தெரிவின்போது ஏற்பட்ட சில முரண்பாடுகளின் பிரதிபலிப்பு தேர்தல் பிரசாரங்களின் போதும் வெளிப்படுவது மன வருத்தத்துக்குரியதாகும்.எப்போது ஒருவர் தனது கட்சியின் நலனைக் கூட்டமைப்பின் நலனுக்கும் எமது உரிமைப் போராட்டத்தின் நலனுக்கும் மேலாகக் கருத ஆரம்பிக்கிறாரோ அப்போதே தோல்விகளின் கதவுகளும் திறந்து விடுகின்றன.எனினும் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு, ஏனைய வேட்பாளர்கள் தெரிவஎன்பவற்றில் கட்டப்பட்ட முடிவுகள், நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளமை ஒரு நல்ல அம்சமாகும்.
எனவே தமிழ் மக்கள் தமது தேசியக் கடமையை உணர்ந்து செயற்பட வேண்டிய அதே வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே இன்றைய பிரதான தேவையாகும்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுப்பது தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமா அல்லது அரசும் அதன் அடிவருடிகளுமா என்பதைத் தமிழ் மக்கள் ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் தீர்மானிக்க வேண்டும்.
No comments:
Post a Comment